தகவல் அறியும் சட்டத்தில் கொண்டு வர எண்ணும் திருத்தம் அதனை அடியோடு நீக்குவதற்கு ஒப்பானது. போலியான சட்டம் இருந்து என்ன பயனும் இல்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, டிச. 14: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தத் திருத்தங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே முடக்கக் கூடும் என்று ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 2005-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய மக்களுக்குக் கிடைத்த இரண்டாவது சுதந்திரம் என்று போற்றப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளின் துறைகள் தொடர்பான தகவல்கள், செயல்பாடுகளை அறிய இந்த சட்டம் பேருதவியாக உள்ளது. மேலும், அரசுத் துறைகளில் நடைபெறும் பல ஊழல்களையும் இந்த சட்டம் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர மத்திய பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிக்கை டிசம்பர் 10-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திருத்தங்கள் தொடர்பான கருத்துகளை டிசம்பர் 27-ம் தேதிக்குள் usrti-dopt@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் அனுப்ப வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. முக்கிய திருத்தங்கள்: தகவல் கேட்டு விண்ணப்பம் செய்வோர் ஒரு விண்ணப்பத்தில் ஒரு பொருள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்க வேண்டும். தகவல் கோரும் விண்ணப்பம் என்பது 250 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டியது மிக அவசியம். விண்ணப்பதாரர் கேட்கும் தகவல்களைத் திரட்டுவதற்காக ஏதேனும் இயந்திரங்களைப் பயன்படுத்த நேரிட்டால், அதற்கான செலவுகள் அனைத்தும் விண்ணப்பதாரரிடமிருந்து வசூல் செய்யப்படும். தபால் செலவு ரூ.10-க்கு அதிகமானால், கூடுதல் செலவுத் தொகையை விண்ணப்பதாரர்தான் செலுத்த வேண்டும். மேல் முறையீட்டுக்காக சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் உண்மையானவை என்பது தகுதியுடைய நபர்களால் சான்றளிக்கப்பட வேண்டும். மேல் முறையீட்டு மனு ஏற்க தகுதியில்லாத நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட ஆணையம் கருதினால், மனுதாரரை மட்டும் அழைத்து விசாரித்து, மனுவை நிராகரிக்கலாம். முதல் மேல்முறையீட்டு மனுவின் மீதான முடிவு தெரிந்த 45 நாள்களுக்குள் இரண்டாவது மேல்முறையீடு செய்யப்பட்டாக வேண்டும். முடக்க முயற்சி: இந்தத் திருத்தங்கள் அனைத்தும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை சிதைத்து, சட்டத்தையே முடக்க வேண்டும் என்ற நோக்கில் கொண்டு வரப்படுவதாக தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பிட்ட ஒரு நிகழ்வு தொடர்பான தகவல்களைப் பெற ஒரு கேள்வி மட்டும் கேட்டால், போதுமான தகவல்கள் கிடைக்காது. எனவே, ஒன்றுக்கும் மேற்பட்ட கேள்விகளைக் கேட்பது அவசியமாகிறது. அவ்வாறு பல கேள்விகளை உள்ளடக்கிய விண்ணப்பங்களை, பல பொருள்கள் குறித்து கேள்வி கேட்பதாகக் கூறி, நிராகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளன. மேலும், 250 வார்த்தைகளுக்குள் தகவல்களைக் கோர வேண்டும் என்பதும் பொருத்தமில்லாதது என்றும், பெரும்பாலான தகவல் கோரும் விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இந்தத் திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும், தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்க நிர்வாகியும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான எஸ். சம்பத் கூறியது: தகவல் சேகரிக்க செலவான தொகையைச் செலுத்த வேண்டும்; கூடுதல் தபால் செலவை செலுத்த வேண்டும் என்ற காரணங்களைக் கூறி மனுதாரர்களை அலைக்கழிக்கவே இந்தத் திருத்தங்கள் உதவும். மனுதாரர் மிரட்டப்பட்டு, விசாரணையில் ஆஜராகாவிட்டாலும் கூட, அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரித்து, முடிவை அறிவிக்கும் நடைமுறை இப்போது உள்ளது. மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றால், விசாரணை நடைபெறத் தேவையில்லை என்று இப்போது திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆதிக்க சக்திகளால் மனுதாரர்கள் மிரட்டப்பட்டு, மனுக்களை வாபஸ் பெறச் செய்யும் சம்பவங்கள் இனி நிறைய நடைபெறலாம். முதல் மேல்முறையீட்டு மனு மீதான முடிவு தெரிந்து, இரண்டாவது மேல் முறையீடு செய்ய இப்போது 90 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்தை 45 நாள்களாக குறைப்பதன் மூலம் மேல் முறையீட்டுக்கான வாய்ப்புகளை அரசு குறைக்கிறது. எனவே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்யும் வகையில்தான் இப்போதைய திருத்தங்கள் உள்ளன என்றார் சம்பத். மக்கள் சக்தி கட்சியின் தலைமைக் குழு உறுப்பினரும், தகவல் அறியும் உரிமை ஆர்வலருமான சிவ. இளங்கோ கூறியது: நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதத்தினருக்கு மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்துள்ளது. அவர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே இந்த சட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு குறைவான மக்கள் இந்த சட்டத்தைப் பயன்படுத்தும் நிலையிலேயே, பல அரசுத் துறைகளின் மிக மோசமான செயல்பாடுகள் அம்பலமாகியுள்ளன. எனவே, இப்போது பயன்படுத்தும் மிகக் குறைவான மக்கள் கூட இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்த முடியாத வகையில், மத்திய அரசு சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் இந்த முயற்சியை தொடக்க நிலையிலேயே தடுத்தாக வேண்டும். எனவே, தகவல் அறியும் உரிமை ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, இந்தத் திருத்தங்களை தடுப்பதற்கான போராட்டங்களை நடத்த எங்கள் அமைப்பு திட்டமிட்டுள்ளது என்றார் சிவ. இளங்கோ.
கருத்துகள்


By வாலு
12/15/2010 5:17:00 PM
12/15/2010 5:17:00 PM


By logu
12/15/2010 2:38:00 PM
12/15/2010 2:38:00 PM


By மு. அசோக்குமார்.,
12/15/2010 2:26:00 PM
12/15/2010 2:26:00 PM


By sakkaria
12/15/2010 1:32:00 PM
12/15/2010 1:32:00 PM


By DhanaGunasekaran
12/15/2010 11:35:00 AM
12/15/2010 11:35:00 AM


By Karthik
12/15/2010 10:05:00 AM
12/15/2010 10:05:00 AM


By sankaralingam
12/15/2010 9:57:00 AM
12/15/2010 9:57:00 AM


By RS PONNUSAMY
12/15/2010 8:40:00 AM
12/15/2010 8:40:00 AM


By த.ஜகந்நாதன்
12/15/2010 7:56:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
12/15/2010 7:56:00 AM