அண்மைக்காலமாக கிராமியக் கலைஞர்களுக்கும் கலைகளுக்கும் மதிப்பும் சமூக அந்தஸ்தும் ஏற்பட்டது மாதிரியான பிரமையை ஊடகங்கள் உருவாக்கி வருகின்றன. திரைப்படங்களில் கிராமியக்கலை நிகழ்ச்சிகளைக் காட்டுவது, கலைஞர்களின் பிரச்னைகளை உணர்த்துவது, அரசு அல்லாத தனி நிறுவனங்கள் சார்பாக நடைபெறும் கிராமியக்கலை நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சிகள் போட்டிபோட்டுக் கொண்டு காட்டுவது என்பதெல்லாம் நடுத்தர மக்களிடம் கூட கிராமியக்கலைகளைப் பற்றிய தாக்கத்தை ஏற்படுத்தியது ஓரளவு உண்மை என்றாலும் இக் கலைகளின் எதிர்காலத்துக்கு இந்தப் பிரம்மை உதவாது என்பதுதான் யதார்த்தம். தோல்பாவைக் கூத்துக் கலைஞர் கலைமாமணி பரமசிவராவ் தசாவதாரம் சினிமாவைப் பார்த்துவிட்டு ""என்ன சார் அநியாயம் இது; எங்கள் தோல்பாவைக் கூத்துக் கலையை பிராமணர் வீட்டுக்குள்ளே பிராமணப் பெண்களே நடத்துகிறார்கள்'' என்றார் என்னிடம்.÷தோல்பாவைக்கூத்து என்ற கலை, மராட்டி மொழிபேசும் கணிகரின் 12 பிரிவினரில் மண்டிகர் என்னும் இனக்குழுவினர் மட்டுமே நடத்த முடியும் என்பது அவர்களின் ஜாதி நடைமுறை. மற்ற 11 இனத்தினரோ பிற ஜாதியினரோ நிகழ்ச்சி நடத்தக்கூடாது. மீறி நடத்துபவர்கள், மூத்த மண்டிகக் கலைஞரின் முன்னே "பால்கா பாச்சா' என்னும் சடங்கை நடத்திவிட்டுத்தான் கணிகரின் மற்ற பிரிவினர் கூத்து நடத்தலாம் என்பது இவர்கள் ஜாதியின் பொதுவிதி.÷தமிழகத்தில் குறிப்பிட்ட ஜாதிகள் மட்டுமே நடத்தும் கிராமியக்கலைகளில் (அம்மன் கூத்து, எக்காளக்கூத்து, ஒட்ட நாடகம், கொறத்திக்களி, சேர்வையாட்டம், தாதுராட்டம், தும்பிப்பாட்டு, தேவராட்டம், பக்கிரிஷா பாட்டு, பகல்வேஷம்) கொஞ்சம் கூடத் தொடர்பில்லாதது தோல்பாவைக் கூத்து. ஒடுக்கப்பட்ட ஜாதியினர் நடத்தும் இக்கலையின் பார்வையாளர்களும் உயர்வர்க்கத்தினர் அல்லாதவர்களே. கிராமங்களில் தோல்பாவைக்கூத்து நிகழ்ச்சியை உயர்வர்க்கத்தினர் பார்ப்பது இழிவானது என்று கருதிய காலம் உண்டு. பதப்படுத்தப் படாத ஆட்டுத்தோல் பாவைகளை ஆட்டி நிகழ்ச்சி நடத்துவது என்ற காரியத்தை பிராமணப் பெண் உரிமையுடன் எடுத்துக் கொண்டது கலைமாமணி பரமசிவராவுக்குத் பிடிக்கவில்லை. இதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் என்றார். கரகாட்டம் திரைப்படத்தில் வரும் கரகாட்டக் கலைநிகழ்வுக் காட்சிகளும், அந்தக் கலைஞர்களின் பிரச்னைகளும், வாழ்க்கைமுறைகளும் முழுக்கவும் கற்பனையானவை. கரகாட்டப் பெண்ணுக்குச் சமூக அந்தஸ்து இல்லை. அவர்களைக் கோயில்விழா பார்வையாளர்கள் நடத்தும் விதமும் அந்தக் கலைஞர்களின் பொருளாதார நிலையும் கரகாட்டம் படத்தில் பிரதிபலிக்கவில்லை. திரைப்படங்களில் கிராமியக்கலைகள் அவற்றின் முழுப்பரிமாணத்துடனோ இக்கலை பற்றிய நுட்பத்துடனோ கொஞ்சமும் தொடர்பில்லாமல் தொடர்ந்து காட்டப்படுகின்றன. இது ஒருவகை மறைமுகச் சுரண்டல்தான். தமிழகக் கிராமியக்கலைகள் குறித்து இயலிசை நாடக மன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நானும் பேராசிரியர் ராமச்சந்திரனும் செய்திசேகரித்தபோது (2000) முக்கிய கலைகளும் துணைக்கலைகளுமாக 153 பெயர்கள் கிடைத்தன. மறுபடியும் இது குறித்து 2005-ல் செய்தி சேகரிக்கத் தொடங்கியபோது 40க்கும் மேற்பட்ட கலைகள் அழிந்துவிட்டது தெரிந்தது. தமிழகக் கிராமியக் கலைகளில் இன்று வழக்கில் உள்ளனவும் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்ததாகவும் உள்ள கலைகளாக உடுக்கடி, ஒயிலாட்டம், கணியான் ஆட்டம், கரகம், கும்மி, கோலாட்டம், சிலம்பம், செண்டை, தப்பாட்டம், தெருக்கூத்து, தேவராட்டம், தோல்பாவைக்கூத்து நையாண்டிமேளம், பாகவதமேளா, பெரியமேளம், பொம்மலாட்டம், பொய்க்கால்குதிரை ஆட்டம், இலாவணி, ஸ்பெஷல் நாடகம் ஆகியவற்றைக் கூறலாம். இந்தக் கலைகள் வெகுஜனத் தொடர்புச் சாதனங்களின் வழி மக்களால் அறியப்பட்டுள்ளன. ஆனால், இக்கலை வடிவங்கள் உண்மையான கலைநுட்பத்துடனோ முழுவடிவத்துடனோ மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படவில்லை. துணை ஆட்டங்களாக இன்று வழக்கில் உள்ள 16 அளவிலான கிராமியக்கலைகளில் மிகச் சிலவே ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆட்டங்கள் கோயில் விழாக்கூறுகளுடன் பெரிதும் தொடர்புடையன அல்ல. இவற்றில் சில மட்டும் சடங்குகளுடன் தொடர்புடையதாய் நடக்கின்றன. பெரும்பாலான துணைக்கலைகள் சமூகவிழாக்களில் நிகழ்த்தப்படுகின்றன. சில கிராமியக்கலைகள் மாவட்டம், வட்டம், பகுதி என்னும் அளவில் நிகழ்கின்றன. இவற்றில் சில குறிப்பிட்ட ஜாதிகளுடன் தொடர்புடையவை. இவை 29 அளவில் உள்ளன. இத்தகு கலைகள் வட்டார மண்ணுடன் தொடர்புடையன. அதனால் இவை வேறு வட்டாரங்களில் நிகழவில்லை. இவற்றின் தனித்தன்மை பாதுகாக்கப்படுகிறதே தவிர பொதுவான நிலையில் இவை வளர்ச்சியடையவில்லை. எனவே இக்கலைகளும் வழக்கொழிந்து வருகின்றன. மலைவாழ் மக்களுடன் தொடர்புடையதாக எட்டுக்கு மேற்பட்ட ஆட்டங்கள் உள்ளன. இந்த மக்களின் வாழ்வுமுறைகள் மாறிவரும் நிலையில் இந்த ஆட்டங்களும் அழிந்து வருகின்றன. தமிழகக் கிராமியக் கலைகளில் கோயில் அல்லது சடங்கு தொடர்பானவை தவிர, பிற கலைகள் எல்லாமே வழக்கொழிந்து போவதற்குரிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இதற்குக் காரணங்கள் நிறையவே உள்ளன. இந்தக் கலைகளைப் பேணுவதற்கு அரசு முயற்சி எடுக்கவில்லை என்று முழுதும் மறுத்துவிட முடியாது. இயலிசை நாடகமன்றம், தென்மண்டல பண்பாட்டு மையம் போன்ற அமைப்புகள் கிராமியக் கலைஞர்களுக்கு நலவாரியம் அமைத்துள்ளன. கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்குகின்றன; நலம் பேண உதவிப்பணம் கொடுக்கின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் நிகழ்த்தும் கலைகளுக்குரிய இசைக்கருவிகளை வாங்கிக் கொடுக்கின்றன. தரமான கலைஞர்களுக்கு பொற்கிழி என்ற பெயரில் பணம் கொடுக்கின்றன. இக்கலைஞர்களை கலை நிகழ்த்த வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்கின்றன. இப்படியாக இந்த அமைப்புகள் எவ்வளவோ உதவிகள் செய்துதான் வருகின்றன. என்றாலும் இந்த உதவிகள் கலைஞர்களை அடையச் சில தடைகள் உள்ளன. கிராமியக் கலைஞர்களில் பெரும்பாலோர் கிராமங்களில் குறிப்பாகக் குக்கிராமங்களில் வாழ்கின்றனர். கோயில் விழாவிலோ பொது விழாவிலோ கலைநிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் கலைஞர்களை நேரடியாக அணுகுவதில்லை. பெரிய கிராமங்களில் வாழும் கலைஞர்கள்வழி மட்டுமே ஏழைக் கலைஞர்கள் வாய்ப்பைப் பெற முடியும் என்ற நிலை இன்று உருவாகிவிட்டது. நகரம் அல்லது நகரத்தன்மை வாய்ந்த கிராமத்தில் குடியிருக்கும் படித்த அல்லது உலகியல் அறிவு பெற்ற கிராமியக் கலைஞர்களில் சிலர் கலை நிகழ்த்துவதைவிட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பணம் சம்பாதிப்பதை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இவர்கள் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதற்கு இவ்வளவு விழுக்காடு கமிஷன் வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்கின்றனர். அரசுவழி வருகிற ஓய்வூதியம், இலவச இசைக்கருவிகள், நலஉதவி, நலவாரிய அட்டை, அரசு அடையாள அட்டை ஆகியவற்றைப் பெற கிராமியக் கலைஞன், தரகர்களையே முழுதும் நம்பவேண்டிய சூழ்நிலையைத் தரகர்கள் இன்று உருவாக்கிவிட்டனர். தமிழக அரசு கொடுக்கும் கலைமாமணி விருது என்பது கிராமியக் கலைஞனின் நீண்டநாள் கனவு. இந்த விருதையும் இடைத்தரகர்கள் மூலம் மட்டுமே பெற முடியும் என்பது இன்றைய நிலை. கலைமாமணி விருது எப்போதும் கர்நாடக சங்கீத, சாஸ்திரிய சங்கீதக் கலைஞர்களுக்கும் திரைப்படக் கலைஞர்களுக்கும்தான் பெருமளவில் கொடுக்கப்படுகின்றன என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஓராண்டில் 60 பேருக்குக் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டால் இவர்களில் 3 அல்லது 4 பேர்தான் கிராமியக் கலைஞர்களாக இருப்பார்கள். அரசு எந்தெந்த வகையில் தனக்கு உதவுகிறது என்பது கொஞ்சமும் தெரியாத நிலையில் கிராமியக் கலைஞன் இன்று வாழ்கிறான். இவர்களில் மிகப்பெரும்பாலோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். இவர்கள், நலஉதவிபெற வெளிவரும் விளம்பரத்தை அறியாதவர்கள். இப்போதெல்லாம் நலஉதவி பெறுவதற்குரிய விண்ணப்பத்தை வாங்க இணையதள முகவரியைத் தேடச் சொல்கிறது அரசு. இதுபோன்ற நிலையில் கிராமியக்கலைஞன் கலைத் தரகர்களை மட்டுமே நம்பி வாழ வேண்டி இருக்கிறது. அரசு விழாக்களிலும் கலைநிகழ்ச்சிகளிலும் கிராமியக் கலைகளை நடத்த வேண்டும் என்று இந்தக் கலைத்தரகர்களே அரசியல்வாதிவழி சிபாரிசு செய்துவிட்டு கலைஞர்களை ஏற்பாடு செய்கின்றனர். மரபுவழிக் கலைஞர்களிடம் கிராமியக்கலைகளைப் பயின்றுவிட்டு அவற்றைப் பொதுமேடைகளில் நடத்துகிற படித்த வர்க்கமான வியாபாரக் குழுவினர்களும் இப்போது முளைக்க ஆரம்பித்துவிட்டனர். இவர்கள் கிராமியக் கலைஞர்களை ஊறுகாய் அளவுக்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பிட்ட கலை பற்றி பிஎச்டி ஆய்வு செய்பவர், கலை பற்றிய தகவல்களைச் சேகரித்துத் தன்னைக் கலைஞனாகவும் ஆய்வாளராகவும் அடையாளப்படுத்துபவர்கள்கூட கலைத்தரகர்களாக மாறிவிட்டதுதான் வருத்தமான விஷயம்.(கட்டுரையாளர்: நாட்டுப்புறவியல் ஆய்வாளர்)
கருத்துகள்
1.) தோல்பாவை தமிழர்கள் கலையே. திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் இதற்கான குறிப்புகளைக் காணலாம். ஆனால்,இப்பொழுது மராட்டியத்தைச் சேர்ந்த சில குடும்பங்கள் மட்டுமே இதில் ஈடுபட்டு வருகின்றன. 2.) மரபுக் கலைஞர்களிடமிருந்து சில தகவல்களை மட்டும் பெற்றுக் கொண்டு பரபரப்பு மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்பவர்கள வாழ்கிறார்கள். ஆனால் கலைஞர்கள் நலிந்த நலையிலேயே உள்ளனர். எனவே, கட்டுரையாளரின் கவலை உண்மையானது. 3.) கலைபண்பாட்டுத்துறையில் மண்டல அதிகாரி ஒருவர் கலைஞர்களுக்கு அடையாள அட்டை வழங்குவதாகப் பணம் பெற்று வட்டிக்கு விட்டுப்பிழைத்தார். அவருக்குத் தண்டனை பதவி உயர்வு. இவ்வாறு அரசு மூத்த அதிகாரிகள் கலைஞர்களுக்கு எதிரானவர்களை ஊக்கப்படுத்தும பொழுது கலைஞர்கள் எங்ஙனம் வாழ இயலும்?
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/16/2010 6:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/16/2010 6:42:00 AM