புது தில்லி, மே 16: தில்லி ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி பெண்ணும், சிறுவனும் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர்.கடைசி நிமிஷத்தில், 2 ரயில்கள் புறப்படும் பிளாட்பார்ம்கள் மாற்றப்பட்டதால், ரயிலைப் பிடிப்பதற்காக பயணிகள் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.பலியான பெண் பகல்பூரைச் சேர்ந்த சோனி (35) என்று கண்டறியப்பட்டுள்ளது. இறந்துபோன சிறுவனுக்கு சுமார் 10 வயது இருக்கும், அவன் யார் என்பது அடையாளம் காணப்படவில்லை.இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே உயரதிகாரிகளுக்கு அத்துறை அமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.எப்போதுமே கூட்டம் அதிகம் காணப்படும் தில்லி ரயில் நிலையத்தில், கோடை விடுமுறை காலம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பயணிகள் கூட்டம் சற்று அதிகம் காணப்பட்டது.பிற்பகல் 2.45 மணியளவில், தில்லியில் இருந்து முஸôபர்பூர் செல்லும் சம்பூரண கிராந்தி (முழுப் புரட்சி) எக்ஸ்பிரஸ், தில்லியில் இருந்து பகல்பூர் செல்லும் விக்ரமசீலா எக்ஸ்பிரஸ் ஆகியவை வரும் பிளாட்பாரம்கள் மாறுவதாக அறிவிப்பு வெளியானது.அந்த ரயில்கள் கிளம்ப சில நிமிஷங்களே இருந்ததால், பயணிகள் அனைவரும் தங்கள் பொருள்களுடன் முண்டியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் 12 மற்றும் 13-வது பிளாட்பார்ம்களில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.÷இதில் பலர் கீழே விழுந்து மிதிபட்டனர், நெரிசலால் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதில் பகல்பூரைச் சேர்ந்த சோனி என்ற பெண்ணும், ஒரு சிறுவனும் உயிரிழந்தனர். மேலும் மூன்று பெண்கள் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.ரயில்வே துறையின் அலட்சியமான போக்கால்தான் 2 பேர் உயிரிழந்ததாக பயணிகள் பலர் குற்றம்சாட்டினர்.இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளர் அஸ்வின் லுகானி கூறியது:13-வது பிளாட்பார்மில் வரவேண்டிய சம்பூரண கிராந்தி எக்ஸ்பிரஸ் 12-வது பிளாட்பார்மிலும், 12-வதில் வரவேண்டிய விக்ரமசீலா எக்ஸ்பிரஸ் 13-வது பிளாட்பார்மிலும் மாறி வந்துவிட்டது.இந்த இரு ரயில்களுமே சுமார் 2.45 மணியளவில் கிளம்ப வேண்டும் என்பதால் கடைசி நேரத்தில் பிளாட்பார்ம் மாற்ற அறிவிப்பை வெளியிட வேண்டியதாயிற்று என்றார் அவர்."பிளாட்பார்ம் மாற்ற அறிவிப்பு வந்து உடன் பயணிகளில் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு அடுத்த பிளாட்பார்முக்கு மாற முயன்றனர். பலர் பெரிய சூட்கேஸ்கள், பேக்குகளை வைத்திருந்ததால் அது மற்றவர்கள் மீது இடித்து கீழே தள்ளியது. பயணிகள் செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் அதில் இருந்து ஒருவர் கீழே விழுந்துவிட்டார். காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்' என்று மற்றொரு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.கடும் நடவடிக்கை இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.இது தொடர்பாக விசாரணை நடத்த 3 நபர்குழு ஒன்றையும் அவர் அமைத்துள்ளார்.உ யிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்து மருத்துவமனையில் உள்ள 8 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரமும், லேசாக காயமடைந்தவர்களுக்கு ரூ. 15 ஆயிரமும் ரயில்வே துறையால் வழங்கப்படும் என்றும் மம்தா அறிவித்துள்ளார்.
கருத்துக்கள்
இவ்வாறு நடைமேடை மாறுவதை அறிவிப்பதுமுதல் முறை யல்ல. எனக்கும் நான்கைந்து முறை இந்தஅவதி ஏற்பட்டுள்ளது. ஒரு முறை மதுரையில் மாறி மாறி 5 முறை நடைமேடை மாறுவதாக அறிவித்து அங்கும் இங்கும் அலைய விட்டார்கள். அதுபோல் கும்பகோணத்தில இருந்து சென்னை வருகையில் திருச்சிராப்பள்ளியில் மலைக்கோட்டை உடனே வேறு நடைமேடையில் இருந்து புறப்படுவதாக அறிவித்து அனைவரையும் அல்லல் படுத்தினர். ஆனால், கூட்ட நெரிசலில் சாவு ஏற்பட்ட முதல் துன்ப நிகழ்வாக இஃது இருக்கலாம். எனவே, இந்நிகழ்விற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் பொதுவாக நாடு முழுமையும் இவ்வாறு அவ்வப்பொழுது நடைமேடை மாற்றம் முன்கூட்டி முடிவெடு்க்காமல் பயணிகளையும் வரவேற்கவும் வழியனுப்பவும வந்திருப்பவர்களையும் தொல்லைக்கு ஆளாக்கும் கெடுபிடி இடர்களைக் களைய தொடர்வண்டித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan 5/17/2010 2:33:00 AM
இதெல்லாம் படிக்கிறபோதே நமக்கு பரிதாபமாக இருக்கிறதென்றால்,பாவம் அந்த இரண்டு ஜீவன்களும் குறிப்பாக அந்த சிறுவன் என்ன பாடுபட்டிருப்பான் ,உண்மையில் அந்த அதிகாரியை டிஸ்மிஸ் செய்யவேண்டும்,இல்லாவிட்டால் இதுமாதிரியான அலட்சிய அறிவிப்பை செய்யமுடியாது