வியாழன், 16 டிசம்பர், 2010

Dinamani editor about Bharathiyar articles : பாரதி பற்றி "தினமணி' ஆசிரியர்

திரு சீனிவிசுவநாதன் அவர்கள் முயற்சி பெரிதும் பாராட்டிற்குரியது. பாரதியார் வரலாற்றுப் பிழையாக ஆரிய நாடு என நம் நாட்டைக் குறிப்பிட்டது தவறு எனப் பாரதியாரே ஒப்புக் கொண்டுள்ளார். இது போன்ற சில தவறுகள் பாரதியார் பாடல்களில் உள்ளன. அவரது சில உரைநடைப்  படைப்புகள் அவருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்பதால் மறைக்கப்பட்டுள்ளன என்பதைத் தினமணியே அறியும். எனவே சொத்தை அற்ற  சொத்து என அவரது படைப்புகளைக் கூற முடியாது. இருப்பினும் பாரதியார்  படைப்புகள் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியவையே. அவற்றைத் திரட்டுவோருக்கும் வெளியிடுவோருக்கும் தமிழுலகு என்றென்றும் கடமைப்பட்டிருக்கும். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஒற்றை எழுத்துக்கூட சொத்தை கிடையாது! - பாரதி பற்றி "தினமணி' ஆசிரியர்

First Published : 15 Dec 2010 02:16:55 AM IST


"தினமணி'ஆசிரியர் கே.வைத்தியநாதன்: சீனி.விசுவநாதன் இதுவரை பாரதியாரின் படைப்புகளை 12 தொகுதிகளாகக் காலவரிசைப்படுத்தி வெளியிட்டிருக்கிறார். அதில் 5 தொகுதிகளின் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளதை பிறவிப் பயனாகக் கருதுகிறேன்.இரண்டு ரூபாய்க்கு கடலை வாங்கினால் கூட அதில் சொத்தைக் கடலைகள் ஒன்றிரண்டு இருக்கும். ஆனால், பாரதியின் எழுத்தில் சொத்தை எழுத்து என்று எடுத்துப்போட ஒற்றை எழுத்துக்கூட கிடையாது என்பதுதான் சிறப்பு.பாரதியைப் பற்றி ஒரு விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. பாரதியின் கவிதை எளிமையான நல்ல தமிழில் இருந்தாலும், உரைநடையில் வடமொழிக் கலப்பிருக்கிறது என்பதே அது.அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது எங்களைப் போன்ற பத்திரிகையாளர்களுக்குத்தான் தெரியும். பத்திரிகையில் கட்டுரை எழுதுவது பாமரர்களும் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. அதனால், அன்றைய காலக்கட்டத்தில் பேச்சுவழக்கு எப்படி இருக்கிறதோ, எப்படி எழுதினால் எல்லோருக்கும் புரியுமோ அப்படி எழுதியாக வேண்டும்.பாரதி வாழ்ந்த காலத்தில் நமஸ்காரம், விசேஷம், பொதுஜனங்கள், பிரிட்டிஷ் ராஜாங்கம் போன்ற வார்த்தைகளை சாமானியர்களும் பேசினார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.அன்றைய வாசகர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக, அப்போது வழக்கில் இருந்த சொற்களையே பத்திரிகைகளில் பாரதி பயன்படுத்தினார். பத்திரிகையாளனாக அவர் செய்தது மிகச்சரியானதே! பாரதிக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் போன்றவர்களின் உரைநடையிலேயே பல வடமொழிச் சொற்கள் இருக்கும்போது, கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த பாரதியின் உரைநடையில் வடமொழிக் கலப்பு இருந்ததில் என்ன வியப்பு?தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி: எழுத்தும் தெய்வம், எழுதுகோலும் தெய்வம் என்ற மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை பிரம்ம கான சபையின் சார்பில் ஆண்டுதோறும் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.சீனி.விசுவநாதன் 15 வயதில் இருந்தே கடந்த 50 ஆண்டுகளாக  பாரதியார் தொடர்பான ஆவணங்களைச் சேகரித்து வைத்து வருகிறார். இவற்றை புத்தகங்களாகக் கொண்டுவருவது குறித்து பேசினோம்.இது பல பக்கங்கள் வரும் என்றார். நீங்கள் புத்தகமாக பதிப்பிக்க வேண்டும். எங்களைப் போன்ற பாரதி நேசர்கள் உள்ளனர். அதற்கான செலவை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்தேன்."இது 800 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகள் வரும்' என்றார். கிடைப்பதை எல்லாம் தேடிப்பிடித்துத் தொகுத்துப் புத்தகமாக்குங்கள். அதற்கு எவ்வளவு செலவானாலும் நானும், பாரதி நேசர்களும் உங்களுக்குக் கொடுத்து உதவத் தயாராக இருக்கிறோம் என்றேன்.பாரதி எந்த வருஷம், மாதம், எந்தச் சூழ்நிலையில் இதை எழுதினார் என்ற குறிப்போடு சீனி.விசுவநாதன் எழுதியுள்ளார். இதற்காகவே நிறைய நேரம் செலவானது.50 ஆண்டுகளுக்கு முன்னதாக பாரதியின் எழுத்துகளைத் தொகுத்திருந்தால் மிகவும் எளிதாக இருந்திருக்கும்.  சுதேசமித்திரனில் இருந்து இதை எடுத்துத் தொகுத்திருக்கலாம்.சுதேசமித்திரன் பிரதிகள் வைக்கப்பட்டிருந்த இடம் மழையில் நனைந்து அவை வீணாகி விட்டன.எனவே, தில்லியில் உள்ள நேரு மியூசியத்தில் சுதேசமித்திரன் பிரதிகள் மைக்ரோ பிலிம் எடுத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து பாரதி எழுத்துகளை எடுத்து இதில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது. இவரிடம் இருந்த நிறைய ஆவணங்களை புதுச்சேரி பல்கலைக்கழகத்துக்கு அளித்துள்ளார்.அவரது அயராத உழைப்பால்தான் இந்தத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன்: இந்த நூல்களைப் பதிப்பிக்க எனக்கு பத்தாண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், அந்தத் தகவல்களைச் சேகரிக்க 50 ஆண்டுகள் தேவைப்பட்டன. இதற்காக நான் ஏறாத படிகள் இல்லை. ஏராளமான பழையப் புத்தகங்களையும் புரட்டிப்  பார்க்க வேண்டியிருந்தது. இந்த 12 தொகுதிகளும் வெளிவரும் வரை எனக்கு ஊக்கமும், உற்சாகமும் அளித்த நல்லி குப்புசாமிக்கு நன்றி.
கருத்துகள்

தமிழர்கள் அனைவரும் திரு சீனி விசுவநாதன் அவர்களுக்கு மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறது .
By ச. ஹேமச்சந்திரன்
12/15/2010 2:07:00 PM
சீனியார் தமிழுக்கு கிடைத்த சீனி!
By DhanaGunasekaran
12/15/2010 12:05:00 PM
அய்யா உங்களை போன்றவர்கள் பாரதியின் உண்மையான தொண்டர்கள்,பாரதியின் நினைவை போற்ற எதுவுமே செய்யாமல் வேடிக்கை பார்க்கும் என்னை போன்றோருக்கு குற்ற உணர்ச்சி ஏற்படும் அளவிற்கு உள்ளது உங்கள் தமிழ் தொண்டு,வாழ்க!
By வல்லம் தமிழ்
12/15/2010 7:25:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக