புதன், 17 நவம்பர், 2010

இதைப்படிக்கும் இக்காலத் தலைமுறையினருக்குக் காங். கட்சி தூய்மையின் பிறப்பிடம் என்று எண்ணத் தோன்றும். இதுபோன்ற நடுநிலை நடவடிக்கைகளுக்கு விலையாக பெரோசு காந்தி தன் உயிரையே கொடுத்தார் என்பதையும் இதே டி.டி.கே.  மீதான ஊழல் தொடர்பில் காங். எவ்வாறு நடந்து  கொண்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனினும் அரசியல் பண்பாடும் நாடாளுமன்ற மரபும் தேய்பிறைபோல்  இறங்கு முகமாகச் செல்கிறது என்பது மட்டும் உண்மை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
ஜனநாயகம் அழியும் - ஊழல் நாயகம் ஓங்கும்

First Published : 17 Nov 2010 04:09:40 AM IST


1957-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதியன்று இந்திய நாடாளுமன்றத்தில் மிகமுக்கியமான ஒரு பிரச்னையை பெரோஸ் காந்தி எழுப்பி, அது குறித்து  விவாதம் நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். பிரதமர் நேருவின் மகளான இந்திராவின் கணவரான பெரோஸ் காந்தி இப்பிரச்னையை எழுப்பியதால் நாடாளுமன்றத்தின் முழு கவனமும் அதன்பால் திரும்பியது.பெருமுதலாளியான ஹெச்.டி. முந்திராவின் நிறுவனங்களில் ஆயுள் காப்பீட்டுக் கழகம் செய்துள்ள முதலீடு பற்றியதே இப்பிரச்னை ஆகும். 1957-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நாடாளுமன்றத்தில் இப்பிரச்னை குறித்து ஒன்றரைமணி நேர விவாதம் நடைபெற்றது. விவாதத்தைத் தொடக்கிவைத்துப் பேசிய பெரோஸ் காந்தி, பின்வருமாறு குற்றம்சாட்டினார். 1957-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி முந்திரா நிறுவனங்களில் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய்களும் மற்றும் அதே நிறுவனங்களில் மேலும் ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய்களும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. நொடித்துப்போன நிதிநிலைமையில் முந்திராவின் நிறுவனங்கள் இருந்தபோது அவரை அதிலிருந்து மீட்பதற்காகவே ஆயுள் காப்பீட்டுக் கழகம் இவ்வளவு பெரும்தொகையை அந்நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறது. தனி ஒரு மனிதரை நிதி நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்காகவே இந்த வழியை ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடைப்பிடித்திருக்கிறது. எனவே, இந்தப் பணப்பரிமாற்றம் குறித்து உடனடியாக விசாரணை நடத்த அரசு முன்வர வேண்டும் என அவர் வற்புறுத்தினார். இந்தியக் கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் எஸ்.ஏ. டாங்கே, சோஷலிஸ்ட் கட்சித் தலைவர் அசோக் மேத்தா, பிரபாத்கர், ராம் சுபாத் சிங், மகாவீர் தியாகி உள்பட பலர் இக்குற்றச்சாட்டை வலியுறுத்திப் பேசினார்கள். இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்து டி.டி.கிருஷ்ணமாச்சாரி பேசும்போது பின்வருமாறு குறிப்பிட்டார். இந்த அவைக்குப் பதில் கூற வேண்டிய பொறுப்பிலிருந்தோ, கடமையிலிருந்தோ, விலகிச்செல்லவோ, வேறு சில அதிகாரிகள் மீது பழிபோடவோ நான் விரும்பவில்லை. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை நிதியமைச்சகம் நிர்வகிக்கவில்லை. அக்கழகத்தின் அன்றாட நடவடிக்கைகளில் நான் தலையிடுவது சரியானதாகவோ அல்லது நடக்கக்கூடியதோ அல்ல. பிற நிறுவனங்களின் பங்குகளை வாங்கும்போது அதற்கென அமைக்கப்பட்ட முதலீட்டுக் குழுவைக் கலந்தாலோசனை செய்துதான் வாங்கப்படுகின்றன. ஆனாலும் இந்த அவையில் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுவிட்டதன் காரணமாக எவ்வித சந்தேகத்துக்கும் இடமளிக்கக்கூடாது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் உயர் அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அதுகுறித்து முழுமையாக ஆராயப்பட வேண்டும் என்று கூறி விசாரணைக் கமிஷன் அமைக்க அவர் ஒப்புக்கொண்டார். அதற்கிணங்க 1958-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி நீதிபதி எம்.சி. சக்ளா தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. இவ்வளவுக்கும் அமைச்சராக இருந்த டி.டி.கே.,  நேருவுக்கு மிக நெருக்கமானவர். குற்றம்சாட்டிய பெரோஸ் காந்தி அவரது சொந்த மருமகன். தனது மாமனார் தலைமையில் இயங்கும் அரசுக்கு இதனால் பெரும் தலைக்குனிவு ஏற்படும் என பெரோஸ் காந்தி நினைத்து அமைதியாக இருக்கவில்லை. ஊழலை யார் செய்தாலும் அம்பலப்படுத்தி அதைச் செய்தவர்களைத் தண்டிக்க வேண்டும் என அவர் உறுதி பூண்டிருந்தார். 1958-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதியே அதாவது அமைக்கப்பட்ட 3 நாள்களிலேயே சக்ளா கமிஷன் விசாரணையைத் தொடங்கியது. 1958-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி விசாரணையை முடித்து பிப்ரவரி 10-ம் தேதி சக்ளா கமிஷன் தனது அறிக்கையை அரசிடம் அளித்தது. முந்திரா பிரச்னை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட 30 நாள்களில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு அடுத்த 20 நாள்களில் முழுவிசாரணையும் முடித்து அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. விசாரணைக் கமிஷனின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய குறிப்புகள்:  முந்திரா நிறுவனம் தன்னுடைய பங்குகளை எப்படியாவது விற்க வேண்டும் என்பதில் காட்டிய ஆர்வத்தைவிட, அதை வாங்கியவர்கள் மிகுந்த அவசரம் காட்டியுள்ளனர்.  சந்தையில் நற்பெயரில்லாத முந்திராவுடன் எத்தகைய முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துகொள்ளாமல்  இந்தப் பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.   பல்வேறு போலியான பங்கு ஆவணங்கள் குறித்த வழக்குகளில் முந்திரா சம்பந்தப்பட்டுள்ளார் என்பதையும், பல வங்கிகளை மோசடி செய்துள்ளார் என்பதையும் கவனிக்காமல் இந்தப் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் முதலீட்டுக் குழுவின் கவனத்துக்கு இந்தப் பிரச்னை  கொண்டு செல்லப்படவேயில்லை. நிதித்துறைச் செயலராக இருந்த ஹெச்.எம். படேல் அறிவுரையின் பேரிலேயே முந்திரா பங்குகள் வாங்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், இந்த விவரங்களை நிதியமைச்சர் அறியாமல் இருக்க முடியாது. தன் கீழ்பணியாற்றும் அதிகாரிகள் செய்யும் செயல்களுக்கு அமைச்சர் முழுமையான பொறுப்பை ஏற்றுத் தீரவேண்டும். தனது விருப்பத்துக்கும் தான் கூறியதற்கும் மாறாக அதிகாரிகள் நடந்துகொண்டதாக அவர் ஒருபோதும் கூறமுடியாது என விசாரணைக் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட உடனேயே பிப்ரவரி 5-ம் தேதியன்றே நிதியமைச்சர் டி.டி.கே. தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பிரதமருக்கு அவர் அனுப்பிய விலகல் கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது முக்கியமானதாகும்.நிதித்துறைச் செயலர் மேற்கொண்ட நடவடிக்கைக்கு அமைச்சர் என்ற முறையில் நான் பொறுப்பாளி என்பது சரியானதாகும். ஏனென்றால் நான் பிரதமருக்கும் நாடாளுமன்றத்துக்கும் பதில்கூற வேண்டிய பொறுப்பில் உள்ளவன். இதன் காரணமாக என்னை உடனடியாக விடுவிக்கும்படி வேண்டிக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். அதே நாளில் பிரதமர் நேரு டி.டி.கே.க்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார்.  இந்தப் பிரச்னைக்கு யார் பொறுப்பாளியாக இருந்தாலும் நமது நாடாளுமன்ற மரபின் அடிப்படையில் அமைச்சர்தான் முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகச்சரியானது. மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றி அமைச்சர் எதுவும் அறிந்திருக்காவிட்டாலும், மற்றவர்களின் நடவடிக்கைகளுக்கு நேரடிப் பொறுப்பாளியாக இல்லாவிட்டாலும் அதற்கான பொறுப்பை அவர் ஏற்றுத்தீர வேண்டிய நிலை உள்ளது.  நாம் மிகமுக்கியமானதாகவும் அடிப்படையானதாகவும் நல்ல மரபுகளைப் பின்பற்றியே தீரவேண்டும். இந்தப் பிரச்னையில் உங்களுடைய பங்கு என்பது மிகமிகச் சிறியது என்பதில் எனக்கு எள்ளவும் ஐயமில்லை என்று எழுதிவிட்டு அவருடைய பதவி விலகலை ஏற்கும்படி குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரை செய்தார். உன்னதமான ஜனநாயக மரபுகளை நிலைநாட்டுவதில் பிரதமராக இருந்த நேருவும்  நிதியமைச்சராக இருந்த டி.டி.கே.யும் உறுதியாக இருந்தார்கள் என்பதை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டுகிறது. ஆனால், 53 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றைய இந்தியாவில் நடைபெறுவதைப் பார்த்தால் அதிர்ச்சிதான் ஏற்படுகிறது.  தாங்கள் நிலைநாட்டிய உன்னதமான மரபுகள் துச்சமாக மதிக்கப்படுவதைக் காண நல்லவேளையாக அந்தத் தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை. இந்தியாவில் நடைபெற்ற ஊழல்களில் அலைக்கற்றை ஊழல்தான் மிகமிகப்பெரிய ஊழலாகும். மத்திய அரசின் ஓராண்டுக்கான நிதி வருவாயில் மூன்றில் ஒருபங்குக்கு இது சமமானதாகும். பிரதமரின் அலுவலகம், சட்ட அமைச்சகம் ஆகியவை தெரிவித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, அமைச்சர் ஆ. ராசா தொலைத்தொடர்புத் துறையில் அனுபவம் இல்லாத புதிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கினார் என்பது குற்றச்சாட்டாகும். இந்த அலைக்கற்றைகளை அளிப்பதில் ஏலமுறையைப் பின்பற்றாமல் முதலில் வருபவர்களுக்கு முதலிடம் என்ற முறையைப் பின்பற்றி 122 நிறுவனங்களுக்கு மொத்தம் 9,013 கோடி ரூபாய்களுக்கு இதற்கான அனுமதிகளை வழங்கினார். இவ்வாறு அனுமதிபெற்ற பல நிறுவனங்கள் மனை வணிகத்தில் ஈடுபட்டிருப்பவை. அலைவரிசை ஒதுக்கீட்டை மிக மலிவான தொகைக்குப் பெற்ற இந்த நிறுவனங்கள், அடுத்த ஒரு சில மாதங்களுக்குள்ளாக அனுபவம் வாய்ந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவற்றைப் பலமடங்கு அதிக விலையில் விற்று பலஆயிரம் கோடி அளவுக்கு ஆதாயம் பெற்றன என்பது குற்றச்சாட்டாகும். இதனால் அரசுக்கு வரவேண்டிய ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்  அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில்  குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இப்பிரச்னை குறித்து உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ.யை விசாரிக்குமாறு ஆணை பிறப்பித்தது. ஓராண்டு கழித்த பிறகும்கூட எந்த உண்மையும் வெளிவரவில்லை. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் பகிரங்கமாக இந்த விசாரணையில் இதுவரை சி.பி.ஐ. ஒன்றுமே செய்யவில்லை. விஷயம் மிகக்கடுமையானது. குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சரோ இன்றைக்கும் பதவியில் இருந்து கொண்டிருக்கிறார். இதுதான் அரசாங்கம் செயல்படும் அழகா ஓராண்டு காலமாக நீங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் உங்களைத் தடுப்பது யார் என மிகக்கடுமையாகச் சாடி  நவம்பர் 15-ம் தேதியன்று விரிவான விசாரணை  நடத்தப்போவதாக எச்சரித்தது. இவ்வளவும் அப்பட்டமாக வெளியான பிறகும் அமைச்சர் ராசா தானாக முன்வந்து பதவி விலகவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கும் விசாரணை முடியும்வரை பதவியிலிருந்து விலகியிருக்கும்படி அவருக்கு ஆணையிடவில்லை. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்தக்குற்றச்சாட்டை எழுப்பியவுடனே பிரதமரே முன்வந்து நாடாளுமன்ற அனைத்துக் கட்சிக்குழுவை அமைத்து விசாரணைக்கு ஆணையிட்டிருப்பாரேயானால்  உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரசின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யவேண்டிய அவசியமே இருந்திருக்காது.   இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு மிகப்பெரிய ஊழல் நடப்பதற்கும் அதை மறைப்பதற்கும் காரணமானவர்களை மூடிமறைக்கத் துணைநின்ற பிரதமர் என்ற பழிச்சொல்லுக்கு ஆளானபோதிலும் மன்மோகன் சிங்கைச் செயல்படவிடாமல் தடுத்த பெருந்தலை எது? ராசா சார்ந்திருக்கிற தி.மு.க.வின் தலைவரான முதல்வர் மு. கருணாநிதி, ராசா ஒரு தலித்;  எனவேதான் அனைவரும் அவர் மீது பாய்கிறார்கள் என ஜாதிச் சாயத்தைப் பூசி ஊழலை மறைக்க முயன்றார். முந்திரா ஊழலைவிட ஒரு லட்சம் கோடி மடங்கு அதிகமாகச் செய்யப்பட்ட "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் உண்மையைக் கண்டுபிடிக்க ஓராண்டு காலமாக சி.பி.ஐ.யால் முடியவில்லை என்பதை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை. இந்த ஊழலிருந்து அமைச்சர் ராசாவைக் காப்பாற்ற முயன்ற பெரும் தலைகள் எவை எவை? இந்தத் தலைகள் இந்த ஊழலால் நிச்சயமாக ஆதாயம் அடைந்த தலைகளாகத்தான் இருக்க முடியும். எனவே இந்த ஊழலுக்குப் பின்னணியில் உள்ள அந்தத் தலைகளையும் அம்பலப்படுத்தி குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டிய கடமை நாடாளுமன்றத்துக்கு உண்டு. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நாடாளுமன்றத்தை முடக்காமல் இருந்தால் பதவி விலகுமாறு ராசாவை பிரதமர் கோரியிருக்க மாட்டார். தான் தவறு செய்யாமல் இருந்தும் தனக்குக் கீழிருந்த அதிகாரிகள் செய்த தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு சக்ளா கமிஷனின் அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்ட உடனேயே பதவி விலகினார் டி.டி.கே. ஆனால் இன்று தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி குற்றம் சாட்டிய பிறகும், உச்ச நீதிமன்றம் பகிரங்கமாகக் கண்டித்த பின்னாலும் பதவி விலக மறுத்தார் அமைச்சர் ராசா. பிரதமருக்குத் தெரியாமல் தான் எதுவும் செய்யவில்லை எனக் கூறினார். அப்போதும் பிரதமர் ஊமைச்சாமியாராகக் காட்சி தந்தார். சி.பி.ஐ. தடுமாறுகிறது. அதற்குக் காரணம் ராசாவுக்குப் பின்னணியில் உள்ள பலம் வாய்ந்த ஊழல் சக்திகளே என்பது வெள்ளிடைமலை. நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு முழுமையான விசாரணை நடத்தி, இந்த மாபெரும் ஊழலுக்குக் காரணமானவர்களையும், பினாமி பெயர்களில் மறைந்திருந்து கூட்டுக்கொள்ளை நடத்திய அனைவரையும் கண்டறிந்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவும், சூறையாடப்பட்ட மக்கள் பணத்தை மீட்கவும் வழி வகை செய்யப்பட வேண்டும். ராசாவின் பதவி விலகல் ஆரம்பமே தவிர முடிவல்ல. குற்றவாளிகள் கண்டறியப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் ஜனநாயகம் அழிந்து ஊழல் நாயகத்தின் கை மேலோங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக