திங்கள், 15 நவம்பர், 2010

இந்தியாவின் வளர்ச்சிக்கு நேருதான் காரணம்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

சென்னை, நவ. 14: இந்தியாவின் இன்றைய வளர்ச்சிக்கும், புகழுக்கும் முன்னாள் பிரதமர் நேருதான் காரணம் என்று மத்திய முன்னாள் இணையமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்  தெரிவித்தார். நேரு பிறந்த நாள், குழந்தைகள் தினம் மற்றும் நேரு யுவகேந்திரா அமைப்பு  தொடங்கப்பட்ட நாள் ஆகியவை சென்னை, அடையாறு இளைஞர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.அந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதார வல்லரசு நாடு என்ற நிலையை இந்தியா அடையும். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில் இத்தகைய வளர்ச்சியை எட்டும் என்று யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. பஞ்சமும், ஏழ்மையும் நிறைந்த நாடு இந்தியா என்று அமெரிக்கர்களும், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாட்டினரும் கூறினர். இந்தியாவுக்குச் சென்றால் தொற்றுநோய் ஒட்டிக் கொள்ளும் என்றும் கேலி செய்தனர். ஆனால், இன்று அதே அமெரிக்க நாட்டின் அதிபர் இந்தியாவுக்கு வந்து, இந்தியா வளரும் நாடல்ல; ஏற்கெனவே வளர்ந்து விட்ட நாடு என்று கூறுகிறார். இந்தியாவின் இத்தகைய மாபெரும் வளர்ச்சிக்கு ஜவாஹர்லால் நேருதான் காரணம். நாட்டின் முதல் பிரதமராகப் பொறுப்பேற்ற அவர், சர்வதேச அரங்கில் இந்தியாவின் நிலையை உயர்த்தவும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் மேற்கொண்ட முயற்சிகள்தான், இன்று இந்தியாவை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது. இந்நிலையில், நாட்டின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும்; இளைஞர்களின் திறமைகளை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கோடு தொடங்கப்பட்ட நேரு யுவகேந்திரா அமைப்பினை இளைஞர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மயிலாப்பூர் எம்எல்ஏ, எஸ்.வி. சேகர், நம்மில் பலர் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ எனக் கருதி, மற்றவர்களுக்காகவே வாழ்கின்றனர். நம்மிடம் நேர்மை இருந்தால், நாம் எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. இதனை கவனத்தில் கொண்டு இளைஞர்கள் செயல்பட வேண்டும் என்று பேசினார். நிகழ்ச்சியில், இளைஞர் விடுதி காப்பாளர் எஸ்.ஆர். ராஜு, பொருளாதாரப் பேராசிரியர் பி. ராமநாதன், நேரு யுவகேந்திரா அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் சாந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்

கட்சியிலும் ஆட்சியிலும் குடும்பத்தை முதன்மையாக்கியவர், காசுமீரில் பெரும்பகுதியைச் சீனா பறித்தும் அமைதி காத்தவர். தேசிய இனங்களின் உரிமைகளை ஒடுக்கியவர். ஊழலை ஒழிக்காமல் ஊழலைச் சொல்பவர்களை ஒழிப்பவர் என மேலும் பல பெருமைகளுக்கும் உரியவர் நேரு. அவ்வாறெல்லாம் இல்லாமல் இருந்தால் அவரது அணிசாராக் கொள்கை இந்தியாவின் பெருமையை உயர்த்தியிருக்கும். 
அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
11/15/2010 4:27:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * Tamil English

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக