வெள்ளி, 19 நவம்பர், 2010

வ.உ.சி. சிலைக்கு மாலை

ஆங்கிலயேர்களின்  அடிமையாட்சியிலிருந்து விடுதலை பெறப் பெரிதும்  போராடித் தம் உடல், பொருள், வாழ்வை இழந்த  தொழிலாளர் தோழர், தமிழறிஞர்,  விடுதலைப் போராளி, செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளையும் நினைவு நாளையும் இந்திய அளவில் கொண்டாடச் செய்யவும்
அயலகங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களிலும் கொண்டாடச் செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்பன் இலக்குவனார் திருவள்ளுவன்
ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. சிலைக்கு மாலை


ஓட்டப்பிடாரம்,நவ.18:  வ.உ.சிதம்பரனாரின் 74-வது நினைவு நாளையொட்டி ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.ஓட்டப்பிடாரம்-புதியம்புத்தூர் பிரதான சாலையில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு ஓட்டப்பிடாரம் சட்டப் பேரவை உறுப்பினர் பெ.மோகன், ஊராட்சித் தலைவி ஜெயலட்சுமி ஆதிலிங்கம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறந்த அரசு அதிகாரிகள்: வ.உ.சி.யின் நினைவு நாள் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவரது சிலை தூய்மைப்படுத்தப்படவில்லை. அங்கு தோரணங்கள் உள்ளிட்ட அலங்காரங்கள் செய்யப்படவில்லை. ஓட்டப்பிடாரத்தில் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் அமைந்திருந்தும் எந்த ஓர் அரசு அதிகாரியும் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தவில்லை.
ஊரின் பெயர் ஒட்டப்பிடாரமா? ஓட்டப்பிடாராமா? சரியாகக் குறிப்பிட வேண்டுகிறேன். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக