ஞாயிறு, 16 மே, 2010

௧.) இப்பாடலை மாநாட்டின் மைய நோக்குப் பாடல் என்று சொல்வதைவிட மாநாட்டை முன்னிட்டு வெளியிடும் தமிழ்நெறி விளக்கப் பாடல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். ௨) உலகில் பெரும்பான்மைத் தமிழர்களின் எதிர்ப்பையும் தமிழ்நாட்டில் ஒரு சாராரிடம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ள இம்மாநாட்டை விழிப்புடன் நடத்த வேண்டும். செம்மொழி மாநாட்டில் அயல்முரசு (டிரம்) இசை எதற்கு? ஒப்பீட்டு அடிப்படையில் பிற கலையை அறியச்செய்யவோ பல கலை நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமையவோ வாய்ப்பிருப்பின் ஏற்கலாம். தமிழிசைவாணர்களுக்கு முதன்மை அளியுங்கள். ௩) அயல் இசையாய் இருப்பினும் பாரதியார், பாரதிதாசன், கவிமணி. நாமக்கல்லார் முதலான தமிழ்க்கவிஞர்களின் பாடலை இசைக்கக் கூடாதா? சிவப்புப் பகுதியில் விலை மகள் அழைக்கும் ஓ! இரசிக்கும் சீமானே வா என்னும் பாடலையா இசைப்பது? இதுதான் செம்மொழித் தமிழை உயர்த்தும் பண்பாட்டு நிகழ்ச்சியா? வெட்கமாகவும் வேதனையாகவும் உள்ளது? பொறுப்பாளர்கள் மைய நோக்கிற்கேற்ப இசை நிகழ்ச்சிகளை அமையுங்கள். ௪) கல்வெட்டு எழுத்துகளுக்கும் தமிழ் எழுத்துகளுக்கும் தொடர்பில்லாத பொழுது தமிழல்லாத பிற எழுத்து வடிவங்களை மேடைப்பின்னணியாக அமைத்ததும் தவறான அறிவூட்டலாக அமைகிறது. தவறான கொள்கையுடையவர்கள் மாநாட்டுக் குழுக்களில்செல்வாக்கு செலுத்துவதால் இந்த நிலைமை போலும்! தமிழ் மொழியை - தமிழ் இலக்கியத்தை- தமிழ் பண்பாட்டை - தமிழ் நாகரிகத்தை - தமிழ் வரலாற்றை - தமிழ்ச் செம்மையை உணர்த்தும் வகையில் மாநாட்டின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வடிவமையுங்கள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Latest indian and world political news information

சென்னை : ''தமிழின் சிறப்பையும், தொன்மையையும், பண்பாட்டையும், கலாசாரத்தையும், பழக்க வழக்கத்தையும் உலகம் அறியச் செய்யும் வகையில், செம்மொழி மாநாட்டு பாடல் அமைந்துள்ளது,'' என, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு மைய நோக்கப் பாடல் வெளியீட்டு விழாவில், முதல்வர் கருணாநிதி பெருமிதத்துடன் பேசினார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23 முதல் 27ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டின் மையநோக்குப் பாடலை முதல்வர் கருணாநிதி எழுதியுள்ளார்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இயக்குனர் வாசுதேவ்மேனன் பாடலை இயக்கியுள்ளார். இப்பாடலின், 'சிடி' வெளியீட்டு விழா, சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று நடந்தது. 'சிடி'யை வயலின் வித்வான் சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.

பாடல், 'சிடி'யை வெளியிட்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழ்ச் செம்மொழி மாநாட்டு பாடலை இயற்றுவது என முடிவு செய்த உடன், அதில் சங்ககாலம் முதல் கம்பன் காலம் வரை தமிழ்மொழியின் சிறப்பையும், தொன்மையையும், அதில் காட்டப்பட்டுள்ள தமிழரின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும் ஒரு பாடலில் அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழ்ச் செம்மொழி தான் என்பதை அனைவரும் ஏற்கும் வகையில் செய்ய வேண்டும்.

இவற்றையெல்லாமல் ஒரே பாடலில் கொண்டு வருவது எவ்வளவு இடர்பாடு நிறைந்தது என்பதை நன்றாக அறிவேன். அந்த பாடல் எழுதும்போது ஏற்பட்ட உணர்ச்சி எனக்கு மாத்திரமே தெரியும். அந்த உணர்ச்சிகளின் வெளிப்பாட்டில் ஏற்பட்ட மகிழ்ச்சியை இந்த பாடலுக்கு உங்களிடம் கிடைத்துள்ள வரவேற்பின் மூலம் அறிய முடிகிறது. எனக்கு முதுகில் அறுவை சிகிச்சை நடந்து, வலியுடன் மருத்துவமனையில் துடித்துக் கொண்டிருந்தபோது ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்ததை அறிந்து, அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்து, அவரை வாழ்த்தி கடிதம் எழுதி அனுப்பினேன். அவரின் மூலம் தமிழின் சிறப்பு உலகம் முழுவதும் பரவியுள்ளது.

இந்த பாடலின் முதல் வரியான, 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்பதன் பொருள், பிறப்பு என்பது எல்லாருக்கும் பொதுவானது; நாம் அனைவரும் ஒன்றே என்பதை குறிக்கும். அந்த வகையிலேயே உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 27 நாடுகளைச் சேர்ந்த 205 அறிஞர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் எல்லாம் இந்த பாடலின் மூலம் தமிழின் தொன்மையையும், சிறப்பையும் அறிவார்கள். அந்தளவிற்கு சிறப்பாக இந்த பாடலை அனைவரும் விரும்பும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துக் கொடுத்துள்ளார். அவரை எனக்கு அவ்வளவாக தெரியாது. அவரும் தமிழர், நானும் தமிழர் என்பது தான், எங்களை இணைத்துள்ளது.

இந்த பாடல் செம்மொழி மாநாட்டின் விளம்பர பாடலாக அமையும். இந்தப் பாடல் தான் செம்மொழி மாநாட்டின் துவக்கத்தில் ஒலிக்கப்படும். இந்த பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் அனைவரையும் செம்மொழி மாநாட்டிற்கு வருக வருக என வரவேற்கிறேன். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

விழாவில், துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பழகன், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன், பாடகி பி.சுசீலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக