வெள்ளி, 19 நவம்பர், 2010

தமிழறிஞர் பி.விருத்தாசலம் காலமானார்

தமிழியக்கப்பணிகளில் ஈடுபாடு கொண்ட தகைமையாளர். அவற்றில் ஒன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின்   DOCTRINA VIM PROMOVET INSITA  என்னும் குறிக்கோள் முழக்கத்தை மாற்றப் போராடி, கற்றனைத்தூறும் அறிவும் ஆற்றலும என அடையாள முத்திரையில் குறிக்கச் செய்தமையாகும். நாவலர் ந.மு.வேங்கடசாமி அவர்கள் தொடங்க எண்ணி முயன்ற  திருவருள்கல்லூரி  கைகூடாமல் போனது. அதனை  இவர் நிறுவித் தமிழ்ப் புலவர்களை உருவாக்கியவர். அன்னாரின் மறைவிற்குத் தினமணி இணைய நேயர்கள் சார்பில் ஆழ்ந்த  இரங்கல்கள். 
வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்


தஞ்சாவூர், நவ. 18: தஞ்சை நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரி நிறுவனர் புலவர் பி.விருத்தாசலம் புதன்கிழமை இரவு காலமானார்.தஞ்சாவூர் மாவட்டம், மேலத்திருப்பூந்துருத்தியில் 1940-ல் பிறந்த விருத்தாசலம் தமிழ் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர். 28 ஆண்டுகள் தஞ்சை கரந்தை கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்த இவர், சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினர், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர், தமிழ் பாட திட்டக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகள் வகித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவைச் செம்மல், மாமன்னர் ராஜராஜ சோழன் சதய விழாக் குழுவின் ராஜராஜன் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு அண்மையில் தொடங்கப்பட்டுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி தொல்காப்பியர் பேரவையில் இந்திய தமிழ்ச் சங்கங்களின் சார்பில் உறுப்பினராக தமிழக அரசால் நியமிக்கப்பட்டவர். இவரது படைப்புகள் 26 தொகுதிகளாக வெளிவந்துள்ளன. விருத்தாசலத்துக்கு மனைவி விமலா, மகள் தென்றல் (மருத்துவர்), பேராசிரியர்கள் பாரி, தமிழ்ச்செல்வன், ம.தி.மு.க. மாவட்ட துணைச் செயலர் விடுதலைவேந்தன் ஆகிய மகன்கள் உள்ளனர்.அவரது மறைவுக்கு முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக