திங்கள், 13 டிசம்பர், 2010

Reception to story books : கதைகளுக்கு இருக்கும் வரவேற்பு இலக்கிய நூல்களுக்கு இல்லையே!

தமிழழுக்கும் தமிழர்க்கும் எதிரான கருத்துகளை எப்போதும் கூறி வரும் செயகாந்தனைத் தமிழறிஞர்களே மதிக்கும பொழுது தமிழ் இலக்கியங்களுக்கு எங்கே மதிப்பு ஏற்படும்? தமிழண்ணல் அவர்களே! ஒரு காலத்தில் செயகாந்தனுக்குத் தக்க விடையடி கொடுத்த உங்கள் முன்னிலையில்தான் செயகாந்தன் இப்படி எல்லாம் உளறி  இருக்கிறாரா? வெட்கக்கேடு! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


கதைகளுக்கு இருக்கும் வரவேற்பு இலக்கிய நூல்களுக்கு இல்லையே!

மதுரை, டிச. 12: தமிழகத்தில் கதை நூல்களுக்கு இருக்கும் வரவேற்பு இலக்கிய நூல்களுக்கு இல்லாதது வேதனை அளிப்பதாக உள்ளது என பேராசிரியர் தமிழண்ணல் தெரிவித்தார். மதுரையில் மீனாட்சி புத்தக நிலையத்தின் 50-வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி காலேஜ் ஹவுசில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அவர் பேசியதாவது:   புதுமைப்பித்தன் கதைகளைவிட, ஜெயகாந்தன் கதைகளைப் படிக்கும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழும் கபிலராக ஜெயகாந்தன் இருக்கிறார். நாட்டில் கதை நூல்களுக்கு இருக்கும் வரவேற்பு இலக்கிய நூல்களுக்கு இருப்பதில்லை. வாஸ்து, ஜோதிடம், சமையல் குறிப்புகளை எழுதுகிறவர்கள் இப்போது ஜெயகாந்தனைவிட அதிக மதிப்புப் பெறுகிறார்கள். ஜெயகாந்தனைப் பின்பற்றி இப்போது இலக்கியப் படைப்பாளிகள் செயல்பட்டு வருகிறார்கள். சென்னையில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது முதல் படைப்பாளிகள், பதிப்பாளர்களிடம் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. "வரப்புயர நீர் உயரும்...நீர் உயர...நெல் உயரும்' என்பது போலவே திறமை போற்றப்பட்டால் புலமை வளரும். புலமையைப் போற்றினால் இலக்கியம் வளரும். இலக்கியம் வளர்ந்தால் படைப்பாளர் வளருவர். படைப்பாளர் வளர பதிப்பாளர் வளருவர். தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர்கள் சங்கம் (பப்பாசி) இயக்கமாக வளர்ந்திருப்பது பாராட்டுக்குரியது. அதற்கு தற்போது தமிழக முதல்வர் கருணாநிதியும் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார். சென்னையிலே இலக்கிய அதிகார மையம் உள்ளது. அவை பரவலாக்கப்பட வேண்டும். பதிப்புத் துறை உள்ளிட்ட அனைத்துமே நாடு தழுவியதாக இருக்க வேண்டும். படைப்பாளிகளை பதிப்பகத்தார் வளர்க்க வேண்டும் என்றார் தமிழண்ணல்.    நிகழ்ச்சியில், எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், தமிழண்ணல், மணிமொழியன், பா.ஆனந்தகுமார், பேராசிரியர் ரா.மோகன், நிர்மலா மோகன், ம.பெ. சீனிவாசன், கர்ணன், வீ.மோகன், யாழ். சந்திரா உள்ளிட்ட 26 பேருக்கு பதிப்பகம் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.ஜெயகாந்தன் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய ஜெயகாந்தன், "இப்போது எனக்கு 77 வயதாகிறது. தமிழில் பிழை திருத்தவே நான் அச்சகத்தில் பணிபுரிந்தேன். அங்கேதான் எனக்கு மீனாட்சி புத்தக நிலையத்தின் செல்லப்பன் அறிமுகமானார். நான் திருத்தம் செய்த புத்தகத்தில் பிழைகளே இருக்காது. ஆகவே, ஏராளமான பதிப்பகத்தார் என்னை பிழை திருத்த நாடினர். இப்போது எழுதுகிறவர்கள் இருப்பதைப் போல, எழுத்தைப் படிப்பவர்கள் அதிகம் இல்லை என்பதில் வருத்தமாக உள்ளது. உண்மையில், எழுதுகிறவர்கள் மெஜாரிட்டியாகவும், படிப்போர் மைனாரிட்டியாகவுமே உள்ளனர். இதுவும் நான் எழுதாததற்கு காரணமாகும்.   தம் மொழி மீது அன்பு கொண்டவர்களுக்கு பிற மொழி மீது வெறுப்பு வராது. தமிழில் பல வார்த்தைகள் இல்லாமல் இருப்பதில் எனக்கு வருத்தமில்லை. அதைச் சேர்த்துக் கொள்ளலாம். தொல்காப்பியர் கூட திசைச் சொல், வட சொல் எனக் கூறியுள்ளார். வட மொழிக்கும், தமிழுக்கும் மரபார்ந்த சொந்தம் உள்ளது. கருணாநிதியிடம் எனக்குப் பிடித்தது வடமொழிச் சொல்லை அவர் பயன்படுத்துகிறார். வலிந்து தமிழாக்கம் செய்வது சரியல்ல. மாறுபட்ட அர்த்தத்தைத் தரும்போது மொழி கடன் வாங்குகிறது. தேசமே கடன் வாங்கும்போது மொழி வாங்குவது சரியானதே. கம்பன் அதுபோல நிறையச் சொற்களைப் பயன்படுத்துகிறார். பிறமொழிகளை நேசிப்பதால் தமிழுக்குக் குறைவு வராது. நாம் யாருக்கும் அடிமையாக மாட்டோம். பெருமையுடையோரைப் பெருமைப்படுத்த வேண்டும். நான் எழுத மாட்டேன் என்று கூறியதை மாற்றி, மீண்டும் மீனாட்சி புத்தக நிலையத்தார் எனை எழுத வைப்பார்கள் என நம்புகிறேன்' என்றார் ஜெயகாந்தன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக