சேதமடைந்து காணப்படும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனக் கட்டடத்தின் ஒரு பகுதி.
சென்னை, மே 18: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் எப்போது இடிந்து விழுமோ என்ற பரிதாப நிலையில் உள்ளது. இதனால் பயந்து கொண்டே ஆசிரியர்கள் பாடம் எடுப்பதும், மாணவர்கள் படிப்பதும், ஊழியர்கள் பணி செய்வதுமான நிலை உள்ளது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் அடுத்த மாதம் நடைபெறும் வேளையில், இந்த நிறுவனத்தையும் புதுப்பித்து வளம் சேர்க்க வேண்டும் என்று உண்மையான தமிழ் ஆர்வம் உள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணாதுரை இருந்த போது சென்னையில் 2-வது உலகத் தமிழ் மாநாட்டு நடைபெற்றது. அந்த மாநாட்டையடுத்து மீதியிருந்த ரூ.3 லட்சத்தைக் கொண்டு, 1970-ல் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியால் தொடங்கப்பட்டது. தமிழ்த்துறை தொடர்பான கிடைப்பதற்கு அரிய புத்தகங்கள் இந்த நூலகத்தில் கிடைப்பது, தமிழார்வலர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களின் புத்தகங்களை நிறுவனத்தின் முழுச் செலவில் வெளியிடுவது, ஆய்வு மாணவர்களுக்கு சிறப்பான முறையில் பாடம் எடுப்பது, வாரத்துக்கு இருமுறை சொற்பொழிவுகள் நடத்துவது போன்றவை இந்த நிறுவனத்தின் சிறப்புகள். தரமணி வளாகத்தில் இந்திராகாந்தி திறந்தநிலைப் பல்கலைக்கழகம், மத்திய பாலிடெக்னிக், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், ஆய்வு நிறுவனம் என பல நிறுவனங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்வையிடும் அதே வேளையில், தமிழாராய்ச்சி நிறுவனத்தை நோக்கும்போது, ஏதோ ஒரு தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நினைவு இல்லத்துக்குள் (அல்லது மியூசியம்) நுழைந்தது போன்ற உணர்வு எழுகிறது. இந்த நிறுவனம் பாழடைந்து, மோசமாக உள்ளது. தரைத்தளம், முதல் தளம் போன்றவற்றில் கட்டடங்களின் சுவர்களில் உள்ள வெடிப்புகள் ஏராளம். முக்கியமாக கட்டடங்களின் சுற்றுச் சுவர் தனது நிலையில் இருந்து நிலத்தில் இறங்கியுள்ளது ஒரு விதமான அச்சத்தை ஏற்படுத்துகிறது. தவிர, மழைக் காலங்களில் சுவர்களில் இருந்தும், மேல் தளத்தில் இருந்தும் நீர்க் கசிவு ஏற்பட்டு, புத்தகங்கள் நனைவதும், பின்னர் கரையான்களால் அரிக்கப்படுவதுமாக உள்ளது. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட கருத்தரங்க அறையில் மழை நீர் ஒழுகுவதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் தமிழ்த் துறையில் அதிக எண்ணிக்கையில் நூல்கள் இடம்பெற்றிருப்பது தமிழாராய்ச்சி நிறுவனத்தில்தான். செவ்வாய்க்கிழமை கணக்குப்படி, 91,638 நூல்கள் உள்ளன. எனினும், இதைப் பராமரிக்க ஒரே ஒரு நூலகர், அவருக்கு ஓரிரு உதவியாளர்களே உள்ளனர். நூலகத்தைப் பார்த்தவுடன், நூல்கள் பயனற்றுப் போயிருப்பதால் சேமிப்புக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதோ அல்லது மாணவர்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளதோ என கேள்வி எழுவது இயற்கையே. புத்தக அலமாரிகளில் என்னென்ன நூல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்வையிட முடியாத அளவுக்கு இடநெருக்கடி. காற்றோட்டம், வெளிச்சம் போன்ற வசதிகளுக்கும் பஞ்சம். நூல்கள் சரியாக, முறையாகப் பராமரிக்கப்படாததால் (உதாரணமாக, மு.வ.-வின் இலக்கியங்கள், நாவல்கள்) அவற்றை உபயோகத்தப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, பல புத்தகங்களை கட்டி வைத்திருக்கும் நிலை உள்ளது. நூலகப் புத்தகங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி இடையில் நின்றதோடு சரி. அது மீண்டும் தொடரவில்லை. நூலகத்தின் மேன்மையை உணர்ந்து பத்திரிகை அதிபர் சிவந்தி ஆதித்தன் கட்டிக் கொடுத்த கட்டடம் தற்போது புத்தக சேமிப்புக் கிடங்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள இலக்கியம், கலைப் பண்பாட்டியல், சமூகவியல், பன்மொழிக் கல்வி, மொழியியல் என 5 துறைகளில் தற்போது எம்.பில். படிப்பில் 28 பேரும், பி.எச்டி. படிப்புகளில் 25 பேரும் படிக்கின்றனர். ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கையில் மாணவர்கள் சேருவது வழக்கம். பொதுவாக இந்த நிறுவனத்துக்கு 20 அகாதெமி அலுவலர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், 5 பேர் மட்டுமே உள்ளனர். காலிப் பணியிடங்களை நிரப்பினால் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சி மாணவர்கள் உருவாக வசதியாக இருக்கும். இந்த நிறுவனத்தில் படிக்கும் மாணவர்களுக்கு வேண்டிய வசதிகள் இல்லை. உதாரணமாக, இந்த மாணவர்கள் வகுப்பறையின் வெளிப்பகுதியில் அமர்ந்து உணவு உட்கொள்கின்றனர். கொரியா, மொரிஷியஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு படிக்கின்றனர். அவர்களுக்குத் தேவையான வசதியும் இல்லை. அவர்களுக்கான மொழி ஆய்வுக் கூடம் பயனற்றுப் போய் உள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படியாக உள்கட்டமைப்பு வசதி குறைவு, ஆசிரியர் எண்ணிக்கை குறைவு என பல குறைபாடுகளால் தமிழாராய்ச்சி நிறுவனம் செயல்படுகிறது. இது குறித்து நிறுவனத்தின் இயக்குநர் கரு. அழ. குணசேகரன் கூறுகையில், நிறுவனத்தின் உள்கட்டமைப்பு வசதிக்காக ரூ. 3.2 கோடிக்கு திட்ட முன்வடிவு அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தவிர, ரூ.12 லட்சத்தில் 2 வகுப்பறைகள் கட்டும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றார். உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள அதே வேளையில், சென்னையில் அண்ணா நடத்திய உலகத் தமிழ் மாநாட்டின் விளைவாக அமைக்கப்பெற்ற தமிழாராய்ச்சி நிறுவனத்தையும் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கருத்துக்கள்
தக்க சமயத்தில் இச் செய்தியை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள தினமணிக்குப் பாராட்டுகள். முதல்வரின் பார்வையிலும் விழுந்து தக்கன விரைவில செய்யப்படும் என எதிர்நோக்கலாம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/19/2010 4:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/19/2010 4:03:00 AM