ஆங்கிலேய அடிமை ஆட்சியில் ஆங்கிலேய அரசு சார்பாக ஆளுநர் உரையாற்றியது சரிதான். மக்களாட்சியில் அரசின் அறிக்கையை ஆளுநர் வாசிப்பதை விட முதல்வரே வாசிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். ஆளுநர் பொதுவாகப் பேசிச் சட்ட மன்றத்தைத் தொடங்கி வைத்தால் போதுமானது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன.7: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஆளுநர் பர்னாலாவின் உரையுடன் இன்று தொடங்கியது.ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்: அனைத்துத் தரப்பு மக்களும் மனமகிழ்வோடு தமிழ்ப் புத்தாண்டைத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளன்று கொண்டாட அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் அடங்கிய பொங்கல் பையை அனைத்துக் குடும்பங்களுக்கும் பரிசாக வழங்கி வருவதைப் பாராட்டுவதுடன், தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்களையும் தமிழக மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்வழிக் கல்வி பயின்றோர்க்கு அரசுப் பணியில் முன்னுரிமை, சிந்து சமவெளி நாகரிகத் தொடர்புகள், கடல் கொண்ட குமரி, பூம்புகார் பற்றிய ஆய்வுகள் செய்வதற்காக எடுக்கப்பட்டுவரும் தொல்லியல் ஆய்வு முயற்சிகள், மதுரையில் நூறு கோடி ரூபாய் நிதியுதவியுடன் விரைவில் தொடங்கப்பட உள்ள “உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவை”, சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி திறக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம், தமிழகத்தின் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றில் தாவர, விலங்கியல் உயிர்ப்பன்மை மரபுரிமைச் செறிவைப் பாதுகாக்க ரூ.32 கோடி செலவில் அமையவிருக்கும் மரபணுப் பூங்காக்கள் போன்றவை தமிழரின் பாரம்பரிய அடையாளங்களை நிரந்தரமாகப் பதிவு செய்திட எடுக்கப்பட்ட பெருமுயற்சிகள். இன்னமும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதும்; முகாம்களிலிருந்து சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்ட தமிழர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகள் முழுமை அடையாமல் இருப்பதும்; நீண்ட காலமாகப் பேசப்பட்டு வரும் அரசியல் தீர்வுக்கான ஆரம்பகட்ட முயற்சிகள்கூட இதுவரை மேற்கொள்ளப் படாமலிருப்பதும்; தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும் தமிழக அரசுக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. தமிழக மீனவர்களைப் பாதுகாக்கவும், இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் களைந்திடவும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.வடகிழக்குப் பருவ மழை அதிக அளவில் பெய்யும்பொழுது சரபங்கா நதி, திருமணிமுத்தாறு மற்றும் அய்யாறு ஆகிய உபநதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இந்த மூன்று ஆறுகளையும் ஓர் இணைப்புக் கால்வாய் மூலம் இணைத்து வறட்சிப் பகுதிகளில் விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் இந்த ஆறுகள் பாய்ந்தோடும் சேலம், நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டங்களிலுள்ள கண்மாய்கள் மற்றும் குளங்களுக்கு வெள்ள நீரைத் திருப்பி விட்டு, இப்பகுதிகளில் நிலத்தடி நீரைச் செறிவூட்டும் வகையில் ஒரு சிறப்புத் திட்டத்தைத் தீட்டி நிறைவேற்ற உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.தென்னை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தென்னை விவசாயிகள் நல வாரியத்தையும் இந்த அரசு அமைத்துள்ளது. பனை, தென்னை விவசாயிகளின் நலன் கருதி பனை நுங்குச் சாறும், தென்னை இளநீரும் பக்குவப்படுத்தப்பட்டுத் தயாரிக்கப்படுகிற சுவைநீர், காதி கிராமத் தொழிற்சங்கங்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். தமிழ்நாட்டில் வனவளத்தைப் பாதுகாக்க ரூ. 686 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவன உதவியுடன், “ உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமைத் திட்டத்தினை” செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.கிழக்குக் கடற்கரை மற்றும் தென்னகச் சுற்றுலா மையங்களை அழகுபடுத்தவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் ஆசிய வங்கியின் நிதியுதவியுடன் ரூ. 450 கோடி செலவில் ஒரு சிறப்புச் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மூலக்கடை - திருமங்கலம், மூலக்கடை - திருவான்மியூர், லஸ் - ஐயப்பன்தாங்கல் வழியாக பூவிருந்தவல்லி வரை பாதைகள் அமைப்பது பற்றியும் திட்ட ஆய்வு மேற்கொள்ளப்படும். காஞ்சிபுரம் மாவட்டம் - ராஜீவ் காந்தி சாலைக்கும், கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் இடையில் உள்ள நெம்மேலியிலும்; தூத்துக்குடி மாவட்டம் - நாகலாபுரத்திலும்; தருமபுரி மாவட்டம் - அரூரிலும்; விழுப்புரம் மாவட்டம் - கள்ளக்குறிச்சியிலும்; விருதுநகர் மாவட்டம் - திருச்சுழியிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்படும். நாகை மாவட்டத்தில் உள்ள கீவளூரில் இந்த ஆண்டு புதிதாக விவசாயக் கல்லூரி ஒன்று தொடங்கப்படும். தோட்டக்கலைக்கெனத் தனியே “தோட்டக்கலைப் பல்கலைக்கழகம்” கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இந்த ஆண்டில் தொடங்கப்படும்சென்னையில், அண்ணா பல்கலைக் கழகம், இந்திய தொழில்நுட்ப நிறுவனம் போன்ற 69 க்கும் மேற்பட்ட உயர்கல்வி ஆய்வு நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, உலகத்தரம் மிக்க “அறிவியல் பெருநகரம்” அமைக்கப்படும்.அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளின் உதவியோடு ஒரு வயது வரையுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கான“தீவிர அவசர சிகிச்சைத் திட்டம்” என்னும் புதிய திட்டத்தினை இந்த ஆண்டில் ரூ. 10 கோடி செலவில் அறிமுகம் செய்திட அரசு முடிவெடுத்துள்ளது.“மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரி” என்னும் நோக்கத்தைத் நிறைவேற்றிடும் வகையில்; அடுத்தபடியாக ராமநாதபுரம், கடலூர் மற்றும் திண்டுக்கல்லிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும். தற்போதுள்ள ஆறு அரசு இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி கல்லூரிகளையும், இதுபோன்ற 26 தனியார் கல்லூரிகளையும் உள்ளடக்கி தனியாக இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி பல்கலைக்கழகம் ஒன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடங்கப்படும்.தமிழ்நாட்டிலிருந்து சென்று வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களின் நலனுக்காக வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் ஒன்றை அமைக்க இந்த அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட “வழிகாட்டும் திட்டம்” என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. பஞ்சமி நிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளையும் சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து, அவர்களிடமே திரும்ப ஒப்படைக்கப் படுவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்து, அரசுக்குப் பரிந்துரைகள் வழங்குவதற்கு, உயர்நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் ஒருவர் தலைமையில் குழு அமைப்பதென அரசு முடிவு செய்துள்ளது.வறுமை ஒழிப்புத் திட்டத்திலேயே ஒரு புது முயற்சியாக உலக வங்கி நிதி உதவியுடன் “வாழ்ந்து காட்டுவோம்” என்ற திட்டம் 16 மாவட்டங்களில் உள்ள 2,509 ஊராட்சிகளில் ரூ.717 கோடி செலவில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மேலும் 10 மாவட்டங்களுக்கு ரூ. 950 கோடி செலவில் இந்த ஆண்டு விரிவுபடுத்தப் பட்டுள்ளது. குடிசைகளே இல்லாத தமிழகத்தைக் காண வேண்டுமென்ற கனவு நனவாக கிராமப்புறங்களில் உள்ள குடிசை வீடுகளின் கணக்கெடுப்பு முடிக்கப்பட்டு தமிழகத்திலே உள்ள 21 லட்சம் குடிசைகளையும் ஆறு ஆண்டு காலத்தில் கான்கிரீட் வீடுகளாக மாற்றி அமைத்திடத் திட்டமிட்டு அதற்காக அரசின் சார்பில் வீடு ஒன்றுக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தது. அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்ற வேண்டுகோள் எழுந்ததன் காரணமாக அந்தத் தொகையை வீடு ஒன்றுக்கு 75 ஆயிரம் ரூபாய் என்று அரசு உயர்த்தியது. 75 ஆயிரம் ரூபாயில் தாங்கள் விரும்புவது போல் வீடுகளை கட்டிக்கொள்ள முடியாத நிலையில் கூடுதல் நிதி தேவைப்படுபவர்களுக்கு மட்டும் மேலும் 20 ஆயிரம் ரூபாய் வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடனாகப் பெற்றுக் கொள்ள இந்த அரசு தேவையான முயற்சிகளை எடுத்து வருகிறது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பல ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வரும் அரசின் விருப்புரிமையில் வீடுகள் மற்றும் மனைகள் ஒதுக்கீடு செய்யும் முறை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஆளுநர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்


By A.Arumainathan
1/7/2011 2:30:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
1/7/2011 2:30:00 PM