பிறந்தால் ஆண் குழந்தை பிறக்கும். ஒரு வேளை ஆண் குழந்தை இல்லை என்றால் க்ணடிப்பாகப் பெண்குழந்தைதான் பிறக்கும் எனச் சொல்வதற்குத் தண்டச்செலவு ஆணையம் தேவைதானா? அரசின் நோக்கம் சிக்கலை ஒத்திப் போடுவதாக உள்ளதே தவிர தீர்வு காண்பதாக இல்லை. இதற்கு ஆணையம் எனக் கண்துடைப்பு வேண்டா. ஆந்திராவில் உள்ள தமிழ்ப் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைத்தால் எஞ்சிய பகுதி தெலுங்கானாவாக மாறிவிடும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
புதுதில்லி,ஜன.6: ஆந்திர மாநிலத்தைப் பிரிக்காமல் இருப்பதே நல்லது என்று தனி தெலங்கானா கோரிக்கை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது. ஆயினும் தனி தெலங்கானா கோரி கிளர்ச்சி நடத்துவோர் இந்த யோசனையை அறவே ஏற்க மாட்டார்கள் என்பதால் இந்த யோசனையையும் சேர்த்து மொத்தம் 6 யோசனைகளை கமிஷன் பரிந்துரை செய்திருக்கிறது. நுணுக்கமாகப் பார்த்தால் 6 யோசனைகளையுமே அமல் செய்வதில் சிக்கல் வரும் என்பதும் மாநிலத்தின் நலனுக்கு நல்லதல்ல என்றும் முதல் நோக்கில் புரிகிறது. தங்கள் பகுதி சமூக, பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காணவில்லை என்பதற்காக (அது உண்மைதான் என்றாலும்) ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதில் ஒரு பகுதிக்குத் தனி மாநில அந்தஸ்து கோருவதும் அதை அனுமதிப்பதும் முறையல்ல என்று கருதுவதை ஸ்ரீ கிருஷ்ணா கமிஷன் அறிக்கை பதிவு செய்கிறது. மொழிவாரி மாநிலங்கள் என்ற கோரிக்கையை ஏற்று மாநிலங்களைப் பிரித்த பிறகு மேலும் மேலும் இப்படி பிரித்துக்கொண்டே போவது தவறான கோரிக்கைகளுக்கு வழி வகுத்துவிடும் என்று கமிஷன் எச்சரிக்கிறது. தன்னுடைய பரிந்துரைகள் காரணமாக ஆந்திரத்தில் அமைதி குலையவும் தனி தெலங்கானா கோரிக்கையாளர்கள் தங்களுடைய கிளர்ச்சியைத் தீவிரப்படுத்தவும் வாய்ப்பு இருந்தாலும் ராயல சீமை, கடலோர மாவட்டங்களில் குடியிருப்பவர்களும் தெலங்கானா பகுதிகளில் குடியிருப்பவர்களும் எல்லா பகுதிகளின் சமமான முன்னேற்றத்துக்கு உறுதியான வழி காணப்படும் என்ற உத்தரவாதம் கிடைத்தால், பிரிவினைக்கு எதிராகக் குரல் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையைத் தெரிவிக்கிறது அறிக்கை. அத்துடன் தெலங்கானா, ராயல சீமை, கடலோர மாவட்டங்கள் என்று அனைத்துமே சேர்ந்து இருந்தால்தான் மாநிலத்தின் வளர்ச்சி மேலும் வேகம் பெற முடியுமே தவிர மாநிலத்தை இரண்டாகப்பிரித்தால் இந்த வளர்ச்சி மேலும் பின்னடைவைத்தான் சந்திக்கும் என்று அறிக்கை எச்சரிக்கிறது. முதல்வர், துணை முதல்வர் பதவிகள்: தெலங்கானாவைச் சேர்ந்தவருக்கு முதல்வர் பதவியையும் ராயலசீமை பகுதியைச் சேர்ந்தவருக்கு துணை முதல்வர் பதவியையும் அளித்தும்கூட எந்தப் பகுதியையும் புறக்கணித்துவிடவில்லை என்ற நம்பிக்கையைத் தோற்றுவிக்கலாம் என்ற யோசனையையும் கமிஷன் பரிந்துரை செய்திருக்கிறது. தீர்வு காண 6 வழிகள் 1. ஆந்திரம் இப்படியே நீடிப்பதே சிறந்தது: ஆந்திர மாநிலம் பிரிக்கப்படாமல் இப்படியே நீடிப்பதே அதன் தெலங்கானா, ராயல சீமை, கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நல்லது. தெலங்கானா பகுதியின் வளர்ச்சிக்கு சட்டப்பூர்வ பிராந்திய கவுன்சில் போன்ற அமைப்பை ஏற்படுத்தி வளர்ச்சி திட்டங்களைத் தீட்டுவது, நிறைவேற்றுவது, நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் பின்தங்கிய நிலைமையை மாற்ற முடியும். ஆந்திரத்தை ""முன்னேற்ற இதுவே சிறந்த வழி''. 2. வேறு வழியே இல்லை என்றால் ஆந்திர மாநிலத்தை (ராயல) சீமா ஆந்திரா, தெலங்கானா என்று இரு தனித்தனி மாநிலங்களாகப் பிரித்துவிடலாம். இதனால் தனி மாநில கோரிக்கையைப் பூர்த்தி செய்தோம் என்ற சாதனை மட்டுமே மிஞ்சும். சமூக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலைமை இந்த ஒரு நடவடிக்கையாலேயே மாறிவிடாது. 3. (ராயல) சீமா ஆந்திரத்தையும் தெலங்கானாவையும் பிரித்துவிட்டு இரு மாநிலப் பகுதிகளுக்கும் தனித்தனி தலைநகரங்களை உருவாக்க அல்லது தேர்வு செய்யச் சொல்லலாம். ஹைதராபாத் நகரம் இப்போது தகவல் தொழில்நுட்பக் கேந்திரமாக உருவெடுத்திருப்பதாலும் ஆந்திரத்தின் அனைத்துப் பகுதி மக்களுடன் பிற மாநிலத்தவர்களும் கணிசமாக குடியேறியிருப்பதாலும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய்களை இங்கு முதலீடு செய்திருப்பதாலும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்குத் தேவையான எல்லா அடித்தள கட்டமைப்புகளும் இங்கு இருப்பதாலும் ஹைதராபாதை மட்டும் மத்திய ஆட்சிக்குள்பட்ட பகுதியாக (யூனியன் பிரதேசமாக) அறிவித்துவிடலாம். அதன் நிர்வாகத்தை, பாதுகாப்பை மத்திய அரசு நேரடியாக தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டுவிடலாம். 4. (ராயல) சீமா ஆந்திரா, தெலங்கானா என்ற இரு பகுதிகளைப் பிரித்துவிடலாம். ஹைதராபாத் நகரப் பகுதியுடன் அருகில் உள்ள பல நிலப்பகுதிகளை இணைத்து மத்திய ஆட்சிக்குள்பட்ட பகுதியாக அறிவிக்கலாம். நலகொண்டா மாவட்டம் வழியாக குண்டூர் மாவட்டம் வரையிலும் நில எல்லையைச் சேர்க்கலாம். அதே போல, மஹபூப்நகர் மூலம் கர்நூல் மாவட்டம் வரையில் (ராயல சீமையில் உள்ள) பகுதியை ஹைதராபாதுடன் இணைக்கலாம். 5. தெலங்கானாவையும் (ராயல) சீமா ஆந்திராவையும் பிரித்துவிடலாம். தெலங்கானாவுக்கு ஹைதராபாதைத் தலைநகரமாக்கிவிடலாம். (ராயல) சீமா ஆந்திரா புதிய தலைநகரைத் தேர்வு செய்துகொள்ளட்டும். 6. ஆந்திரத்தைப் பிரிக்காமல் இப்போதுள்ளபடியே ஒரே மாநிலமாக வைத்துக்கொள்ளலாம். தெலங்கானாவின் பின் தங்கிய பகுதிகளை முன்னேற்ற அரசியல் சட்டம் அளித்துள்ள வழிகளின்படி, சட்டப்படி உருவாக்கப்பட்ட நிர்வாக அமைப்புகளைக் கொண்டு பிராந்திய கவுன்சிலை ஏற்படுத்தலாம். இதற்கு போதிய நிதியை ஒதுக்குவதுடன் செயல்படுவதற்கான அதிகாரங்களையும் வழங்கலாம். இப்படிச் செய்வதன் மூலம் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சிக்கு தனி முக்கியத்துவம் அளிக்கலாம். இவ்வாறு உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பி.என். ஸ்ரீ கிருஷ்ணா தலைமையிலான கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதில் 5 பேர் உறுப்பினர்கள். இந்தக் கமிஷன் 2010-ல் நியமிக்கப்பட்டது. கடந்த வாரம் மத்திய அரசிடம் இந்தக் கமிஷன் தனது பரிந்துரையை அளித்தது. பரிந்துரை 2 தொகுதிகளாக அளிக்கப்பட்டிருக்கிறது. மொத்தம் 461 பக்கங்கள் இருக்கின்றன. உணர்ச்சிமயமானது: தெலங்கானா கிளர்ச்சி என்பது பல்லாண்டுகளாக ஆந்திரத்தில் நடைபெற்றுவருகிறது. இது உணர்ச்சிமயமானது. இந்த கோரிக்கையை மறுப்பதால் மாவோயிஸ்ட் இயக்கம் வலுப்பெறும் ஆபத்தும் இருக்கிறது. தனி மாநில கோரிக்கையை நியாயமற்றது என்று கூறிவிட முடியாது. சமூக, பொருளாதார ரீதியாக ஆந்திரத்தின் பிற பகுதிகளைவிட தெலங்கானா பகுதி பின்தங்கிதான் இருக்கிறது. எனவே ஆந்திரத்தைப் பிரிக்கக்கூடாது என்ற முடிவை தெலங்கானா ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்க்கக்கூடும். ஆட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் பொறுமையாகவும் திறமையாகவும் கிளர்ச்சியாளர்களைக் கையாள வேண்டும். அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் அரசியல் நடவடிக்கைகள் அமைந்தால் இந்த கோரிக்கையை ஆதரிப்பவர்களும் மனம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கமிஷனின் அறிக்கை கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக