சாலையும் விரைவும் புதியனவாக இருந்தாலும் அலட்சியம் என்பது என்றும் தொடரும் பழைய தொடர்கதைதான் என நன்கு உணர்த்துகிறது தலையங்கம்.
பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஆண்டின் தொடக்கத்திலேயே இரண்டு விபத்துகள் படிப்பவர் நெஞ்சை வலிகொள்ளச் செய்வதாக இருந்தன. ஜனவரி 1-ம் தேதி, இரண்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருப்பதிக்குச் சென்று கொண்டிருந்த வேன், கிருஷ்ணகிரி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது அதிகாலை 2 மணியளவில் மோதியதில், புதுமணத் தம்பதி உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.ஜனவரி 2-ம் தேதி தொப்பூர் அருகே, சபரிமலைக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் பயணம் செய்த கார், நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியதில் 9 பேர் இறந்தனர்.இந்த இரண்டு சம்பவங்களும் அதிகாலையில் நிகழ்ந்துள்ளன என்பதும், இரண்டுமே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதால் நேர்ந்த விபத்துகள் என்பதும்தான், இந்த விபத்துகள் ஏன் நடக்கின்றன என்பதை உணர்த்துவதாக இருக்கின்றன. இந்த இரண்டு விபத்துகள் மட்டுமல்ல; நாற்கரச் சாலைகளில் வாகனங்கள் வருவதற்கும் போவதற்கும் தனித்தனியாக மிக அகன்ற சாலைவசதி இருக்கும்போது, இத்தகைய விபத்துகள் லாரி ஒட்டுநர்களின் பொறுப்பற்ற தன்மையால் நிகழ்கின்றன என்பதுதான் உண்மை.இவர்கள் தேநீர் அருந்துவதற்காக வாகனத்தை நிறுத்திவிட்டுச் சென்றார்கள் என்ற ஒரே காரணத்துக்காக, இந்த வழக்கில் இந்தியப் போக்குவரத்து வாகனச் சட்டத்தின்படி இவர்கள் குற்றமற்ற அப்பாவிகளாக எந்தவித அபராதமோ தண்டனையோ இல்லாமல் விடுவிக்கப்படக்கூடும். ஆனால் இந்த ஓட்டுநர்கள் இந்த மரணத்துக்குப் பொறுப்பேற்கும் அளவுக்குக் குற்றம் புரிந்தவர்கள் என்று நாம் துணிந்து சொல்லலாம்.நாற்கரச் சாலையில் எங்கு வேண்டுமானாலும் வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்ல முடியாது. தேநீர் கடையையும், பஞ்சாபி தாபாவையும், அந்நிய மதுபானக்கடையையும் கண்ட மாத்திரத்தில் நாற்கரச் சாலையில் ஓரம் கட்டுவதற்கு எந்த லாரிக்கும் அனுமதியில்லை. இந்த லாரிகள் "சர்வீஸ் லேன்' எனப்படும் சாலையில் இறக்கப்பட்டு நிறுத்தப்பட வேண்டுமே தவிர, நாற்கரச் சாலையில் இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் உள்ள 7,000 கி.மீ. தொலைவுக்கான நாற்கரச் சாலைகள் முழுவதிலும் பார்த்தோமேயானால், நாற்கரச் சாலையிலேயே ஓரங்கட்டப்படும் லாரிகள், கார்கள்தான் அதிகம். நெடுஞ்சாலைப் பாதுகாப்புப் படை இவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்ய வேண்டும். விபத்து நடந்தால், சாலையின் குறுக்கே நிறுத்தியதற்காக இவர்கள் மீது குற்றத்தைப் பதிவுசெய்து தண்டனை பெற்றுத்தரவும் வேண்டும். நாற்கரச் சாலையில் குறிப்பிட்ட தூரங்களில், வாகனங்கள் "சர்வீஸ்' சாலையில் இறங்கி ஏற வசதியுள்ள இடங்களில் மட்டுமே தேநீர் மற்றும் உணவகங்கள் இரவு நேரத்தில் திறந்திருக்கலாம் என்பதைக் கட்டாயமாக்குவதும்கூட மிகப்பெரும் பயன் விளைவிக்கும். நிறுத்தப்படும் லாரிகளில் மிகச் சிலவே, சிவப்பு விளக்குகளை எரியச் செய்து நிறுத்தப்படுகின்றன. பல வாகனங்கள் இதைச் செய்வதில்லை. "ரிப்ளக்டர்' மூலம்தான் வாகனம் நிற்பதை அறிய முடியும். பெரும்பாலான நேரங்களில், முன்னால் ஒரு வாகனம் சென்றுகொண்டிருக்கிறது என்ற தோற்றத்தையே இவை உண்டாக்குவதால், வேகத்தைக் கட்டுப்படுத்தாமல் மிக அருகில் வந்த பிறகுதான் வாகன ஓட்டிக்கு அந்த லாரி நிறுத்தப்பட்டிருப்பதே புரியும் நிலைமை. அதற்குள் விபத்து நிகழ்ந்துவிடுகிறது.நாற்கரச் சாலையில் ஒரு லாரி பழுதாகி நின்றால், சாலையில் அங்காங்கே பொருத்தப்பட்டுள்ள தொலைபேசி மூலம் சுங்கச் சாவடிக்குத் தெரிவித்து, அதை இடையூறு இல்லாத இடத்துக்கு அகற்ற வேண்டும். இதற்கான விழிப்புணர்வும் லாரி ஓட்டுநர்களிடம் இல்லை. பழுதான லாரி என்பதை மற்ற வாகனங்கள் உணரும் வகையில், சிவப்பு விளக்கு மட்டுமன்றி, நீல வண்ண விளக்குகளையும் எரியச் செய்வதன் மூலம் இந்த எச்சரிக்கையையும் மேலும் வலுவானதாக மாற்ற முடியும். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் நாற்கரச் சாலைகள் தோன்றாத நேரம். அப்போது வெளிநாடுகளில் அடிக்கடி சாலை விபத்துகளில் இந்தியர்கள் இறந்துபோய் அவர்களின் சடலங்கள் விமானத்தில் வந்து இறங்குவது நிகழ்ந்தன. அப்போது அரபு நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு பேராசிரியர் இதுபற்றிக் கூறியது இதுதான்:இந்தியர்களால் எதிரே வரும் வாகனத்தின் வேகத்தை நிதானிக்க முடிவதில்லை. இந்தியாவில் சாலை வசதி இல்லை என்பதால் அதிகபட்சம் நமது வாகனங்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் வரும். ஆனால் இங்கிலாந்திலோ, அமெரிக்காவிலோ, அரபு நாடுகளிலோ நிலைமை அப்படியல்ல. அங்கே நெடுஞ்சாலை அகலமானது. போக்குவரத்து நெரிசலும் இருக்காது. மணிக்கு 100 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில்தான் வாகனங்கள் வந்துகொண்டிருக்கும். தொலைவில் வரும் காரின் உருவத்தின் அளவை வைத்து, தொலைவைக் கணித்து விடுவார்கள். ஆனால், வேகத்தைக் கணிக்காமல் சாலையில் இறங்குவார். ஆனால் அதற்குள் வாகனம் வந்து மோதிவிடும். அயல்நாட்டில் இருக்கும் அதே சாலை வசதிகள் இன்று இந்தியாவுக்கு வந்துவிட்டன. நாற்கரச் சாலைகளில் 120 கி.மீ.க்கும் குறையாத வேகத்தில் கார்கள் பறக்கின்றன. ஆனால் இந்திய வாகன ஓட்டுநர்களின் கணிப்புகளும், வாகனத்தை ஓட்டும் பாணியும் இப்போதும் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் ஓட்டிய அதே நிலையிலிருந்து மாறவே இல்லை. அவர்கள் இந்த வேகத்துக்குப் பழகவில்லை என்பதைத்தான் இந்த விபத்துகள் காட்டுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக