வெள்ளி, 19 நவம்பர், 2010

தட்டச்சர்கள் பணி நிலைப்பாட்டில் பெரும் குழப்பம்

விதிகளுக்கிணங்க இவர்கள் புதிய தாகப் பணியில் சேருபவர்களாகத்தான் கருதப்படுவார்கள். இதுதான் நடைமுறை என்பதால் தனியாக அரசாணை தேவையில்லை. எனினும் தற்போதைய பணியிடங்களில் பணி நீக்கம் எனக் குறிக்கப் பெறாமல் பணி முடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகத்தெரிவித்தால்.
பின்னர் தொடர்பணி ஆணைக்கு உதவும். எனினும் எவ்வாறு குறிப்பிட்டாலும் அரசு பின்னர் இப் பணிக்காலததைச் சேர்த்துக் கணக்கிடுமாறு ஆணை பிறப்பித்தால்தான் பயன் கிட்டும். அவ்வாறு பல சூழல்களில் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இது குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அரசு உத்​த​ரவு இல்​லா​த​தால்​ தட்டச்சர்கள் பணி நிரந்தரத்தில் பெரும் குழப்பம்

First Published : 19 Nov 2010 02:39:46 AM IST


சென்னை : தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தர்கள் பணி நிரந்தரத்தில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. தாற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்ட அவர்களை அந்தப் பணியிலிருந்து நீக்குவதா? அல்லது விடுவிப்பதா? என்பதில் தெளிவாக அரசு உத்தரவு இல்லாத காரணத்தால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.  அதிமுக ஆட்சிக் காலத்தில் தலைமைச் செயலகம் உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் பணி நியமனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. அதில், தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தார்கள் நியமனமும் ஒன்று.  திமுக ஆட்சிக்கு வந்ததும், பணி நியமனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பணியாற்ற தட்டச்சர்கள் மற்றும் சுருக்கெழுத்தாளர்கள் 3 ஆயிரம் தாற்காலிக அடிப்படையில் கடந்த 2007-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.  தலைமைச் செயலகத்தில் 162 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தார்கள் என சென்னையில் மொத்தம் 400 பேர் நியமனம் செய்யப்பட்டனர். பணி நியமனம் செய்ததற்கான தேதிக்கு முந்தைய நாள் வரும் போது ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் பணிக்காலத்தில் தடை (break service) செய்யப்பட்டது. இரண்டு ஆண்டுகள் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்காக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டது.   திடீர் குழப்பம்: இந்தத் தேர்வில் தேறியவர்களுக்கு அரசுத் துறைகளில் பணிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நிரந்தரப்படுத்தும்போது ஏற்கெனவே தாற்காலிக அடிப்படையில் பணியாற்றிய அரசுத் துறையில் இருந்து அந்த ஊழியர்களை விடுவிப்பதா? அல்லது அந்தப் பணியில் இருந்து நீக்குவதா? என்ற கேள்வி எழுந்தது.  பணியில் இருந்து விடுவித்தால் அவர்கள் பணியாற்றிய காலத்தில் கிடைத்த சலுகைகள் அனைத்தும் தொடரும்; பணியாற்றிய காலமும் நிரந்தப் பணியில் சேர்க்கப்படும். ஆனால், தாற்காலிகப் பணியில் இருந்து நீக்கப்பட்டு நிரந்தரப்படுத்தப்பட்டால் அவர்கள் புதிதாக பணியில் சேர்ந்ததாக கருதப்படும்.  அரசு உத்தரவு இல்லை: ஊழியர்களை எப்படி நியமிக்க வேண்டும்? என்பது குறித்து  பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தெளிவான உத்தரவை பிறப்பிக்கவில்லை. இதனால், அரசுத் துறைகளில் உள்ள உயரதிகாரிகள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்றாற்போன்று ஊழியர்களை தாற்காலிக பணியில் இருந்து விடுவிக்கின்றனர் அல்லது நீக்குகின்றனர்.  இந்த நிலையைப் போக்கி உரிய உத்தரவுகளை அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை வெளியிட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக