வியாழன், 16 டிசம்பர், 2010

உண்மையான பாராட்டு. அனைவரின் தொண்டுகளும் தொடரட்டும்! படைப்புகளுடன் அவை பற்றிய  ஆய்வுக் குறிப்புகள் சுருக்கமாவேனும் சேர்க்கப்படுவது நன்று. வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

"சீனி.விசுவநாதன்' - பாரதியாருக்கு வாய்த்த உ.வே.சா.: அவ்வை நடராஜன் பாராட்டு

First Published : 16 Dec 2010 12:00:00 AM IST


பிரம்ம கான சபையின் சார்பில் மகாகவி பாரதியாரின் 129-வது பிறந்த நாள் விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக
சென்னை, டிச.15: ஊர்தோறும், வீடுகள்தோறும் சங்கத் தமிழ் நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து பதிப்பித்த "தமிழ்த் தாத்தா' உ.வே.சா.வைப் போல, பாரதியாரின் படைப்புகளைத் தேடிப் பிடித்து கால வரிசைப்படுத்திப் பதிப்பித்த பெருமைக்குரியவர் சீனி.விசுவநாதன் என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் பாராட்டினார். பிரம்ம கான சபையின் சார்பில் மகாகவி பாரதியாரின் 129-வது பிறந்த நாள் விழா, ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.இந்த விழாவில் நல்லி குப்புசாமி செட்டியார் தொகுத்த "காலம்தோறும் பாரதி' (இரண்டாம் தொகுதி), சீனி.விசுவநாதன் பதிப்பித்த "கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்' (11, 12-ம் தொகுதிகள்), கவிஞர் சுரதா கல்லாடன் எழுதிய "நல்லிதய முத்துக்கள்', கவிஞர் ஈஸ்வர் எழுதிய "நல்லி குப்புசாமி அந்தாதி' ஆகிய நூல்களை அவ்வை நடராஜன் வெளியிட, "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பெற்றுக்கொண்டார்.நூல்களை வெளியிட்ட பிறகு, அவ்வை நடராஜன் பேசியதாவது:கண்ணில் தெரியாத செய்திகளை எல்லாம் தேடித் தேடி இந்த 12 தொகுதிகளையும் நிரப்பி வைத்திருக்கிறார் சீனி.விசுவநாதன். பாரதியாரின் பாடல்களைப் போலவே அவரது கட்டுரைகளும் ஆழமானவை. உலக நாடுகளின் அரசியல் நிகழ்வுகளை நுணுக்கமாக அவர் ஆராய்ந்து எழுதியிருக்கிறார் என்பதை அந்த உரைநடைகளைப் பார்த்தால் விளங்கும்.90 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தின் விடுதலை குறித்து அவர் எழுதியிருக்கிறார். அப்போதே, தமிழில் எகிப்து என்றுதான் எழுதியிருக்கிறாரே தவிர, "ஈஜிப்ட்' என்று எழுதவில்லை.ஆங்கிலச் சொற்கள் கலந்த போதும், பிரான்ஸ் நாட்டு அதிபர் பேசிய பேச்சு குறித்து எழுதும்போது வெறும் இலக்கியம் படித்தவரல்ல இந்த பிரெஞ்சு நாட்டறிஞர் என்று கூறியிருக்கிறார்."சுதேசமித்திரன்' கட்டுரைகளின் தனித்தன்மை என்னவென்றால் பல நுணுக்கமான ஆங்கிலச் சொற்களையெல்லாம் பாரதியார் தமிழ்ப்படுத்தி இருப்பதுதான்.இதைப் பார்க்கும்போது, பழந்தமிழ் நூல்களை எல்லாம் தேடித் தேடி, கால்கள் தேயத் தேய, நடந்து நடந்து, ஊர்தோறும், வீடுதோறும் ஏடுகளைத் தேடிய ஒரு உ.வே.சா.வைப் போல, பாரதியாருக்கு வாய்த்த உ.வே.சா. இந்த சீனி.விசுவநாதன்.சங்கத் தமிழ் என்று சொல்கிறோம், திருமுறைத் தமிழ் என பேசி மகிழ்கிறோம். அதுபோல, அறிஞர் தூரன் அவர்கள் சொன்ன தொடர்தான் "பாரதி தமிழ்' என்ற தொடர். அந்த பாரதி தமிழின் களஞ்சியத்தை இப்போது வெளியிட்டிருக்கிறார்கள்.கவிஞர் சுரதா கல்லாடன் பிறந்தநாள் முதல் எனக்குத் தெரியும். தந்தைக்கு சிலை நிறுவிய தகுதிவாய்ந்த தனயன் சுரதா கல்லாடன்.நல்லனவற்றையெல்லாம் தேடித் தொகுப்பது என்பது ஒரு பெரிய கலைப்பணி ஆகும்.நல்லி குப்புசாமி செட்டி அவர்கள் 20, 30 நூல்கள் எழுதியிருக்கிறார். வணிகத்தைப் பற்றி எழுதியிருக்கிறார், தன் வாழ்க்கையில் கண்ட கருத்துகள், தான் அறிந்த வரலாற்றுத் தகவல்கள் ஆகியவற்றை எழுதியிருக்கிறார். காலந்தோறும் பாரதியைப் பற்றிய தகவல்களை அறிஞர்கள் எவ்வாறு தொகுத்துள்ளார்கள் என்பதை தேடித்தேடி தொகுத்திருக்கிறார்.இவ்வளவு பெரிய தொகுப்பாளரான நல்லியின் இந்த நூல்களுக்குள் தேனி போல் சென்று, எண்ணி 120 தொடர்களைத் தேர்ந்தெடுத்து இது நல்லி எழுதியதல்ல; நல்லிதயம் எழுதிய கருத்துகள் என்று புத்தகப்படுத்தியிருக்கிறார் கல்லாடன்.ஒரு தொடர் முடிந்தால், முடிந்த தொடரை வைத்து அடுத்த பாடலைத் தொடர்வதற்கு அந்தாதி என்று பெயர்.அந்தாதி பாடுவது என்பது அளப்பரிய புகழுடன் விளங்கும் தலைவனை மனம் நெகிழ்ந்துபோய் புலவன் பாடுவது ஆகும். இதை எப்படி எழுதுவது என்பதற்கு உதாரணமாக ஈஸ்வர் "நல்லி குப்புசாமி அந்தாதி' படைத்திருக்கிறார்.பாரதியார் நினைவைப் போற்றும் வகையில் கடந்த மூன்று நாள்களாக எங்கும் நிகழ்ச்சிகள் கிறுகிறுக்க வைக்கும் வகையில் நடைபெற்று வருகின்றன. அதில் ஒரு பகுதியாக இந்த நூல் வெளியீட்டு விழாவும் உள்ளது.இந்த நூல்கள் தமிழனுக்கு கிடைத்த மாபெரும் கலைச் செல்வங்கள் ஆகும். இந்தத் தொகுதிகளை அனைவரும் வாங்க வேண்டும். தமிழுக்கு, நமக்கு கிடைத்த பெரும் செல்வம் இது. இதை வெளியிட கிடைத்த வாய்ப்பால் நான் பெருமிதமடைகிறேன் என்றார் அவ்வை நடராஜன்.பிரம்ம கான சபாவின் துணைத் தலைவரும், சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குநருமான ஏ.நடராஜன் வரவேற்றார். பதிப்பாசிரியர் சீனி.விசுவநாதன் ஏற்புரை வழங்கினார். முன்னதாக, பாரதியார் பாடல்களை கே.காயத்ரி குழுவினர் பாடினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக