வியாழன், 16 டிசம்பர், 2010

ஒரே கல்லில் ௨ மாங்காய். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிப்பிற்கான சதியாகவும் பயன்படும். ஊழல்களில் இருந்து மக்கள் கவனத்தைத் திருப்பும் பரபரப்புச் செய்தியாகவும் பயன்படும். இதுதான் மத்திய அரசின்  நோக்கம். ஆனால், தொடர்புடையவர்களுக்கே  அரசின் புரளி எனத் தெரியும் என்பதால் இதனால் என்ன பயனும்  இல்லை. 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்


மன்மோகன், கருணாநிதி, சிதம்பரம் மீது தாக்குதல் நடத்த புலிகள் திட்டம்

First Published : 15 Dec 2010 11:58:00 PM IST

Last Updated : 16 Dec 2010 01:14:30 AM IST

சென்னை, டிச. 15: பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதி ஆகியோர் மீது தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.மத்திய உளவுத் துறையிடம் இருந்து இதுதொடர்பான எச்சரிக்கை வந்துள்ளதை தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாக அந்த நாட்டு ராணுவம் அறிவித்தது. ஆனால், அவர்கள் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் கருணாநிதி ஆகியோர் தமிழகத்தில் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது.மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கை குறித்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. லத்திகா சரண் புதன்கிழமை கூறியதாவது:பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மீது தமிழகத்தில் தாக்குதல் நடத்தப்படலாம் என்று மத்திய உளவுத் துறையிடமிருந்து எச்சரிக்கை வந்துள்ளது.இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையில் உண்மை உள்ளதா என்பதைக் கண்டறிவதற்காக உளவுத் துறையினரும் முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.பிரதமர் உள்ளிட்ட அனைத்து மிக முக்கியப் பிரமுகர்களும் தமிழகத்துக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் வந்து செல்லும் வகையில் உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார் லத்திகா சரண்.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மனித வெடிகுண்டுக்கு 1991-ல் பலியானார். எனவே, இந்த எச்சரிக்கையை பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது.இந்திய அறிவியல் மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த மாதம் சென்னை வர உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரது வருகையையொட்டி உச்சபட்ச பாதுகாப்பு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பினர் இந்தியாவில் ஒருங்கிணைய முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவை என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக