பெரியார் எழுத்துகள் எனக் குறிப்பதை விடப் பெரியாரின் படைப்புகள் எனக் குறிப்பது சரியாக இருக்குமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.3: பெரியார் எழுத்துகளை வெளியிடுவது தொடர்பாக பெரியார் சுயமரியாதை பிரசார மையத்தின் செயலர் கி. வீரமணி அளித்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. குடியரசு இதழில் பெரியார் எழுதியவற்றை பெரியார் திராவிடர் கழகத்தினர் வெளியிடுவதற்கு உரிமை இல்லை என்று கூறி கி. வீரமணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதே வழக்கில் பெரியாரின் எழுத்துகளை வெளியிடுவதற்கு பெரியார் திராவிடர் கழகத்தினருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி இடைக்கால மனு தாக்கல் செய்தார். இந்த இடைக்கால மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி கடந்த 27.7.09-ல் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து வீரமணி செய்த மேல்முறையீட்டை நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் கடந்த 9.6.10-ல் தள்ளுபடி செய்தது. பெஞ்சின் உத்தரவை எதிர்த்து வீரமணி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனுவை (எஸ்.எல்.பி.) தாக்கல் செய்தார். அதில் உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, உச்ச நீதிமன்றம் 26.11.10-ல் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில், வீரமணி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ""நான் ஏற்கெனவே தொடர்ந்த வழக்கில் எதிர் மனுதாரர்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் அவர்கள் சில புதிய விஷயங்களைத் தெரிவித்துள்ளனர். எனவே, அது தொடர்பாக, எனது மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார். இந்த மனுவை நீதிபதி டி. மதிவாணன் விசாரித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். "பெரியார் இறந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடைய எழுத்துகள் பொதுமக்களுக்கு உரியன என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் பெரியார் திராவிடர் கழகத்தினர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி, ""மனுதாரர் தான் கூற விரும்பும் விளக்கங்களை தனியாக அளிக்கலாம். ஆனால், அவரை மனுவில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு செய்தால் அது வழக்கின் தன்மையை மாற்றிவிடும். அது எதிர் மனுதாரர்களைப் பாதிக்கும்'' என்று சரியாகக் கூறியுள்ளார். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. மனுதாரர் வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று நீதிபதி மதிவாணன் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக