சென்னை, மே 17: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகையால் நம் நாட்டு ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்தார். இலங்கை முள்ளிவாய்க்கால் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை கண்டனப் அக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது: "இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார். இலங்கையில் நடக்கும் தமிழர்கள் படுகொலை ஒரு இனப் படுகொலை என்று 1983-ம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கூறினார். அவரே, 1984 ஆகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் பேசும்போது, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழர்களின் பூர்வீக பூமி, அது தமிழர்களின் பூமி என்று குறிப்பிட்டார். அத்தகைய பூமியில் தமிழர்களுக்கு உரிமை இல்லை என்று கூறும் ராஜபட்ச ஜூன் 8-ம் தேதி இந்தியா வருகிறார். ராஜபட்சவின் ஒவ்வொரு இந்திய வருகையும், அவருக்கு இங்கு அரசால் அளிக்கப்படும் ஒவ்வொரு வரவேற்பும், இந்திய ஒருமைப்பாடு என்னும் மாபெரும் சுவரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். இலங்கைத் தமிழர்களின் தனி ஈழப் போர் இன்னும் முடியவில்லை. விரைவிலேயே அடுத்த கட்டப் போர் தொடங்கும். உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் அந்தப் போர்க்களம் நோக்கிச் செல்வார்கள். அப்போது தமிழகத்திலிருந்தும் அந்தப் போர்க்களம் நோக்கிச் செல்ல வாலிபர்கள் தயாராக வேண்டும். இலங்கையில் தமிழர்கள் படுகொலையை பொறுத்துக் கொள்ள முடியாத இளைஞர் முத்துகுமார் கடந்த ஆண்டு தீக்குளித்து உயிரிழந்தார். அவரது மரணம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த இளைஞரின் தியாகத்தைப் போற்றும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் தமிழ் தேச பொதுவுடைமைக் கட்சி சார்பில் அவரது சிலை திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்குக் காவல் துறையினர் கடைசி நேரத்தில் அனுமதி மறுத்துள்ளனர். தனியாருக்குச் சொந்தமான இடத்தில், முத்துகுமாருக்கு சிலை அமைப்பதை தடுப்பது ஏன்' என்று வினவினார் வைகோ. இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது: ஜெர்மனியில் யூத இன மக்களுக்கு எதிரான ஹிட்லரின் கொடுமைகளை ஐரோப்பிய நாடுகள் முதலில் கண்டுகொள்ளவில்லை. ஹிட்லரின் தாக்குதல் பிற ஐரோப்பிய நாடுகள் பக்கம் திரும்பிய பின்னரே, அந்த நாடுகள் ஹிட்லரை ஒடுக்க ஒன்று சேர்ந்தன. அதனால் இரண்டாம் உலகப் போர் என்னும் பேரழிவு ஏற்பட்டது. இப்போது இலங்கையில் ராஜபட்சவின் தமிழ் இன அழிப்பை உலக நாடுகள் வேடிக்கை பார்க்கின்றன. இதனால் தெற்காசியப் பகுதியே பாதிக்கும் அபாயம் விரைவில் ஏற்படக்கூடும் என்றார் பழ. நெடுமாறன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலர் சி. மகேந்திரன்: மொழி உணர்வு இல்லாமல் ஒரு அரசியல் கட்சி இயங்க முடியாது. இது, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் பொருந்தும். எனவேதான், இலங்கையில் தமிழினம் அழிக்கப்படுவதை எதிர்த்து எங்கள் கட்சி போராடி வருகிறது. கூட்டத்தில் சலசலப்பு: பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த காவல் துறை அதிகாரிகள், கூட்டம் நடத்த இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது, இப்போது இரவு 10.40 மணி ஆவதால் கூட்டத்தை முடிக்குமாறு கேட்டுக் கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த பார்வையாளர்கள், போலீசாருக்கு எதிராக முழக்கமிட்டனர். போலீசாரை நெருங்கி கூட்டத்தினர் சென்றனர். அவர்கள் அனைவரையும் திரும்பி இருக்கைக்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்ட வைகோ, நான் பேச வேண்டியதை, பேசிவிட்டுதான் உட்காருவேன் என்று கூறி பேச்சைத் தொடர்ந்தார். பின்னர் 10.54 மணிக்கு பேச்சை முடித்தார். இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
கருத்துக்கள்
1. இந்தியா வலிவாகவும் பொலிவாகவும் இருக்க வேண்டும் என்றால் இனவெறி பிடித்த படுகொலையாளன் இராசபக்சே இங்கு வர இசைவு தரக் கூடாது. ஆனால் கூட்டுக் கொலைகாரனை இந்திய அரச எவ்வாறு புறக்கணிக்கும்? எனவே இந்தியா முழுமையும் இக் கருத்தை எடுத்துச் செல்ல வேண்டுகிறேன். 2) முத்துக்குமார் சிலை திறப்பு இளந்தமிழர் இயக்கம் சார்பில்தான் அமைக்கப்பட்டது என எண்ணுகிறேன். வைக்கோ சரிபார்க்கவும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/18/2010 2:37:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/18/2010 2:37:00 AM