திங்கள், 13 டிசம்பர், 2010

To long live Thamizh : தமிழ் வாழ்க என்ற வெற்று முழக்கத்தால் தமிழ் வளராது:

தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும். ஆனால் தமிழ் வாழ்ந்தால்தான் தமிழினம் இருக்கும். இந்தியக் கண்டத்தின் பல பகுதிகளிலும் அயல்நாடுகளிலும் கடந்த நூற்றாண்டில் ௬௦ விழுக்காட்டிற்கும் மேல் இருந்த தமிழர்கள் தம் மொழியைத்  துறந்ததால் அங்கெல்லாம் தமிழினம் அழிந்தது என்பதை மறக்க வேண்டா. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழ் வாழ்க என்ற வெற்றுக் கோஷத்தால் தமிழ் வளராது: 
தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள்

தூத்துக்குடி, டிச. 11: தமிழ் வாழ்க என்ற வெற்றுக் கோஷத்தால் தமிழ் வளராது என, எட்டையபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பாரதியார் பிறந்த நாள் விழாவில் தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள் குறிப்பிட்டனர். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் பாரதியாரின் 129-வது பிறந்த நாள் விழா, தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி மகா குரு பாலபிரஜாபதி அடிகளார் பேசியதாவது: தமிழ் வாழ்க என வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். தமிழ் வாழ்க என வெற்றுக் கோஷம் போடுபவர்களை நம்பக் கூடாது. தமிழர்களைக் காப்பவர்களைதான் நம்ப வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க வேண்டியதில்லை. தக்க வைத்தால் போதும். அதற்கு தமிழனைக் காக்க வேண்டும் என்றார் அவர். புதிய பார்வை ஆசிரியரும், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கப் புரவலருமான ம. நடராசன் பேசியதாவது: வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் தமிழை அருமையாகப் பேசுகிறார்கள், வளர்க்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் அந்த நிலை இல்லை. இலங்கையில் தமிழ் இனமே அழிக்கப்பட்டபோது இந்திய அரசும், தமிழக அரசும் வேடிக்கைதான் பார்த்தது. இதுவே பாரதியார் இருந்திருந்தால் பார்த்துக் கொண்டிருப்பாரா. தனது பாடல்களாலேயே அதனை தடுத்திருப்பார்.  பாரதியாரின் பாடல்களைச் சொன்னால் மட்டும் போதாது. அவரது வழிகளைப் பின்பற்றி தமிழை வளர்க்க வேண்டும். பாரதிக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்று இங்கு பேசிய பலரும் குறிப்பிட்டார்கள்.  நோபல் பரிசைவிட உயர் பரிசுக்கு உரியவர் பாரதி, அதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர். விழாவில், அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் செயலர் சுடர் முருகையா பேசியதாவது: எட்டையபுரம் மண்ணை மிதிக்காத யாரும் தமிழ்க் கவிஞனாக இருக்க முடியாது. பாரதி பிறந்த மண்ணைத் தொட்டு வணங்காத எவரும் தமிழ் எழுத்தாளராக இருக்க முடியாது.  தமிழ்க் கவிஞர்கள், எழுத்தாளர்களுக்கு இதுதான் புண்ணிய பூமி என்றார் அவர். மதுரை பாரதி சிந்தனை மன்றத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் பேசுகையில்,  பாரதியாரின் கவிதைகளை அனைத்து இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். பாரதியார் நாணயம் வெளியிட வேண்டும்.  பாரதியாருக்கு ஐ.நா. சபை சார்பில் மனித உரிமை விருது வழங்க வேண்டும். ரவீந்திரநாத் தாகூர் புகழ்பரப்ப சிறப்புக் காட்சி ரயில் இயக்கியதுபோல பாரதியாருக்கும் சிறப்புக் காட்சி ரயில் இயக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தோம்.  ஆனால், மத்திய அரசு எந்தப் பதிலையும் இதுவரை சொல்லவில்லை. எனவே, இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் விக்கிரமன் இந்த ஆண்டு விழாவுக்கு வரவில்லை. இருப்பினும் செல்போன் வாயிலாக விழாவில் பங்கேற்றவர்கள் மத்தியில் பேசினார்.  அப்போது அவர் கூறுகையில், திருவையாற்றில் ஆண்டுதோறும் அனைத்து இசைக் கலைஞர்களும் ஒன்று திரண்டு விழா எடுப்பது போல, பாரதியார் பிறந்த நாளில் அனைத்து தமிழ் எழுத்தாளர்களும், கவிஞர்களும் எட்டையபுரத்தில் திரண்டு மகாகவிக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்றார்.
கருத்துகள்

// தமிழ் வாழ்க என வெறுமனே பேசிக் கொண்டிருந்தால் தமிழ் வளராது. தமிழன் வளர்ந்தால்தான் தமிழ் வளரும். தமிழ் வாழ்க என வெற்றுக் கோஷம் போடுபவர்களை நம்பக் கூடாது. தமிழர்களைக் காப்பவர்களைதான் நம்ப வேண்டும். தமிழ் மொழியை வளர்க்க வேண்டியதில்லை. தக்க வைத்தால் போதும். அதற்கு தமிழனைக் காக்க வேண்டும். // . . . . . . . . . . 1924-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை நடந்து(!) கொண்டிருக்கும் துர்பாக்கியமான தமிழ்நாட்டு நிகழ்ச்சிகளை தாமதமாகவேனும் தெரிந்து கொண்டீர்களே, சாமிதோப்பு அய்யா வைகுண்டபதி மகா குரு பாலபிரஜாபதி அடிகளார் அவர்களே!
By நல்லரசு
12/12/2010 9:22:00 PM
பாரதியின் பாடல்கள் இசையுடன் இணைந்தது. ஆக, திரு. விக்ரமனின் வேண்டுகோளான எட்டையபுர தமிழ் இசை விழா மிகப் பொருத்தமானதே. எழுத்தாளர்கள் சங்கம் முன் நின்று நடத்த வேண்டும். அரசு ஏற்று நடத்தாவிடினும், மற்றையோர் ஆதரவிற்கு குறையிருக்காது. செய்தியே கவிதை போல் இருந்தது!
By அஷ்வின்
12/12/2010 5:56:00 PM
until B.Litt degree exists, tamil cannot live.
By a.k
12/12/2010 5:19:00 PM
முதலமைச்சர் அவர்களே தமிழை வளர்க்க சூப்பரான ஒரு ஐடியா, இனிமேல் அரசு ஊழியர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மற்றும் அரசாங்க சம்பளம் வாங்குபவர்களின் வாரிசுகள் அனைவரும் கட்டாயமாக அரசு பள்ளிகளில் தமிழில்தான் படிக்க வேண்டும். மீறினால் அரசாங்க வேலைக்கு கல்தா என்று ஒரு போடு போடுங்கள். தமிழும் வளரும், அரசு பள்ளிகளின் தரமும் உயரும். டமில் வால்க! டமில்நாடு வால்க!
By Inbaa
12/12/2010 3:42:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக