அரசாணை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ௨௦ % தருவதன் மூலம ஆங்கில வழியில் படித்தவர்களுக்கு ௮௦ % தரும் தவறான ஆணை. இந்த ஆணையைக் கூடத் தடை பெறாத வகையில் பிறப்பிக்க அதிகாரிகள் தவறி விட்டார்கள். நீதிபதியும் தடை விதிக்காமல் வழக்கினை மட்டும் நடத்த இசைவளித்திருக்கலாம். உடனே அரசு தலையிட்டுத் தடையை நீக்க வேண்டும். தமிழ் அமைப்புகளும் தங்களை இணைத்துக் கொண்டு வாதாடி வெற்றி பெறலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன. 7: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத முன்னுரிமை அளிக்கும் அரசின் உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. சென்னை மணலியைச் சேர்ந்த எம்.ஆர். விஜயலட்சுமி என்பவர் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்கு தொடுத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது: தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 20 சதவீத முன்னுரிமை அளிப்பது தொடர்பாக தமிழக அரசு கடந்த 30.9.10-ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை சட்ட விரோதமானது. தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் போன்றவற்றில் ஆங்கில மொழியே பயிற்று மொழியாக உள்ளன. தவிர, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, கல்லூரிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் உள்ளன. இந்த நிலையில், அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதென்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சரத்துகள் 14, 16 ஆகியவற்றுக்கு எதிரானது. அரசின் உத்தரவால் ஆங்கில வழியில் படித்த பலர் பாதிக்கப்படுவார்கள். அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜோதிமணி முன்பு கடந்த டிசம்பர் 22-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்துக்கு தள்ளி வைத்திருந்தார். அந்த வழக்கு இப்போது நீதிபதி வினோத் கே. சர்மா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜனவரி 19-ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக