திங்கள், 15 நவம்பர், 2010

சாலைகள் நரபலி பீடங்களா?

சாலைகள் நரபலி பீடங்களா?


சாலை விபத்துகளில் குடும்பம் குடும்பமாகப் பலியாகும் செய்தி ஒவ்வொரு நாளும் உள்ளத்தைச் சுட்டெரிக்கிறது, இதயத்தை அலைக்கழிக்கச் செய்கிறது என்று தமிழக முதல்வர் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.ஒவ்வொரு நாளும் உள்ளத்தை உலுக்குகிற விபத்துகள், நெஞ்சைப் பிழியும் கோரச்சாவுகள், இந்த விபத்துகள் குறைய வழியே இல்லையா என்று பெருமூச்சு விடுவதாகவும், வாகன ஓட்டிகளுக்கு 8-ம் வகுப்பு வரையிலாவது கல்வித்தகுதி அவசியம் என்று கருதுவதாகவும் அந்த அறிக்கையில் பதிவு செய்திருந்தார். நாடு வாழுமா, நல்லது நடக்குமா என்பதை நல்லோரே, நீவிர் தான் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் வேண்டியிருந்தார். முதல்வர் கூறியபடி எண்ணிப்பார்த்து, நல்லது நடக்குமா என்ற ஆதங்கத்தில், சில உண்மைகளைத் தோண்டித் துருவி எடுத்து வைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகிறது.  செம்மொழி மாநாட்டுக் கண்கவர் விழாவில், முதல்வர் தலைமையில் கோவையில் லட்சக்கணக்கானோர் தமிழமுதம் பருகிக் களித்திருந்தபோது, தருமபுரியில் உள்ள பாலக்கோடு, அவலத்தின் உச்சியில் வீறிட்டுக் கதறியது. திருமண கோஷ்டியை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து, 18 உயிர்கள் நசுங்கிச் செத்ததற்கும், 35 பேர் பல்வேறு வகைகளில் படுகாயம் அடைந்ததற்கும், டிரைவரின் கல்வித் தகுதியின்மையா காரணம்? மினி லாரியை ஓட்டுவதற்கு முன், அரசு நடத்தும் டாஸ்மாக் கடையை ஒட்டிய பாரில், குமரவேல், சரக்கு அடித்த தகுதியின்மைதான் காரணம். சந்தேகம் இருந்தால், ஐ.ஜி. சிவனாண்டியையும், தருமபுரி முன்னாள் மாவட்ட ஆட்சியர் அமுதாவையும் தமிழக முதல்வர் நினைவுகூரச் சொல்லலாம். ஓட்டுநர்களுக்கு 8-ம் வகுப்பு கல்வித்தகுதியை உறுதி செய்வது நல்ல முற்போக்கு நடவடிக்கைதான். ஆனால், முச்சந்திகள்தோறும் உள்ள 7,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் பார்களில் குடித்துவிட்டு, குறைந்தபட்சமாக 10 லட்சம் பேர்களாவது தினமும் சட்ட விரோதமாக வண்டி ஓட்டுகிறார்கள். இதைத் தடுக்காமல், பிற்போக்குத்தனமாக நடந்து கொள்கிறதே முதல்வரின் கீழுள்ள உள்துறை. கூட்டம் கூட்டமாகக் குடித்துவிட்டு ஓட்டுவதைத் தடுப்பதற்கு முதல்வர் தனது சுண்டு விரலை அசைத்தால்கூட, சாலை விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க முடியுமே! ஒரு சில புள்ளிவிவரங்களையாவது கணக்குப் போட்டுப் பார்க்கலாம். 2004-2005-ம் ஆண்டு  5,890 கோடியாக இருந்த டாஸ்மாக் சாராய விற்பனை, 2009-10-ம் ஆண்டு ஒரேயடியாக  14,000 கோடிக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. டாஸ்மாக் விற்பனைக்கு இணையாக, 2005-ம் ஆண்டு 9,215 சாலை விபத்துச்சாவுகள் என்ற நிலையிலிருந்து, 2009-ம் ஆண்டு 13,746 சாலை விபத்துச்சாவுகளாக உயர்ந்திருக்கிறது. வேறுவிதத்தில் சொல்வதானால், 2004-05-ல் தினசரி  16 கோடியாக இருந்த டாஸ்மாக் விற்பனை, 2009-10-ல் தினசரி  38 கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில்,  2005-ம் ஆண்டு, தினசரி 26 உயிர்கள் தமிழகச் சாலைகளில் பலியிடப்பட்டன. 2009-ம் ஆண்டோ, அவை வேகமாக அதிகரித்து, தினசரி 38 உயிர்கள் பலி கொடுக்கப்பட்டன. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், தமிழகச் சாலைகள் இப்பொழுது நரபலி பீடங்களாக ஆகிவிட்டன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சாலை விபத்துகளில் காயமடைந்தோர் மற்றும் படுகாயமடைந்தோர் எண்ணிக்கை மூன்று லட்சம் இருக்கும். இன்றைய அரசின் ஐந்தாண்டு காலத்தில் மட்டும் தமிழகச் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65,000 ஆக, உலக அளவில் புதிய கின்னஸ் சாதனை புரிந்திருக்கும். ஆமாம், சாராய விற்பனை லாபத்திலும்தான். போலியோ மற்றும் இதர நோய்களால், உடல் ஊனமுற்றவர்களைவிட, விபத்துகளில் தங்கள் கை, கால்களை, கண்களை, முதுகுதண்டுகளை இழப்பவர்கள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டு வருகிறார்கள்.மாற்றுத்திறனாளிகளுக்காக நலவாரியம் அமைத்துள்ள நிலையில், இப்படி விபத்துகளில் அவயவங்களை இழந்து முடங்குபவர்கள், தமிழக அரசின் பார்வையில், ஊனமுற்றவர்களா, மாற்றுத்திறனாளிகளா முதல்வர்தான் விளக்க வேண்டும்.முதல்வர் தலைமையில் மாநில அளவிலும், மாவட்டங்கள் அளவிலும், சாலைப்பாதுகாப்பு கவுன்சில்கள் அமைக்கப்பட்டன. ஆனால், சமூக ஆர்வலர்கள், மருத்துவ நிபுணர்கள் போன்றோர் இடம்பெறாமல், காவல்துறை மற்றும் போக்குவரத்து அதிகாரிகளை மட்டுமே இவை கொண்டுள்ளன. தெளிவான நடவடிக்கைகள், பரிந்துரைகள், திட்டங்கள் இல்லாமல் இக்கவுன்சில் வெறும் காகிதப் புலியாக உள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்று, ஆண்டுக்கு ஒருமுறை சாலைப்பாதுகாப்பு வார விழாச் சடங்கு கொண்டாடுவது மட்டும்தான் ஒற்றை அம்சக்கொள்கையாக உள்ளது. 2006-ம் ஆண்டு, 11,009 சாலை விபத்துச்சாவுகள் தமிழகத்தில் ஏற்பட்டன. இவற்றைப் படிப்படியாக 20 சதவீதம் குறைத்து 2013-ம் ஆண்டுக்குள் 8,800 சாவுகள் என்று குறைக்கப் போவதாக  உள்துறை உறுதிமொழி எடுத்தது. ஆனால், இந்தச் சாவு எண்ணிக்கை கடந்த ஆண்டு 13,840-ஆக உயர்ந்துள்ளபோதிலும், வெறுமனே கைகளைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்து வருகிறது. அதேசமயத்தில், தமிழகத்தில் ஏற்கெனவே 6 சாராய ஆலைகளுக்கு அனுமதி இருந்தநிலையில், இதே உள்துறை, மேலும் 8 ஆலைகளுக்கு அனுமதி அளித்து, சுறுசுறுப்பைக் காட்டியுள்ளது. இனி மொத்தம் 14 ஆலைகள் இரவும் பகலும் சாராய உற்பத்தி செய்து, தமிழக ஆண் மக்களின் வாய்களில் மதுவைத் திணிக்கும். அதனால், 2013-ம் ஆண்டு, குறைய வேண்டும் என்று உள்துறை வைத்துள்ள இலக்குக்கு மாறாக, சாலை விபத்துச்சாவுகள் அதிகரிப்பதோடு, அவற்றுக்கு மிகப்பெரிய காரணியான சாராய விற்பனையும் புதிய வரலாறு படைக்கும் என்றால் மிகையில்லாத கூற்று. 96 சதவீத சாலை விபத்துகளுக்கு, ஓட்டுநர்களின் தவறுகளே காரணம் என்று தமிழகப்  போக்குவரத்துத்துறை கூறுகிறது. வேகமாக ஓட்டுவதும், குடித்துவிட்டு ஓட்டுவதும்தான் சாலை விபத்துகளுக்கு முதன்மைக் காரணம் என்று உள்துறையும் மீண்டும் மீண்டும் பதிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஓராண்டில் நடக்கும் 60,000 சாலை விபத்துகளுக்கு, பல்வேறு காரணங்கள் மற்றும் சூழ்நிலைகள் இருக்கலாம். ஆனால், 60 விழுக்காடு சாலை இறப்புகளுக்குக் குடித்துவிட்டு ஓட்டுவதே முதன்மைக் காரணம் என்று பல புள்ளிவிவரங்கள் மூலம் யூகிக்க முடிகிறது. காவல்துறைத் தலைவர்களும் இதையே உறுதி செய்துள்ளனர். இன்று, தமிழக அரசின் சொந்த வருவாயில், கிட்டத்தட்ட 30 சதவீத அளவுக்குச் சாராய விற்பனையில் இருந்து கிடைக்கும் நிலைதான் உச்சகட்ட அவலமாக மாறியுள்ளது. இன்றைய 15,000 கோடி சாராய விற்பனையை, இனி ஆண்டுதோறும் அதிகரிக்க வேண்டுமானால், மேலும் மேலும் அதிக விற்பனை இலக்கு வைக்க வேண்டும்.இலக்குகள் எட்டப்பட வேண்டுமானால், யாரும், எந்த வயதினரும், எந்த நேரமும், எங்கும், எவ்வளவு வேண்டுமானாலும், குடித்துவிட்டு ஓட்டலாம், விபத்து ஏற்பட்டு சாகலாம் அல்லது யாரையாவது சாகடிக்கலாம், அரசும், காவல்துறையும் கண்டுகொள்ளாது. உள்துறையின் வலது கையான டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு வைத்து விற்பனை செய்து, குடித்துவிட்டு ஓட்ட உற்சாகப்படுத்தும்போது, உள்துறையின் இடது கையான காவல்துறை, என்ன செய்து விட முடியும்? குடித்துவிட்டு ஓட்டுவதைத் தடுப்பதற்கு, காவல்துறை எடுக்கும் முயற்சிகள் மிக மிக மோசம் என்றும், அப்படி ஏதாவது முயற்சி எடுத்து ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கு போக்குவரத்துத் துறைக்குப் பரிந்துரை செய்தாலும், போக்குவரத்துத்துறை கண்டுகொள்வதில்லை என்றும்  முன்னாள் காவல்துறைக் கூடுதல் தலைவர் டாக்டர் ஷியாம் சுந்தர் தெளிவாக எழுதியுள்ளார். அதனையே, அரசின் சிறப்புச் செயலரும் துறை சார்ந்த சுற்றறிக்கைகளில் வழிமொழிந்துள்ளார். 21 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு சாராயம் விற்பனை செய்யக் கூடாது என்று அரசாணையே உள்ளது. ஆனால், நடைமுறையில் 18 வயது இளைஞர்களும், விடலைகளும்கூட, குறுக்கும் நெடுக்குமாக டூ வீலர்களை நிறுத்திவிட்டு, டாஸ்மாக் பார்களில் ஆற அமரக் குடித்துவிட்டு, மீண்டும் ஓட்டிச் செல்வதுதான் தினசரி அலங்கோலக் காட்சியாக உள்ளது. தண்ணீர் மற்றும் மணல் லாரி ஓட்டுநர்கள், ஆட்டோ, டாக்ஸி, வேன் டிரைவர்கள், ஏன் அரசுப் பேருந்து ஓட்டுநர்களில் கூட, பலர் குடித்துவிட்டோ, குடித்த பாதிப்புடனோ, தினமும் வண்டிகளை இயக்குவதுதான் நிதர்சனம்.விபத்துகளில் அடிபட்டு மயக்க நிலையில் வருபவர்கள் குடித்திருந்தால், அவர்களுக்கு அவசர சிகிச்சைகூட அளிக்க முடியாத நிலையில் தவித்து வருகின்றனர் மருத்துவர்கள். தமிழக மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்குக் கொண்டு வரப்படும் விபத்தில் சிக்குண்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களும், உதவியாளர்களும் மன அழுத்தத்துக்கு ஆள்பட்டு வருகிறார்கள். அதனால், அவர்களுக்கே மனநோய் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து வருகிறது. குடித்துவிட்டு ஓட்டுபவருக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, 6 மாதம் சிறைத் தண்டனை அளிக்க முடியும். குடித்துவிட்டு, விபத்து ஏற்படுத்துபவருக்கு, செக்ஷன் 304(ஏ) பிரிவின்படி, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை அளிக்க முடியும். ஆனால், தமிழக அரசும், உள்துறையும், அதன் அங்கமான டாஸ்மாக் நிர்வாகமும், பார் உரிமையாளர்களும் இணைந்து, மது விற்பனையை அதிகரிக்க வெளிப்படையாகவே பல சட்ட மீறல்களில் ஈடுபடுவதோடு, குடித்து விட்டு ஓட்டுவதற்கும் தாராளமாக அனுமதிக்கின்றனர். டாஸ்மாக் பார்கள் மட்டுமல்ல, ஐந்து நட்சத்திர விடுதிகள், "பப்', கடற்கரைச்சாலை உல்லாச ரெசார்ட்கள், ஹோட்டல்களில் உள்ள பார்கள் எல்லாவற்றிலுமே இந்தச் சட்டவிரோதச்  செயல்பாடுகள்தான் வாடிக்கை. இந்த நிலையில், தமிழக அரசு என்ன செய்யப்போகிறது?
கருத்துகள்

தமிழக அரசு வேறு என்ன செய்யப் போகிறது? யாருக்கோ எழுப்பப்பட்ட கேள்வி என்று அமைதி காக்கும். தன் மது விற்பனையைப் பெருக்க வேறு வழிகளை ஆராயும். உண்மையில் சாலை நேர்ச்சிகளிலும் (விபத்துகளிலும்) மருத்துவமனகைளிலும் இறப்பவர்கள் பெரும்பகுதியினர் குடிக்கு அடிமைகளே! பல இல்லறங்கள் சிதையவும் காரணம் குடி அடிமையரே! குடி அடிமையரை ஊக்குவிக்கும் மதுவழிப்படுத்தும் தமிழக அரசே முதல் குற்றவாளி.அரசியல ்தலைவர்களில் திரு இராமதாசு ஒருவர் மட்டுமே மதுவிற்கு எதிரான குரலைத் தொடர்ந்து எதிரொலித்து வருகிறார். தற்கொலைக்கு இணையான மதுக் குடியிலிருந்து பெறும் வருவாய் கொண்டே அரசு இலவசங்களை அளித்து வருகிறது என்பதைக் கட்டுரையாளர் பொது மக்களிடையே விளக்கித் தொண்டாற்ற வேண்டும். கட்டுரையாளருக்குப் பாராட்டுகள். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/15/2010 5:16:00 AM
What you have written are 100 percent correct. But who is going to bell the cat.
By Gokarnesan
11/15/2010 2:29:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக