அரசு உதவி போதுமானதாக இல்லாததாலும், உறவினர்களின் ஒதுக்குதலாலும் கைவிடப்பட்ட ஏதுமறியா எச்.ஐ.வி. தொற்றுக் குழந்தைகள், தங்களைத் தத்தெடுத்து உதவிக் கரம் நீட்டுபவர்களை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 0.31 சதவீதம் பேர் (சுமார் 20 லட்சம்) இப்போது எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் (4 சதவீதம்) 15 வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் என்பது கூடுதல் கவலை. எச்.ஐ.வி. தொற்றுள்ள கருவுற்ற தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவாமல் தடுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படாதபோது பிறந்தவர்கள் இவர்கள். 2003-ம் ஆண்டில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து எச்.ஐ.வி. தொற்றுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நோய் தாக்குதல் அதிகமாக உள்ள 60 ஆயிரம் குழந்தைகளில் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள் ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 8,000 குழந்தைகள் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வருகின்றனர். இதில் 2,686 குழந்தைகள் ஏ.ஆர்.டி. மருத்துவ சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், இந்தக் குழந்தைகளில் பெரும்பாலானோர் தாய், தந்தையரை எய்ட்ஸ் நோய்க்குப் பலி கொடுத்தவர்கள். மீதமுள்ள குழந்தைகளும் தாய் அல்லது தந்தை யாரேனும் ஒருவரை இழந்தவர்கள். உதாரணமாக மாநிலத்திலேயே எச்.ஐ.வி. தொற்று அதிகம் உள்ள சேலம் மாவட்டத்தில் 657 குழந்தைகள் எச்.ஐ.வி.யுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 89 குழந்தைகள் தாய், தந்தை இருவரையும் இழந்து தாத்தா, பாட்டி, உறவினர், தொண்டு நிறுவனங்களில் வாழ்கின்றனர்.மேலும் 290 சிறுவர்கள் தாய் அல்லது தந்தையை இழந்தவர்கள். இவர்களைத் தவிர எச்.ஐ.வி. தொற்று இல்லாமல் ஆனால், எச்.ஐ.வி.க்காக தனது பெற்றோரைப் பறி கொடுத்து ஆதரவற்றவர்களாக 141 பேர் வாழ்ந்து வருகின்றனர். எவரோ செய்த தவறுக்காக ஒன்றும் அறியாத குழந்தைகள் தண்டனை அனுபவித்து வருவதே கொடுமை என்று எண்ணத் தோன்றும் இந்தச் சமயத்தில், வாழ்வின் இறுதி நாளைத் தெரிந்து கொண்டே உயிர் வாழும் இந்தப் பிஞ்சுகள் சமுதாய ஒதுக்குதலுக்கு ஆளாவதுடன் போதிய உதவிகளும் இன்றி அல்லல்படுகின்றனர். பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில் எச்.ஐ.வி. தொற்றுடன் வாழும் சிறுவர்களுக்குப் போதிய உதவி கிடைக்காத நிலை இருந்து வந்தது.இதையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு முதல் எச்.ஐ.வி.யுடன் வாழும் குழந்தைகள் அறக்கட்டளை தொடங்கி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளை மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு 2 ஆயிரமும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு 3 ஆயிரமும், 11, 12-ம் வகுப்பு முதல் கல்லூரிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு 5 ஆயிரமும் இந்த அறக்கட்டளை மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை அவர்கள் சீருடை, நோட்டுப் புத்தகம் வாங்குவதற்காகவும், தேர்வுக் கட்டணம், கல்விக் கட்டணத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர். இருப்பினும் ஆண்டுக்கு ஒரு முறை அரசு கொடுக்கும் நிதி உதவி சராசரியாக நாளொன்றுக்கு 10 மட்டுமே. உடல் நலனைக் காப்பதற்கோ, சத்துள்ள உணவை வாங்கிக் கொள்ளவோ, பிற தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கோ நிச்சயம் போதவில்லை என்பதுதான் இவர்களது குறையாக உள்ளது. தன்னை ஆட்கொண்டிருக்கும் நோயைப் பற்றியும், அதன் கொடூரம் குறித்தும் நன்கு தெரிந்திருந்தாலும் வாழும் நாள்களில் ஏதாவது ஒன்றைச் சாதித்துவிட்டுச் செல்ல வேண்டும் என்ற லட்சிய வேட்கையில், உறுதியான மன நிலையில் வாழ்ந்து வரும் சிறுவர், சிறுமியர் ஏராளமாக உள்ளனர். இவர்களின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு தனியார் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் முன்வர வேண்டும்.வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தங்களைத் தத்தெடுத்து உதவிக்கரம் நீட்டமாட்டார்களா என்று ஏங்கும் குழந்தைகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் முயற்சியில் எச்.ஐ.வி.யுடன் வாழும் குழந்தைகள் அறக்கட்டளை, தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு முனைப்பில் ஈடுபட்டுள்ளது. இந்தச் செய்தி நிச்சயம் இந்தச் சிறுவர்களுக்கு குழந்தைகள் தின இனிப்பாக அமையும் என்று நம்புவோம்!
கருத்துகள்

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/15/2010 5:22:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English11/15/2010 5:22:00 AM