தமிழர் தமிழராக வாழ்வது குறித்தும் கூட்டாட்சிக் குறித்தும் பேராசிரியர் அருமையாக உரையாற்றியுள்ளார். இளைய தலைமுறையினர் அதை உணர்தல் வேண்டும். பாரட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, டிச.13: மாநில அரசுகளின் ஆதரவால் தான் மத்திய அரசு நிலைக்கிறது என்று தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் தெரிவித்தார்.மாநில திட்டக் குழு துணைத் தலைவர் மு. நாகநாதன் எழுதிய "இந்திய கூட்டாட்சியில் அதிகாரம் குவிப்பா? பகிர்வா?' என்ற நூலை திங்கள்கிழமை வெளியிட்டு, நிதியமைச்சர்க. அன்பழகன் பேசியதாவது: நாங்கள் பிரிவினை கோரவில்லை. உன்னோடு சேர்ந்து வாழ்வதற்கு இப்போது எங்களுக்கு தடையில்லை. ஆனால், நீ எங்ளை அடிமைப்படுத்துவதை நாங்கள் ஏற்கமாட்டோம் என்று எண்ணி துணிக என்ற தலைப்பில் அண்ணா விளக்கம் அளித்துள்ளார். இதுதான் திமுகவின் நெறிமுறைகளுக்கு அடிப்படையானது. ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதா அல்லது பிரிவினை கேட்பதா என்ற நிலை அண்ணாவுக்கு ஏற்பட்டது. அப்போது, இந்த இயக்கத்தை வளர்த்த ஜனநாயகத்தைக் காப்பாற்றாமல் பிரிவினை கேட்பதில் என்ன பொருள் உள்ளது என்று அந்தக் கோரிக்கையை அண்ணா கைவிட்டார். தமிழன் என்ற உணர்வுடன் தமிழகத்தில் எத்தனை பேர் உள்ளனர். மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது நாங்கள் தமிழர் என்று கூறுவோர் 45 சதவீதத்தை எட்டினால் பெரிய சாதனை. தமிழரை தமிழராக்குவதுதான் பெரியாரின் முயற்சி. தமிழர், தமிழராக வாழ முடியும் என்று எடுத்துக்காட்டுவது தான் அண்ணாவின் முயற்சி. தமிழ் நம் தாய்மொழி என்று உயர்த்துவதுதான் பாரதிதாசனின் முயற்சி. ஆனால், இந்த அடிப்படைக் கருத்துகள் மக்களை முழுமையாகச் சென்று சேர்ந்ததா என்பது இன்றும் கேள்விக் குறியாக உள்ளது. இதை உணர்ந்தாலும் அதை ஏற்பார்களா என்பதும் சந்தேகமே. பிரிவினையை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதை திருமாவளவன் போன்றவர்கள் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் தெரியவரும். நமக்கு குழி பறித்து நம்மை வீழ்த்துகின்ற சக்திகள் தான் சுற்றி இருக்கின்றன. இன்றும் தமிழன் என்று சொல்லிக் கொண்டு தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி நடத்துவதா என்று கேட்கின்றவர்கள் தான் நாட்டில் உள்ளனர். தமிழாய்ந்த தமிழ்மகன்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்க வேண்டும் என்று பாரதிதாசன் கூறியுள்ளார். இதற்கு எடுத்துக்காட்டு கருணாநிதி. பெரும்பான்மை இருக்கலாம். சில நேரத்தில் சிறுபான்மை ஆகலாம். நமக்கு பெரும்பான்மை செல்வாக்கு என்பது சட்டப்பேரவையில் எண்ணிக்கை அடிப்படையில் கிடைத்தால் கூட, அது சிறுபான்மை ஆட்சியாகத் தான் பலரால் சித்தரிக்கப்படும். அமெரிக்காவில் கூட்டாட்சி கொள்கை மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. இதற்கு கூட்டாட்சி ஏற்படும் முன்னர் சுதந்திரமாக இருந்த ஒவ்வொரு மாநிலமும் சேர்ந்து கூட்டாட்சியை ஏற்படுத்தின. ஆங்கிலேயர் காலத்தில் ஒரு வைசிராய் தலைமையில் தனித் தனியாக இருந்த மாகாணங்களின் நிர்வாகம் இருந்தது. சமரச முயற்சியாக உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம் முதல்வராக வர வேண்டும் என்ற யோசனையை நேரு ஏற்கவில்லை. இதனால் தான் பிரிவினை கோரிக்கை வலுப்பெற்றது. இப்போது மத்திய அரசு, மாநிலங்களை மதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த காலங்களில் மத்திய அரசு 100-க்கும் மேற்பட்ட முறை மாநில அரசுகளைக் கலைத்தது. ஆனால், இப்போது அது முடியாது. மாநிலங்கள் நினைத்தால் மத்திய அரசை கவிழ்க்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டாட்சி கொள்கையின்படி மத்தியில் அதிகாரங்கள் குவிந்துகொண்டே போகக் கூடாது. இதனால் தான் இலங்கையில் இப்போதை விளைவு ஏற்பட்டது. இதேபோல மாநிலங்களில் வட்டார உணர்வு காரணமாகத்தான் ஏதேனும் ஒரு வகையில் தெலங்கானா போராட்டம் தொடர்கிறது. அவர்கள் ஏற்கெனவே சமஸ்தானமாக இருந்த காரணத்தால் அந்த உணர்வு மேலோங்கி தெலங்கானா கோரி போராடுகின்றனர். இது தவறு என்று வாதிட முடியாது. பிரெஞ்சுக்காரர்கள் ஆண்டதற்காகவே அங்குள்ள மக்களின் உரிமைகளுக்கு தனிச்சிறப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்பு மத்தியில் ஒரே கட்சி ஆட்சியிருந்ததால் மாநிலங்களை மதிக்க வேண்டிய தேவை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், இப்போது அத்தகைய நிலை இல்லை. மாநில கட்சிகள் ஆதரவு அளித்து மத்தியில் ஆட்சி அமைப்பது இக்காலத்தில் உள்ளது. மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்பது இன்று இல்லாவிட்டாலும் நாளை நடைமுறையில் கொண்டுவர வேண்டியது என்பது எனது நம்பிக்கை. மாநில அரசுகளின் பெருந்தன்மையால் தான் மத்திய அரசு நிலைக்கிறது. மாநில அரசு பெருமளவு கைகொடுத்து, மத்தியில் ஓர் அரசு தேவை என்று கருதுவதால் மத்திய அரசு நிலைக்கிறது. இப்போதும் காலம் மாறுகிறது. எனினும், நம் உரிமைகள் நிலைக்கும் என்றார் அமைச்சர் அன்பழகன். இதில் நூலாசிரியரும், திட்டக் குழுத் துணைத் தலைவருமான மு. நாகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக