மலேசியத் தமிழர்களுக்கு இந்தியா உதவவில்லை: மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் பேட்டி
மதுரை, மே 17: மலேசியத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் இந்திய அரசு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று மலேசிய நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் ப.ராமசாமி கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது: நாம் தமிழர் இயக்க அரசியல் மாநாட்டில் கலந்து கொள்ள மதுரை வந்துள்ளேன். தமிழர்களுக்கு எழுச்சி மற்றும் முற்போக்குச் சிந்தனை வேண்டும் என்பதே என் வேண்டுகோள். தமிழர்கள் இலங்கை மட்டுமின்றி சிங்கப்பூர்,மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், நமக்குள் ஒரு ஒற்றுமை வேண்டும். நல்ல சிந்தனை வேண்டும். அண்மையில் இலங்கைத் தமிழ் அகதிகள் 75 பேர் மலேசியக் கடல் போலீஸôரால் கைது செய்யப்பட்டு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் திரும்பவும் இலங்கைக்கு அனுப்பினால் பயங்கரவாதிகள் என்ற முத்திரை குத்தப்பட்டுவிடும் வாய்ப்பு உள்ளது. இதனால் அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும் என்று மலேசிய போலீஸôர் மற்றும் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு உள்ள பாதுகாப்பு வசதி போன்று மற்ற நாடுகளில் இல்லை. அதற்குக் காரணம், இங்கு தமிழர்கள் இருப்பதுதான். செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வது தொடர்பாக ஆரம்பத்தில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்மையில் தில்லியில் நடைபெற்ற புலம் பெயர்ந்த இந்தியர்களுக்கான மாநாட்டிலும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், இலங்கைத் தமிழர்களை இந்திய அரசும், தமிழக அரசும் காப்பாற்றவில்லை. அந்த ஒரே காரணத்திற்காக இந்த இரு மாநாடுகளிலும் நான் கலந்து கொள்வதில்லை என நிராகரித்துவிட்டேன். மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்தியர்கள் பொருளாதார, சமூக, அரசியல் ரீதியாக மோசமான நிலையில் உள்ளனர். மலேசியாவில் தமிழர்களுக்குப் பொருளாதாரப் பங்கு பெரிய அளவில் இல்லை. மலேசியாவில் 140 ஆண்டுகளாகவே மலைத் தோட்டத் தொழிலாளர்கள் என்ற வட்டத்திற்குள்ளே வைத்து தமிழர்கள் பார்க்கப்பட்டுள்ளனர். தற்போதுதான் அவர்கள் வெளியேவரத் தொடங்கி உள்ளனர். இந்திய அரசு மலேசியத் தமிழர்களுக்கு எந்தவித உதவியையும் செய்யவில்லை. ஆனால், இந்தியாவின் விடுதலைக்கு மலேசியத் தமிழர்கள் மிகவும் உறுதுணையாக இருந்துள்ளனர். 20 ஆண்டுகளாக எங்கள் பிரச்னையில் இந்திய அரசு உதவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக ஈழப்போருக்குப் பின் இந்திய அரசு தமிழர்களுக்கு உதவாது என்பது உறுதியாகிவிட்டது என்றார் அவர். பேட்டியின்போது நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான், பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
கருத்துக்கள்
நல்ல தமிழ் உணர்வாளர் துணை முதல்வர் இராமசாமி உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும் உலக அரசுகளின் ஆதரவைப் பெறும் முயற்சியிலும் இறங்கி வெற்றி காண வேண்டும்.
வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/18/2010 3:02:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *5/18/2010 3:02:00 AM