நல்ல முயற்சி. முயற்சியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் செம்மொழித் தமிழ்ஆய்வு மத்திய நிறுவனத்திற்கும் பாராட்டுகள்.எந் தெந்த மொழிகளில் தமிழ் இலக்கிய மொழி பெயர்ப்புப் பணி நடைபெறுகிறது என்ற விவரத்தை அறிந்து தினமணி வெளியிடலாம். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
First Published : 14 Dec 2010 02:00:36 AM IST
மதுரை, டிச.13: சங்கத்தமிழ் நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்கள் தெலுங்கில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன என்று திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயப்பிரகாஷ் கூறினார்.மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் திங்கள்கிழமை தொடங்கிய திருப்பதி தேவஸ்தானம் ஆழ்வார் திவ்ய பிரபந்தத் திட்டத்தின் சார்பிலான, பாண்டிய நாட்டுத் திருத்தலங்கள் எனும் பொருளில், தேசிய அளவிலான கருத்தரங்கத் தொடக்கவிழாவில் அவர் பேசியதாவது:தேவஸ்தானம் சார்பில் சைவ, வைணவம் குறித்து வெளியிடப்பட்டும் நூலாசிரியர்களுக்கு | 30,000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழின் மிகத் தொன்மையான சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களை முழுமையாக தெலுங்கில் மொழி பெயர்க்கும் பணிகள் நடந்துவருகின்றன. தற்போது அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை ஆகிய நூல்கள் தெலுங்கில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. விரைவில் அவை வெளியிடப்பட உள்ளன.சங்கத்தமிழ் நூல்களை தெலுங்கில் மொழி பெயர்க்கும் பணிக்காக செம்மொழி ஆய்வு மையம் சார்பில் | 50 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. இம்மொழிபெயர்ப்பு பணியில் வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக பேராசிரியர்கள் சர்வோத்தமராவ், முனிரத்தினம், தேவசங்கீதம் ஆகியோருடன் நானும் ஈடுபட்டுள்ளேன். தமிழ் பட்டப்படிப்பை படிப்போர் அதை நன்றாகப் படிக்கவேண்டும். அதே சமயம் பிற மொழி ஒன்றையும் நன்கு கற்பது அவசியம். தற்போது மொழிபெயர்ப்புத் துறையில் 10,000 காலிப்பணியிடங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆகவே, தமிழோடு பிறமொழியையும் கற்போருக்கு எதிர்காலத்தில் சிறப்பான வேலைவாய்ப்பு கிட்டும் நிலை உள்ளது என்றார்.பேராசிரியர் தமிழண்ணல்: நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து தமிழண்ணல் பேசியது: இலக்கியம் என்பது மனித மனத்தை பதப்படுத்துவதாகும். நமது சங்க இலக்கியங்கள் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு வருவது வரவேற்புக்குரியது. நாம் அனைவரும் சகோதரர்கள். உலக இலக்கியங்கள் அனைத்தும் ஒரே வகையைச் சேர்ந்ததுதான். ஆகவே நமது தமிழ் இலக்கியம் சிறப்புற பிற மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும். பாண்டி நாட்டுத் திருத்தலங்களில், மதுரை அருகே உள்ள அழகர்மலை மிகவும் பழம்பெருமையும், தனிச்சிறப்பும் பெற்றதாகும். திருமலைக்கு முன்னதாகவே இம்மலை சிறப்புப் பெற்றிருந்ததை, சங்க பரிபாடல்கள் மூலம் அறியமுடிகிறது என்றார். செந்தமிழ்க் கல்லூரி செயலர் ரா.குருசாமி பேசுகையில், தமிழ்ச்சங்கங்களுக்கு கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு அரசு நிதி உதவி அளிக்கவேண்டும். தமிழ்க்கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடத்தை உடனடியாக நிரப்பிட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக