தறகாலத் தமிழ் என்ற போர்வையில் டீச்சர்,சார் முதலான அயற்சொற்களை யெலலாம் தமிழ் என இவ்வகராதியில் காட்டியுள்ளனர். இது தமிழுக்குச் செய்யும் அநீதியாகும். உடனே மறு பதிப்பிலாவது இதனைக் களைய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தமிழில் வெளிவந்து அனைவரது பாராட்டுகளையும் பெற்ற, கிரியா வெளியீடாகிய "தற்காலத் தமிழ் அகராதி' தற்போது பார்வையற்றவர்களுக்காக "பிரெய்ல்' புத்தகமாக வெளிவருகிறது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. இத்தனை காலம் இவர்களுக்கு இத்தகைய அகராதி இல்லை என்பது ஆச்சரியம் தருவதுடன், இதுபற்றி ஏன் அரசின் கவனத்துக்குக் கொண்டுவரப்படவில்லை என்று வேதனையாகவும் இருக்கிறது. இதுவரையிலும், பார்வையற்றோர் சங்கங்கள் சார்பில் அவரவர்களாக உருவாக்கிய சில இன்றியமையாத சொற்களின் விளக்கமாக சில ஏடுகள் வந்திருந்தாலும், அவை பாடத்திட்டம் சார்ந்ததாக மட்டுமே இருந்துள்ளன. கல்விச்சூழலுக்கு வெளியே, பார்வையற்றவர்களுக்காகத் தனியாக ஒரு மொழி அகராதி இதுவரை இல்லை. இந்தியாவில் முதல்முறையாக தமிழ் மொழியில்தான் இத்தகைய விரிவான மொழி அகராதி வெளிவருகிறது என்று கூறப்படுகிறது. தற்போது இந்த அகராதி மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது என்பது வருத்தம் தரும் செய்தி. இந்த நூலைப் பெறவேண்டுமானால், ரூ.15,000 பணம் செலுத்தினால் மட்டுமே முடியும் என்று தெரியவரும்போது, இந்த நிதிச்சுமை முழுவதையும் ஏன் தமிழக அரசே ஏற்கக்கூடாது என்று தோன்றுகிறது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் மிக அற்புதமான பதிப்பாக சங்க இலக்கியம் முழுவதும் கொண்ட, தரமான தாளில் அச்சிடப்பட்ட தொகுப்பை ரூ.300க்கு வெளியிட்டது. இந்தப் பதிப்பு மற்ற சாதாரண காலகட்டத்தில் வெளியிடப்படுமேயானால், குறைந்தபட்சம் ரூ.3000 ஆகும். இதற்காக தஞ்சைப் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அதே நேரத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது, பார்வையற்றவர்களுக்காக இத்தகைய தமிழ் - தமிழ் - ஆங்கிலம் அகராதி முயற்சியைச் செய்திருந்தால் எத்தனை சிறப்பாக இருந்திருக்கும்! இனியும்கூட அரசு தாமதிக்காமல் இதைச் செய்துவிட முடியும். இந்த "பிரெய்ல்' அகராதிகளைப் பொது நூலகங்கள் அனைத்திலும் அரசு வாங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், அகராதியில் ஒரு சொல்லின் பொருளை அறிய, பார்வையற்ற ஒருவர் நூலகம் செல்ல வேண்டும் என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத அவலநிலை. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பார்வையற்ற மாணவர்கள் சுமார் 30,000 பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் ஒரு "பிரெய்ல்' தமிழ் அகராதி வழங்குவது - அரசு மனது வைத்தால் இலவசமாக வழங்குவது அத்தனை கடினமான செயல் அல்ல. வளர் கல்வித் திட்டத்தில் ஒவ்வொரு பள்ளியிலும் மாற்றுத் திறனாளிக்கான கருவிகள், பயன்படு பொருள்கள் வாங்கிவைக்கத் தனி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. இந்தத் தமிழ் அகராதியை, அந்த நிதியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பள்ளியிலும் "பிரெய்ல்' அகராதி வாங்கி வைத்தல் சாத்தியம் என்று சர்வதேசப் பார்வையற்றோர் கல்விக் கழகத்தினர் கருத்துத் தெரிவிக்கின்றனர். தற்போது சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.1.75 கோடியுடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கருவிகள் வாங்கித் தருவதற்கென்றே தமிழக முதல்வர் ரூ. 5 லட்சத்தை கூடுதல் நிதியாக அறிவித்துள்ளார். அந்த நிதியைக் கொண்டு, அவரவர் தொகுதியில் உள்ள பார்வையற்ற மாணவர்களுக்கு இந்தத் தமிழ் அகராதியை அரசு வழங்கட்டுமே!. பார்வையற்றோருக்கான "பிரெய்ல்' புத்தகம் தயாரிப்பு மிகப்பெரிய செலவு வைப்பதாக இருக்கிறது. இதில் அடிப்படைத் தேவையான தரமான கெட்டித்தாள் செலவு, புத்தகத் தயாரிப்பு செலவில் பாதியாகும். மீதமுள்ள செலவு "பிரெய்ல்' முறையில் ஒளிஅச்சு செய்தல், அச்சிடல் ஆகியவற்றால் நேர்கிறது. ஆகவே இதன் செலவு கூடுதல் என்றாலும் அதைப் பற்றி கவலைப்படாமல், குறைந்தபட்சம் கல்விபயிலும் மாணவர்களுக்காகிலும் இலவசமாகக் கிடைக்கச் செய்தல் வேண்டும். பார்வையற்றோருக்காக தற்போது ஒலி நூல்கள் (ஆடியோ புக்ஸ்) தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிகபட்சமாக கர்நாடகத்தில் உள்ள "மித்ரஜோதி' என்கிற அமைப்பு அதிக அளவில் அனைத்து மொழிகளிலும் இந்த ஒலிநூல்களை வழங்குகிறது. இவர்கள் தமிழிலும் ஒலிநூல் தயாரித்து வழங்குகிறார்கள். இருப்பினும், தமிழ்நாட்டில் தமிழ் இலக்கியம் மற்றும் தற்காலத் தமிழ் இலக்கியம் ஆகியவற்றைப் பார்வையற்றோரும் கேட்டு மகிழும் வகையில் ஒலிநூல்கள் வெளிவருவதில்லை. ஆங்கிலத்தில் சில நூல்களை ஒலிநூல்களாக "சிடி'யில் விற்பனை செய்கிறார்கள். படிக்க முடியாதவர்கள் அந்த நூல்களைக் கேட்டு முடிக்கலாம். ஆனால் அத்தகைய நிலை தமிழ்நாட்டில் உள்ள பார்வையற்றோருக்கு இல்லை. அவர்கள் பாடப்புத்தகங்களை மட்டுமே ஒலிநூல்களாகப் பெறமுடிகிறது. மற்ற தமிழ் இலக்கியங்களை அவர்கள் அறியும் வாய்ப்பில்லை. சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்கணக்கு நூல்கள், பாரதியார் கவிதைகள்கூட ஒலி நூல்களாக வழங்கப்படலாம். இதற்கான தயாரிப்புச் செலவு குறைவு என்பதுடன், ஆயிரக்கணக்கான குறுவட்டுகள் தயாரிப்பு எளிது. மேலும், தற்போது "சிடி பிளேயர்' மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. தற்போது ஒலிநூல் என்கிற அளவில் முழுமையாகக் கிடைக்கக் கூடிய ஒரே இலக்கியம் - நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்தான். திருமலை - திருப்பதி தேவஸ்தானம் இந்தக் குறுவட்டுகளை வெளியிட்டுள்ளது. இதுபோல் தேவாரம், சிலப்பதிகாரம், பாரதியார் கவிதைகள் எல்லாமும் வரட்டுமே! பார்வை உள்ளவர்களும் கேட்டுப் பயன்பெற ஒரு வாய்ப்பாக அமையும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக