தாய்நாட்டு விடுதலைக்காகப் போரிடுபவர்களை அழித்து விட்டாலும் தலைவர்களைச் சிறை செய்து விட்டாலும் அமைதி திரும்பும் என்ற நோக்கில் கூட்டுப்படு கொலைகளுக்கு உடன்பட்டு விட்டு இப்பொழுது நீலிக்கண்ணீர் விடுவதால் என்ன பயன்? தமிழ் நாட்டு மீனவர்களைக்கூடக் காப்பாற்ற வழியின்றிக் கவலைதான் தெரிவிக்க முடிகின்றது என்றால் அதற்கொரு அரசு தேவைதானா? என்றுதான் மக்கள் உள்ளங்களில் எழுகின்றது .எனவே. தேர்தல் நோக்கில் பார்க்காமல் மடல்கள் அனுப்பாமல் முதலைக்கண்ணீர் விடாமல் மிக மிக மிகக் குறுகியக்காலக் கெடு வைத்து அனைத்துச் சிக்கல்களையும் தீர்கக வேண்டும். இல்லையேல்அமைதி காத்தால் போதுமானது.
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.7: இலங்கையில் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அரசியல் தீர்வுக்கு ஆரம்பகட்ட முயற்சிகள்கூட மேற்கொள்ளாமல் இருப்பதும் கவலையளிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பர்னாலா வெள்ளிக்கிழமை ஆற்றிய உரை: சிந்திய கண்ணீரும், செத்து மடிந்த உயிர்களும் போதாது என்று இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் இருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல், தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இதில் ஆரம்பகட்ட முயற்சிகள் கூட இதுவரை மேற்கொள்ளாமல் இருப்பது தமிழக அரசுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதும் மிகுந்த கவலையளிக்கிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் துயரைப் போக்கவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக