செவ்வாய், 4 ஜனவரி, 2011

entrance exam to medical education: மருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: என்ன செய்யப் போகிறார் கருணாநிதி? ஜெயலலிதா கேள்வி

சரியான வினாக்கணைகளைச் சமாளிக்க முதலவர் உடனே நடவடிக்கை எடுத்து பொதுத் தேர்வு வேண்டா என்னும் தமிழக அரசின நிலைப்பாட்டை நிலை நிறுத்த வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ருத்துவப் படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு: என்ன செய்யப் போகிறார் கருணாநிதி? ஜெயலலிதா கேள்வி

First Published : 04 Jan 2011 12:00:00 AM IST


சென்னை, ஜன. 3: மருத்துவப் படிப்பில் சேர அகில இந்திய அளவிலான பொது நுழைவுத் தேர்வை தடுக்க முதல்வர் கருணாநிதி இனி என்ன செய்யப் போகிறார் என்று  அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.  இது குறித்து ஜெயலலிதா திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:  2011 - 2012-ம் கல்வி ஆண்டில் இருந்து மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வை நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதைத் தடுத்து நிறுத்த முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மாதம் வலியுறுத்தி இருந்தேன்.  நுழைவுத் தேர்வு குறித்து எல்லா மாநிலங்களுடனும், மருத்துவக் கல்வியாளர்களுடனும் விரிவாக விவாதித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக அப்போது கருணாநிதி கூறினார்.  நுழைவுத் தேர்வின் வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 22.11.2010 அன்று மத்திய அரசுக்கு தமிழக அரசின் கருத்து அனுப்பப்பட்டு விட்டது எனவும் குறிப்பிட்டார்.  வரும் 2011-2012 கல்வியாண்டில் இப்போது உள்ள நிலையே தொடர்வதற்கு தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது என்றும் எனக்கு பதிலளிக்கும் விதத்தில் கருணாநிதி கூறியிருந்தார்.  மேலும், எதையும் புரிந்து கொண்டு பேச வேண்டும் என்றும் கருணாநிதி தெரிவித்திருந்தார். புரிந்து கொண்டு யார் பேசியது புரியாமல் யார் பேசியது என்பது இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.  எம்.பி.பி.எஸ். மருத்துவப் படிப்புகளில் இனி சேர வேண்டுமானால் மாணவர்கள் தேசிய அளவில் நடத்தப்படும் தகுதி, நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, அது இந்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டு விட்டது. இதே முறைதான் முதுநிலை மருத்துவப் படிப்புக்கும் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுதான் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு எடுத்த நடவடிக்கை. இதன் மூலம் ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பு பாதிக்கப்படும். மேலும், தேசிய நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாத எந்த மாணவரையும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்க்க அனுமதி இல்லை என்றும் இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதன் மூலம் இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வருமோ என்ற ஐயமும் ஏழை, எளிய மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது.  உண்மையிலேயே ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் மீது கருணாநிதிக்கு அக்கறை இருந்திருக்குமானால், இந்தச் சட்டம் வருவதற்கு முன்பே அல்லது என்னுடைய அறிக்கை வெளிவந்த பிறகாவது, மத்திய அரசில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்தச் சட்டம் வருவதைத் தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்.  ஆனால் கருணாநிதி அதைச் செய்யவில்லை. இதன் விளைவாக தமிழக மாணவர்களுக்கு இப்போது மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது கருணாநிதி என்ன செய்யப் போகிறார்? உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப் போகிறாரா?  இனிமேல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது என்பது தும்பை விட்டுவிட்டு வாலைப் பிடிப்பது போன்ற செயலாகும். இதன் மூலம் தமிழக மக்களுக்கு மன்னிக்க  முடியாத துரோகத்தை கருணாநிதி செய்துள்ளார். இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உடனடியாக மத்திய அரசிடம் மன்றாடி, இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இந்தத் துரோகச் செயலுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக