உடனடியாக மிகுதியான அதிகார வரம்பு உள்ள அயலகத் தமிழர்நல வாரியத்தை முதல்வர் உருவாக்க வேண்டும். இது போன்ற கொடுமைகளில் இருந்து மக்களைக்
காப்பாற்றுவதுடன் காரணமானவர்கள் தண்டனை பெறவும் வகை செய்ய வேண்டும்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, டிச. 13: லிபியா நாட்டுக்கு வேலைக்குச் சென்ற தமிழகப் பணியாளர்கள் கடும் சித்ரவதைக்கு ஆளாவதாக அந்நாட்டிலிருந்து மீண்டு வந்தவர்கள் புகார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை இது குறித்து கூறியதாவது: ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, கடலூர், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 81 பேர் கட்டுமானப் பணிக்காக கடந்த 2009-ம் ஆண்டு லிபியாவுக்குச் சென்றோம். இதற்காக எங்களுக்கு சம்பளமாக மாதம் 450 டாலர் (இந்திய ரூபாயில் 20,250) என கூறப்பட்டது. இதன்படி, சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் எங்களிடமிருந்து தலா ரூ. 1.50 லட்சம் வரை பணம் பெற்றுக் கொண்டு லிபியாவுக்கு அனுப்பியது. ஆனால் லிபியாவில் வேலைக்குச் சென்ற நாள் முதலாகவே கொத்தடிமைகளைப் போலவே நடத்தப்பட்டோம். மிகவும் கடுமையான பணிகள் எங்களுக்கு தரப்பட்டன. ஆனால் காலையும், மாலையும் ஒரு "பன்' மட்டுமே சாப்பாட்டுக்கு வழங்கப்பட்டது. குடிக்க உப்புத் தண்ணீரே தரப்பட்டது. மேலும் பணி நேரத்தின் போது கழிப்பறை உள்ளிட்ட எங்குமே செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மீறி செல்பவர்களுக்கு வெறும் 70 டாலர் மட்டுமே சம்பளமாக வழங்கப்பட்டது. இது குறித்து யாரேனும் எதிர்த்துப் பேசினால் அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டனர். தினமும் இரும்பு கம்பி அடி, சிகரெட்டால் சூடு உள்ளிட்ட பல கொடுமையான தண்டனைகளும் அளிக்கப்பட்டன. இவ்வளவு கடுமையான சூழலில் வேலை பார்த்தும்கூட எங்களுக்கு 4 அல்லது 5 மாத சம்பளமே வழங்கப்பட்டது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்குள்ளான நாங்கள் தமிழக அரசிடம் புகார் தெரிவித்தோம். இதன் அடிப்படையில் இந்திய தூதரகத்தின் உதவியின் மூலம் அங்கிருந்து மீண்டு தமிழகம் திரும்பினோம். எங்களை ஏமாற்றி லிபியா நாட்டுக்கு அனுப்பிய தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம். மேலும் எங்களது ஓராண்டு கால சம்பளத்தையும், நாங்கள் கட்டியப் பணத்தையும், இழப்பீட்டுத் தொகையாக ரூ. 1 லட்சமும் எங்களுக்குப் பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் விரைவில் நடத்தத் திட்டமிட்டுள்ளோம் என அவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக