ஞாயிறு, 12 டிசம்பர், 2010

changes should be made in laws and rules: சட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்: மு.க.தாலின்

அடிமை நாட்டில்  பின்பற்ற விதிகளையே பெரும்பாலும் இப்பொழுதும் பின்பற்றுகிறோம். எனவே, அனைத்தையும் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றும் பொழுது அரசு ஊழியர்கள் தவறு செய்தால் அவர்களுக்குக் கூடுதல் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் விதிகளையும் மாற்ற வேண்டும். அனைத்தையும் திருத்தங்களாக் கொண்டு வராமல்  புதிய சட்டங்களையும் விதிகளையும்  இயற்றுவதே சாலச் சிறந்தது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டும்: மு.க. ஸ்டாலின்


மதுரை, டிச.11: பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட சட்ட நடைமுறைகள், விதிமுறைகளை பொதுமக்கள், நிர்வாக நலன் கருதி மாற்றி அமைக்க வேண்டியது அவசியம் என, தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.நீதித்துறை பயிற்சி மண்டல மையம், மாற்றுத் தீர்வுமுறை மையத்தின் அடிக்கல் நாட்டு விழா, உயர் நீதிமன்ற வழக்குகளுக்கான மக்கள் நீதிமன்றத் துவக்க விழா மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துணை முதல்வர் பேசியது:தமிழக அரசு நீதித்துறையுடன் ஒன்றிணைந்து பல்வேறு பணிகளை ஆற்றி வருகிறது. நாட்டில் சட்டத்தின் ஆட்சி நிலவுவதை நீதிமன்றங்கள் உறுதி செய்கின்றன. மக்களுக்கு சட்ட விதிமுறைப்படி நியாயமாக கிடைக்க வேண்டிய உரிமைகளைக் கிடைக்கச் செய்ய வேண்டும். பெருகி வரும் வழக்குகளின் எண்ணிக்கை, புதிதாக தோன்றுகின்ற சட்ட சிக்கல்கள் ஆகியவை காரணமாக நீதிமன்றங்களின் பணிச்சுமை கூடியுள்ளது. இவற்றைச் சமாளிக்க நீதித்துறைக்குத் தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும், அமைச்சுப் பணியாளர்களையும் ஏற்படுத்தித் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு கூடுதலாக ஏற்பட்டுள்ளது.   வழக்குகளை குற்றவியல், உரிமையியல் விசாரணை அடிப்படையில் விசாரித்து தீர்வு செய்வதற்கு பதிலாக மக்கள் நீதிமன்றங்கள், மாற்றுத்தீர்வு முறை மையங்கள் மற்றும் விரைவு நீதிமன்றங்கள் மூலம் தீர்வு கிடைக்கச் செய்யலாம்.  நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பல ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட விசாரணை, சட்ட நடைமுறைகள், விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் பரந்த மனப்பான்மையோடு அணுகி புதிய நடைமுறைகளை உருவாக்க வேண்டும்.நீதித்துறைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, பணிகளை விரைவுபடுத்துவதில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக உள்ளது என்றார். விழாவில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம், மாநில சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.யூசுப் இக்பால், உயர் நீதிமன்ற நீதிபதிகள் எலிப் தர்மாராவ், எப்.எம். இப்ராஹிம் கலிபுல்லா உள்ளிட்டோர் பேசினர். உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி வரவேற்றார். நீதிபதி பி.ஜோதிமணி நன்றி கூறினார்.
கருத்துகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக