புதன், 19 மே, 2010

சிங்கப்பூர் சொல்லும் பாடம்!

சிங்கப்பூர் சொல்லும் பாடம்!



கடந்த வாரம் வெள்ளி,​​ சனிக்கிழமைகளில் சிங்கப்பூர் டின்டேல் பல்கலைக்கழகமும்,​​ நமது ஊர் கலைஞன் பதிப்பகமும் இணைந்து ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கத்தை சிங்கப்பூரில் ​ நடத்தின.​ இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கத் தமிழகத்திலுள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து மட்டுமல்லாமல் பல இந்திய மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்தும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.​ கருத்தரங்கின் விவாதப் பொருள் "வாழ்வியலில் இலக்கியம்'.வந்திருந்த தமிழறிஞர்களான பேராசிரியர்கள் பலர்,​​ இலக்கியம் மிகவும் நீர்த்துப்போய்,​​ புதினங்கள்,​​ சிறுகதைகள்,​​ மரபுக் கவிதைகள்,​​ எல்லாமே சிதைந்து நீர்த்துப் போய்விட்டதாக வருத்தப்பட்டனர்.​ சிறுகதைகள் என்பது ஒரு பக்கக் கதைகள் என்றாகி,​​ போஸ்ட் கார்ட் கதைகள்,​​ ஸ்டாம்புக் கதைகள் என்றாகிவிட்டது என்று ஆதங்கப்பட்டனர் பலர்.​ எல்லாவற்றுக்கும் மேலாக,​​ பெருவாரியான தமிழறிஞர்களின் மனவேதனை தமிழ் படிப்பதே பயனற்ற ஒன்று என்கிற எண்ணப் போக்கு பெற்றோர்களுக்கும்,​​ மாணவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்பதாக இருந்தது.​ ​பன்னாட்டுக் கருத்தரங்குக்கு வெளிநாட்டில் கூடியிருந்த தமிழறிஞர்கள்,​​ பெருவாரியான தமிழகத்தின் மூத்த தலைமுறையினர் தங்களது மனதிற்குள் வெம்பி வெதும்பும் பிரச்னையைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.​ "தமிழ் படிப்பதால் வேலை கிடைக்குமா?',​ "தமிழ் படிக்காவிட்டாலோ,​​ தமிழ் மொழி இல்லாமல் போனாலோ என்ன குடியா முழுகிவிடும்?',​ "மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்துக்கான ஒரு கருவிதானே தவிர,​​ அதற்குமேல் முக்கியத்துவம் தரப்படும் அம்சமாக நாங்கள் கருதவில்லை' என்றும் பலர் குரலெழுப்பி வேதனைத் தீயில் நெய் வார்க்கவும் முற்படுகின்றனர்.மேலே சொன்ன கருத்துகளை வெளிப்படுத்துபவர்கள் அனைவருமே தாங்களோ,​​ தங்களது குழந்தைகளோ படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவிலோ,​​ வேறு வெளிநாடுகளிலோ வேலைக்குப் போக வேண்டும் என்கிற ஒரே குறிக்கோளுடன் வாழ்க்கையை அணுகுபவர்கள் என்பதுதான் உண்மை.​ இவர்கள் தெரிந்து கொள்ள மறுக்கும் ஒரு முக்கியமான விஷயம்,​​ மொழி என்பது ஓர் இனத்தின் அடையாளம் என்பதையும்,​​ அப்படி அடையாளம் இல்லாமல் இருப்பவன் ஏதாவது ஒரு கட்டத்தில் இரண்டும்கெட்டான் நிலையில் தத்தளிக்க நேரிடும் என்பதையும்!பன்னாட்டுக் கருத்தரங்கில் மேலே சொன்ன சர்ச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது,​​ வெளியே சிங்கப்பூர் தெருக்களில் இதேபோன்ற ஒரு சர்ச்சை எழுந்து,​​ சிங்கப்பூர் அரசு மக்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தும் விட்டிருப்பது பலருக்கும் தெரியாது.​ சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சர் நெக் எங்க் ஹென் ஒரு பத்திரிகைப் பேட்டியில்,​​ அடிப்படைக் கல்வித் திட்டத்தில் தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் குறைக்கப்படும் என்று வாய்தவறி உளறி மாட்டிக்கொண்டு,​​ கடைசியில் வெகுண்டெழுந்த சீன மக்களிடம் மன்னிப்புக் கேட்டதுடன்,​​ தாய்மொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் எள்ளளவும் குறைக்கப்படாது என்று பிரதமர் லீ சீன் லூங்கே உறுதி அளிக்க வேண்டி வந்திருக்கிறது.சிங்கப்பூர் நகரிலுள்ள "ஹுங்க் லிம் பார்க்' என்கிற இடத்தில் பேச்சாளர் மூலை என்றொரு இடம் இருக்கிறது.​ இங்கே யார் வேண்டுமானாலும் தங்களது கருத்துகளைப் பேசலாம்.​ வழக்கத்துக்கு விரோதமாக இந்தப் பூங்காவில் சீனர்கள் குவிந்து விட்டனர்.​ அரசின் முடிவுக்கு எதிராகப் பெற்றோர்கள் குரலெழுப்பி தங்களது மொழிப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.​ இங்கே கூடிய சீனர்கள் வயதான கிழவர்கள் என்று நினைத்து விடாதீர்கள்.​ கோட்டும் சூட்டும் அணிந்த இளைஞர்கள்தான் பெருவாரியானவர்கள்.​ இவர்கள் அனைவருமே நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள்.​ படித்தவர்கள்.சீனர்கள் மட்டுமல்ல,​​ மலாயர்களும் சரி,​​ தங்களது தாய்மொழிக்குப் பாடத்திட்டத்தில் தரப்படும் முக்கியத்துவம் குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.​ இதைப்பற்றி அதிகமாகக் கவலைப்படாமல் இருந்தவர்கள் நமது இந்தியர்கள் மட்டுமே என்பதுதான் வருத்தமான ஒன்று.சீனர்களைப் பொறுத்தவரை,​​ அவர்களுக்கு மொழி,​​ அதிலும் குறிப்பாகத் தாய்மொழிப் பற்று என்பது மிகவும் முக்கியமானது.​ தாய்மொழியில் எழுதவும்,​​ பேசவும் தெரியாத சீனர்கள் இருக்கவே மாட்டார்கள்.​ நாகரிகத்தின் அடையாளமாக,​​ சீனமொழியில் எழுதத் தெரிவது கருதப்படுகிறது.​ ஆங்கிலம் படிப்பதற்குத் தரப்படும் முக்கியத்துவம் சீன மொழியில் எழுதவும்,​​ பேசவும்,​​ படிக்கவும் தரப்படுகிறது.​ உலகம் முழுவதும் எங்கெல்லாம் சீனர்கள் வாழ்கிறார்களோ,​​ அங்கெல்லாம் சீனமொழியைக் கற்றுத்தரப் பள்ளிக்கூடங்கள் நிறுவப்பட்டு,​​ அதற்கு சீன அரசு மானியம் வழங்கி உதவுகிறது.பலருக்கும் தெரியாத இன்னோர் உண்மை என்ன தெரியுமா?​ சீன அதிபர் ஹு ஜிண்டாவோவும்,​​ பிரதமர் வென் ஜியாபோவும் அமெரிக்கக் கல்வி கற்றவர்கள்.​ நன்றாக ஆங்கிலம் தெரிந்தவர்கள்.​ ஆனால் அவர்கள் பன்னாட்டுத் தலைவர்களைச் சந்திக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்துக்கொண்டு சீன மொழியில்தான் பேசுவார்களே தவிர ஆங்கிலத்தில் அல்ல.​ அவர்கள் மட்டுமல்ல,​​ ஜப்பான் பிரதமர்,​​ ஜெர்மானிய அதிபர்,​​ ரஷிய அதிபர்,​​ பிரெஞ்சு அதிபர் என்று ஆங்கிலம் தாய்மொழியல்லாத நாடுகளின் தலைவர்கள் பலர் அவரவர் மொழியில் மட்டுமேதான் கருத்துப் பரிமாற்றம் நடத்துகிறார்கள்.சிங்கப்பூருக்கே வருவோம்.​ சீனர்களும் மலாயர்களும் ஆங்கிலத்துக்கு எதிரானவர்கள் அல்லர்.​ ஆங்கிலம் படிக்க வேண்டும்,​​ உலகத்தவருடன் போட்டி போட வேண்டும் என்கிற ஆர்வம் அவர்களுக்கு நிறையவே இருக்கிறது.​ அதேசமயம் தங்களது தாய்மொழி முக்கியத்துவம் இழந்துவிடக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.​ தங்கள் குழந்தைகள் தாய்மொழியுடன் ஆங்கிலமும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர,​​ தாய்மொழி தெரியாவிட்டாலும் ஆங்கிலம் படிக்க வேண்டும் என்று விரும்புவதில்லை.​ கண்டிப்பாக வீட்டில் தாய்மொழியில் மட்டுமே பேசுவதை பழக்கப்படுத்துகிறார்கள்.நம்மைப் போலவே இருமொழிக் கொள்கை உள்ள சிங்கப்பூரில்,​​ எட்டாம் வகுப்புவரை கட்டாயமாகத் தாய்மொழிப் பயிற்சி வேண்டும் என்று குரலெழுப்பியது பெற்றோர்கள்.​ இங்கே தமிழகத்தின் சிபிஎஸ்இயோ,​​ மெட்ரிகுலேஷனோ,​​ மாநிலக் கல்வி முறையோ தாய்மொழியில் கட்டாயப் புலமை வேண்டும் என்று குரலெழுப்புவது இருக்கட்டும்.​ குழந்தைகள் தமிழில் பேசுவதே கௌரவக் குறைவு,​​ அவமானம் என்று கருதும் பெற்றோர்கள் அல்லவா அதிகம்.பேச்சு வழக்கு ஒழிந்து விட்டால்,​​ எழுத்துக்கு ஏது இடம்?​ எழுத்து இல்லாமல் எங்கே இலக்கியம்?​ இலக்கியமே இல்லை எனும்போது வாழ்வியலில் இலக்கியம் கேலிப்பொருளாகி விடுமே...​ நமது அன்னிய மோகம்,​​ சிங்கப்பூர் சீனர் மற்றும் மலாயர்களைப் பார்த்து மொழிஅடையாளத்தின் இன்றியமையாமையைக் கற்றுக் கொடுக்கக் கூடாதா?தமிழைக் காப்பாற்ற சிங்கப்பூரை உதாரணம் காட்ட வேண்டி இருக்கிறது...​ ஹும்...
கருத்துக்கள்

THIS IS A CUSRSE TO TAMILNADU TAMILS. I AM LIVING IN EUROPE FOR THE PAST 15 YEARS. I HAVE SEEN TAMILS FROM PONDICHERRY, TAMILNADU AND TAMIL EELAM. OUT OF THESE EELAM TAMILS SEND THEIR CHILDREN COMPLUSORLY TO LEARN TAMIL ONCE IN A WEEK. EVEN AT THE END OF THE YAER AN EXAMN IS CONDUCTED AND CERTIFICATES ARE AWARDED. BUT IN FRANCE THERE ARE LOT OF PONDICHERRY TAMILS BUT NONE OF THEIR CHILDREN SPEAKS TAMIL OR WRITES TAMIL. EVEN MANY OF THEIR CHILDREN HAVE FRENCH NAMES. THEN HOW CAN THESE CHILDREN SPEAK AND WRITE OUR MOTHER TOUNGE. THE MENTALITY SHOULD CHANGE. DON'T ASK ME WHY I WRITE IN ENGLISH BECAUSE OUR TAMIL SOFTWARES ARE DIFFCULY TO USE.

By Paris EJILAN
5/19/2010 4:43:00 AM

SINGAPORE GOVT PROMISSED US NOT TO REDUCE WEIGHTAGE OF MOTHER TOUNGE "INCLUDING TAMIL" IN THE SCHOOL CURRICULAM. BUT IN YOUR ARTICLE HOW SINGAPORE CELIBRATE TAMIL NOT COVERED. ONE THING IS TRUE IS - NOWADAYS SUN TV IS SPOILING SINGAPORE'S PURE TAMIL. - RAVI FROM SINGAPORE

By RAVI
5/19/2010 4:43:00 AM

IN SINGAPORE PARLIMENT IT IS POSSIBLE TO SPEAK IN TAMIL...ALL ROAD SIGNS AND INSTRUCTIONS ABOUT SERVICES ARE IN PURE THAMIL....BUT WHAT IS THERE IN DAMIL NADOO..PEOPLE SPEAK TAMINGILAM....WRITE IN TAMINGLISH...DELHI PARLIMENT MP S CANT SPEAK TAMIL ..BUT WALKING CORPSE IS ORGANISING SEMMARI CONFERENCE..WHAT A THAMASHA...???

By KOOPU
5/19/2010 3:52:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக