முதல்வர் தான் அறிவித்தவாறு அயலகத் தமிழர்நல வாரியத்தை உடனே அமைத்து இவை போற்ற குற்றங்கள் இனி நடக்காமல் தடுக்கவும் முன்னரே தீங்கு விளைவிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
கோலாலம்பூர், ஜன.2: மலேசியாவில் அதிகமான சம்பளத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்தியர்களை ஏஜென்டுகள் ஏமாற்றி வருவது தெரியவந்துள்ளது.இதனால் மலேசியாவுக்கு வேலைக்கு வர வேண்டும் என்று நினைக்கும் இந்தியர்கள் ஏஜென்டுகளிடம் கவனமாக இருக்குமாறு மலேசியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு ஆள்களை வேலைக்கு அழைத்துவரும் ஏஜென்டுகளில் பெரும்பாலோர் மோசடிப் பேர்வழிகளாக உள்ளனர். அவர்கள் தங்களது வருமானத்துக்காக ஏமாற்று செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர். முன்பெல்லாம் படிப்பறிவில்லாத இளைஞர்களும், பெண்களும்தான் ஏமாற்றப்பட்டனர். சமீபகாலமாக நன்கு படித்தவர்களும் ஏமாற்று ஏஜென்டுகள் விரிக்கும் வலையில் சிக்கி துயரை அனுபவிப்பது வழக்கமாகியுள்ளது.இப்படி மலேசியாவுக்கு வேலைக்காக அழைத்து வரப்பட்டு ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்ட 24 இந்தியர்கள் தாய்நாட்டுக்குத் திரும்பத் தயாராகவுள்ளனர். இதில் சிலர் நன்கு படித்தவர்கள். ஹோட்டல் நிர்வாகம் படித்த ஒருவருக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏஜென்ட் அழைத்து வந்துள்ளார். ஆனால் அவருக்கு சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. மதுபானக் கடையில் சேர்த்துவிட்டுள்ளார். மதுபானக் கடையில் அவர் தினசரி 12 மணி நேரம் பணிபுரிந்துள்ளார். அவர் இவ்வளவு நீண்ட நேரம் உழைத்தும் உரிய ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளார் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல, தஞ்சாவூரைச் சேர்ந்த விதவையான லதா சண்முகம் என்பவர் மலேசியாவுக்கு வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அவருக்கு மாதத்துக்கு 10 ஆயிரம் சம்பளம் தருவதாகக் கூறி ஏஜென்ட் அழைத்து வந்துள்ளார். ஆனால் அவர் வேலைக்கு சேர்த்துவிட்ட வீட்டில் லதாவுக்கு மாதம் 5 ஆயிரம் மட்டுமே சம்பளம் கொடுத்துள்ளனர். இதனால் மீதம் 5 ஆயிரம் ரூபாய் என்னவாயிற்று என்று லதா கேட்டுள்ளார். அதற்கு அந்த வீட்டு உரிமையாளர், உங்களை அழைத்து வந்த ஏஜென்டுக்கு கொடுக்க வேண்டும் என்றுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த லதா, தனக்கு சொன்னபடி சம்பளம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த வீட்டு உரிமையாளர், லதாவை வீட்டை விட்டு துரத்தியுள்ளார். இதையடுத்து உணவகம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்துள்ளார் லதா. அந்த உணவகத்தில் ஒரு மாதம் மட்டும் அவருக்கு 10 ஆயிரம் சம்பளம் கிடைத்துள்ளது. பிறகு அந்த உணவகத்தின் உரிமையாளரும் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். அவர் தொடர்ந்து 6 மாதத்துக்கு சம்பளமே தரவில்லை. இதனிடையே, இந்தியாவில் படித்துக்கொண்டிருந்த லதாவின் மகள் தனது தாயிடம் கல்விச் செலவுக்கு பணம் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால் லதாவால் பணம் அனுப்பி வைக்க முடியவில்லை. கல்விச் செலவுக்கு தனது தாய் பணம் அனுப்பி வைக்காததால் மனமுடைந்த லதாவின் மகள் தற்கொலை செய்து கொண்டார். மலேசியாவில் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதால் லதா தாய்நாட்டுக்கு திரும்ப முடிவெடுத்தார். ஆனால் தாய் நாட்டுக்கு திரும்புவதற்கு விமானக் கட்டணத்துக்குகூட அவரிடம் பணம் இல்லை. அவரின் நிலையை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர்தான் அவருக்கு விமானக் கட்டணம் செலுத்தி இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். அவர் இதை மலேசியாவில் உள்ள மக்கள் ஓசை என்ற தமிழ்ப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். லதாவின் சோகக் கதை வெளியே தெரியவந்துள்ளது என்றால், மலேசியாவில் கஷ்டப்படும் இன்னும் எத்தனையோ இந்தியர்களின் சோகக் கதை வெளியில் தெரியாமல் உள்ளது. இந்திய இளைஞர்களை சுற்றுலா விசாவில் அழைத்து வந்து நல்லவேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மலேசியாவுக்கு வேலைக்கு வர விரும்பும் இந்தியர்கள் ஏஜென்டுகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை, சம்பளம் குறித்த ஏஜென்டின் வாக்குறுதியின் உண்மைத்தன்மையை 100 சதவீதம் உறுதி செய்த பின்னரே மலேசியாவுக்கு வர விமானத்தில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதே தூதரக அதிகாரிகளின் எச்சரிக்கை கலந்த அறிவுரையாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக