வெள்ளி, 17 டிசம்பர், 2010

owner of corruption : ஊழலுக்குக் காங்கிரசு துணை போகாது: தங்கபாலு

உண்மைதான். அடுத்தவர் ஊழலுக்குக் காங். என்றும் துணை நிற்காது. ஊழல் என்றால் அது காங்.கிற்கு மட்டுமே உரியது. அதில் பிறர் பங்கு போட இடம் தராது. காங்.கின் கட்டுப்பாட்டில் ஊழல் புரியலாமே தவிர வேறு யாருக்கும் அந்த உரிமை யில்லை. அன்றைக்கு நேரு முதல் இன்றைக்குச் சோனியா வரை  பெருங்கோடி ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் காங்.கினர்தானே தவிர வேறு யாரும் அல்லர் என்னும் பெருமைக்கு உரிய கட்சியைத் தன் உரிமையை அடுத்தவருக்குத்  தாரை வார்க்கும் கையாலாகத கட்சியாக விளக்குவதற்கு ஒரு போதும் இடம் தர மாட்டோம். கட்சியிலும் ஊழல் செய்தால்தான் பொறுப்புகள் பெற முடியும். உண்மையை உரைக்கும் தங்கபாலுவிற்குப் பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

ஊழலுக்கு காங்கிரஸ் துணை போகாது: தங்கபாலு

சென்னை, டிச. 16: ஊழலுக்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் துணை போகாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ. தங்கபாலு தெரிவித்தார்.இது குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:காங்கிரஸ் ஊழலுக்கு எதிரான கட்சி. ஊழலுக்கு நாங்கள் ஒருபோதும் துணை போக மாட்டோம். ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததும் மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண் உள்ளிட்டோர் ராஜிநாமா செய்துள்ளனர். அதுபோலவே 2ஜி அலைக்கற்றை ஊழலில் குற்றம்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து ஆ. ராசாவும் மத்திய அமைச்சர் பதவியிவிருந்து ராஜிநாமா செய்துள்ளார்.2ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து விவாதம் நடத்த காங்கிரஸ் தயாராக இருந்தும் பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கியது கண்டிக்கத்தக்கது. எனவே எங்களுக்கு எதிராக ஊழலை மையப்படுத்தி எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்தாலும் மக்கள் மத்தியில் அது எடுபடாது.கனிமொழிக்கு நெருக்கமானவர்கள் மீது சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியது குறித்து நான் எதுவும் கூற விரும்பவில்லை. மத்திய அரசு என்பது திமுகவையும் உள்ளடக்கியதுதான். மத்திய அரசுக்கு திமுக முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. காங்கிரஸ் - திமுக கூட்டணி வலுவாக உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜனார்த்தன திரிவேதி கூறியுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கருத்தும் அதுதான் என்றார் தங்கபாலு.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக