செய்தி: 19.05.2009 கொழும்பு, மே 18: இலங்கை ராணுவத்துடன் இடையறாது போரிட்டு வந்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திங்கள்கிழமை காலை நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்தார். அவருக்கு மெய்க்காவலாக இருந்த நம்பிக்கைக்குரிய தளபதிகளும் அவருடன் உயிர் துறந்தனர். உதய நாணயக்கார தகவல்: பிரபாகரன் இறப்பு பற்றிய தகவலை ராணுவத்தின் பத்திரிகைத் தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார கொழும்பில் நிருபர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்தார். வெள்ளமுள்ளிவாய்க்காலுக்கும் வடக்கில் சிறிய நிலப்பரப்பில் சில விடுதலைப்புலிகள் இருப்பதை அறிந்து ராணுவத்தினர் அந்த இடத்தை நெருங்கினர். அப்போது சில வாகனங்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறத் தொடங்கின. அதில் ஒரு ஆம்புலன்ஸýம் இருந்தது. இலங்கை ராணுவ வீரர்கள் அந்த வாகனங்களைத் தடுத்து நிறுத்தவும் அவற்றில் இருந்தவர்கள் தப்பித்துவிடாமலும் இருக்க சுற்றிவளைத்து நின்று சரமாரியாகச் சுட்டனர். அதன் பிறகு அந்த வாகனங்கள் அப்படியே நின்றுவிட்டன. பிறகு சண்டை நடந்தது. நீண்ட நேர சண்டைக்குப் பிறகு வாகனங்களில் இருந்தவர்கள் யாரும் சுடவில்லை. அதன் பிறகு அங்கே சென்று வாகனங்களிலிருந்த உடல்களை வெளியே கொண்டுவந்து பார்த்தபோதுதான் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அதில் இருந்தது தெரியவந்தது. பிரபாகரனுடன் இறந்து கிடந்தவர்கள் பொட்டு அம்மான், சூசை ஆகியோராக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. இறந்தவர்களின் மரபணுக்களைக் கொண்டு இன்னின்னார் என்று உறுதி செய்துகொண்டு பிறகு அறிவிப்பதென்று ராணுவத் தலைமை முடிவு செய்திருக்கிறது. பொட்டு அம்மான்தான் விடுதலைப் புலிகளின் உளவுப்படைப் பிரிவின் தலைவராக இருந்தவர். சூசை என்பவர் கடல்புலிகளின் தலைமை தளபதியாக இருந்தார். சண்டையில் பிரபாகரன் இறப்பதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னால் அவருடைய மூத்த மகன் அந்தோனி சார்லஸýம் ஏராளமான விடுதலைப்புலிகளும் ராணுவத்துடன் நடந்த கடைசி கட்ட சண்டையில் இறந்தனர். 220-க்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளை அந்தச் சண்டையில் கொன்றதாக ராணுவம் தெரிவிக்கிறது. விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் பாலசிங்கம் நடேசன், விடுதலைப் புலிகள் சமரசப்பேச்சுக்கான செயலகத் தலைவர் எஸ். புலித்தேவன், கரும்புலிகள் என்று அழைக்கப்படும் கடற்படைப் பிரிவினரின் தலைவர் ரமேஷ், விடுதலைப் புலிகளின் போலீஸ் படைத் தலைவர் இளங்கோ, இதர மூத்த தளபதிகள் சுந்தரம், கபில் அம்மான் ஆகியோரும் இறந்தனர்.24 வயதாகும் சார்லஸ் அந்தோனியின் உடலை, ராணுவத்தினர் தேடுதல் வேட்டைக்காக வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தியபோது கண்டுபிடித்தனர். அவர்தான் விடுதலைப் புலிகளின் வான்படையை நிறுவி அதற்குத் தலைமை தாங்கினார். அவர்களுடைய தகவல் தொடர்புக்கான தொழில்நுட்ப விவரங்களையும் கையாண்டு வந்தார். கொழும்பு நகரின் மீது இரண்டு முறை தங்களுடைய விமானத்தில் பறந்து தாக்குதல் நடத்திவிட்டு வெற்றிகரமாக வவுனியாவுக்கு மீண்டார்.இலங்கை போலீஸ் படையில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றிவந்த நடேசன் பிறகு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். பிறகு அரசியல் பிரிவுத் தலைவராகப் பணியாற்றி வந்தார்.சார்லஸ் அந்தோனி இறந்துவிட்டார் என்பதை அறிந்த விடுதலைப் புலிகள் திங்கள்கிழமை காலை அவருடைய உடலைத் தேடி கண்டுபிடிக்கப் புறப்பட்டனர். அப்போது மறைவிலிருந்து வெளிப்பட்ட ராணுவத்தினர் அவர்களை நோக்கி சரமாரியாகச் சுட்டனர். பிறகு நடந்த சண்டையில் தேடிவந்த விடுதலைப் புலிகள் இறந்தனர். அதையடுத்து அந்த இடத்தில் ராணுவத்தினர் தேடுதல்வேட்டை நடத்தி, சார்லஸ் அந்தோனியின் உடலைக் கண்டுபிடித்தனர்.பிரபாகரன் இறந்த செய்தியை அனைத்து தொலைக்காட்சி செய்தி நிறுவனங்களும் திங்கள்கிழமை முற்பகல் முதலே ஒளிபரப்பத் தொடங்கின. இலங்கை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல், மரபணு சோதனை நடத்தியபிறகே அறிவிக்க முடியும் என்றது. அதே சமயம் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார், உடல் கிடைத்திருக்கிறது என்று உறுதிப்படுத்தியது.பொய், பொய், பொய்!லண்டன், மே 18: தமிழர்களுக்கு சாதகமில்லாத பொய் தகவல்களை இலங்கை அரசு திட்டமிட்டு வெளியிட்டு வருகிறது என்று புலிகளின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செ. பத்மநாபன் கூறியுள்ளார்.பிரிட்டனின் "சானல் 4' தொலைக்காட்சிக்கு திங்கள்கிழமை தொலைபேசி மூலம் அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறியுள்ளது:இலங்கை ராணுவம் கூறிவருவதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாது. தற்போது அவர்களால் வெளியிடப்படும் படங்கள் கூட இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.களத்தில் இறந்து கிடக்கும் பலரது உடல்களை ஊகத்தின் அடிப்படையில் அவராக இருக்கலாம், இவராக இருக்கலாம் என்று ராணுவம் கூறிவருகிறது.இருப்பினும் தற்போது 500 மீட்டர் பரப்பளவில் புலிகள் முடக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது என்று பத்மநாபன் கூறியுள்ளார்.
கருத்துக்கள்
இறவாமை வரம் பெற்றோர் யாருமில்லை. எனினும் தமிழ்த்தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் மரணமடைந்ததாகப் பன்முறை அறிவித்து அவர் வாழ்நாளை இந்தியமும் சிங்களமும நீட்டித்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் இன்னும் வாழ்கிறார் என்ற நம்பிக்கை கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்களில் குடி கொண்டுள்ளது. இந் நம்பிக்கை பொய்க்காமல் அவர் திரும்பி வருவார். தமிழ் ஈழக் குடியரசிற்குத் தலைமை தாங்குவார். வீர மரணம் அடைந்த அவரது திருமகனாருக்கும் பிற விடுதலைப் புலிகளுக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கும் நம் அஞ்சலி. நீங்கள் விதைத்த விதை வீணாகாது; உங்களின் உயிர்ப்பலிகள் உரமாகாமல் போகாது. நாளை நுமதே! இந்த நாளும் நுமதே!தமிழ் ஈழம் விரைவில் உலக ஏற்பு பெறும்.
வீர வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar thiruvalluvan
5/18/2010 12:56:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 5/18/2010 12:56:00 PM