ஞாயிறு, 12 டிசம்பர், 2010

Higher education for foreign jobs? வெளிநாடுகளுக்குச் சேவையாற்றவா உயர்கல்வி?

உண்மைதான். முன்பு இந்தியாவில் அடிமைப் பணியாளர்களை உருவாக்குவதற்காக மெக்காலே கல்வித்திட்டம் வந்தது.  இப்பொழுது  அயல்நாடுகளில் சென்று அடிமைகளாக வாழ்வதற்காக அடிமைக் கல்வி முறை அரங்கேற்றப்படுகிறது. தாய் நிலச் சூழலுக்கேற்ற தாய்மொழியிலான கல்வி  வழங்கப்பட்டாலேயே நம் நாட்டில் அறிஞர்களும் மேதைகளும் அறிவியலாளர்களும் தொழில் வல்லுநர்களும்  பிற துறை வல்லுநர்களும் பண்பாளர்களும் உருவாகுவர். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்



வெளிநாடுகளுக்கு சேவையாற்றவா உயர்கல்வி?

கோட்டயம், டிச.11: இந்தியாவுக்குள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் இங்குள்ள இளைய தலைமுறையினரை வெளிநாடுகளில் பணியாற்ற தயார்படுத்தும் நிலை உருவாகும் என்று கேரள மாநில உயர் கல்வித்துறை உறுப்பினர் செயலர் தாமஸ் குறிப்பிட்டுள்ளார்.வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலம் இங்குள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்திலான கல்வி கிடைக்கும் என்று அரசு தரப்பில் இதுவரை கூறப்பட்டு வந்த விஷயத்தை அரசு அதிகாரியே மறுத்து, அதன் பாதக அம்சத்தை வெட்ட வெளிச்சமாக சுட்டிக் காட்டியுள்ளார்.கோட்டயத்தில் உள்ள மகாத்மா காந்தி பல்கலையில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். உயர் கல்வியில் உலகமயமாக்கல் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது: இந்தியாவில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள் கிளைகளை அமைத்து இங்கு செயல்பட உள்ளன. வணிக நோக்கில் இங்கு கிளைகளை அமைக்கும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்கள், வர்த்தக நோக்கிலான மாணவர்களைத் தயார்ப்படுத்துமே தவிர, அடிப்படை அறிவியல் உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தராது. இதனால் ஆராய்ச்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும். இதனால் ஸ்திரமான வளர்ச்சியை எட்ட முடியாது. வெளிநாட்டு பல்கைலைக் கழகங்களுடன் போட்டி போட வேண்டும் என்ற நோக்கத்தில் அவை அடிப்படை அறிவியல் சார்ந்த பாடங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு வெளிநாட்டு பல்கலைக் கழங்கள் கற்றுத் தரும் பாட முறையை பின்பற்றும். இதனால் அடிப்படை அறிவியல் மற்றும் அது சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறையும். வெளிநாட்டு பல்கலைக் கழகத்தை சார்ந்துள்ள கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். இங்குள்ள கல்வி நிறுவனங்களிலிருந்து வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கு மாணவர்கள் மாறுவதால் நமது சுயசார்புத் தன்மையை இழந்து எப்போதும் வெளிநாட்டை சார்ந்து இருக்கும் சூழல் உருவாகும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதால், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பணியாற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களையும், தொழில்துறை நிபுணர்களையும் நாம் உருவாக்குவதாக அமையும் என்று தாமஸ் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக