சென்னை, மே 18: புகழ் பெற்ற தமிழிசைக் கலைஞரும் சென்னை தமிழிசைக் கல்லூரியின் இயக்குநருமான திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம் (72) செவ்வாய்க்கிழமை காலமானார். பதினேழு தலைமுறைகளாக இசையை வளர்த்து வரும் மரபில் வந்தவர் இவர். சீர்காழி மூவரில் ஒருவரான முத்துதாண்டவர் பரம்பரையைச் சேர்ந்தவர். புகழ்பெற்ற நாதஸ்வரக் கலைஞர் திருப்பாம்புரம் ந.சோமசுந்தரம் மற்றும் திருமதி பட்டம்மாள் தம்பதியினரின் மகன். குடந்தை அரசு கலைக்கல்லூரி, அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முறையாக இசை பயின்றவர். சென்னை அரசு இசைக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், மதுரை மற்றும் சென்னை இசைக் கல்லூரிகளில் முதல்வராகவும் பணியாற்றியவர். தமிழிசை சங்க இசைக் கல்லூரியின் இயக்குநராக இருந்தார். கோவை, மதுரை, திருவையாறு ஆகிய ஊர்களில் இசைக் கல்லூரிகளும், 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகளும் தமிழ்நாடு அரசால் தொடங்கப்படுவதற்கு முயற்சி மேற்கொண்டு வெற்றி கண்டவர். தமிழிசைச் சங்கத்தில் 1998-ல் இருந்து பண் ஆராய்ச்சிக்குத் தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தி வருபவர். பஞ்ச மரபில் குறிபிடப்பட்டுள்ள 103 பண்களில் 42 பண்களுக்கு தற்காலத்திய ராகங்களைக் கண்டுபிடிப்பதற்குக் காரணமாக இருந்தார். லெ.ப. கரு ராமநாதன் செட்டியார், நீதிபதி கோகுலகிருஷ்ணன், தருமபுரம் ஸ்வாமிநாதன், திருப்பனந்தாள் முத்துகந்தசாமி தேசிகர், நெல்லை குமரன், பேராசிரியர்கள் பிரமிளா குருமூர்த்தி, அங்கயற்கண்ணி, எம்.ஏ.பாகீரதி, எஸ்.ஏ.கே.துர்கா மற்றும் ஓதுவார்மூர்த்திகளுடன் பண் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். இறுதிச் சடங்கு: திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரத்தின் இறுதிச் சடங்கு போரூர் மின் மயானத்தில் புதன்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. தொலைபேசி எண்: 044: 23765254, செல்லிடை பேசி 9445361702, 9843925008.
கருத்துக்கள்
தியாகராசர் முதலானவர்களின் தெலுங்கிசைப் பாடல்கள் அனைத்துமே எவ்வாறு தமிழிசை மூலத்தைக் கொண்டவை என்பதை அருமையாக விளக்குபவர்; இவற்றை யெல்லாம் நூல் வடிவில் கொண்டு வந்திருந்தால் வரும் தலைமுறையினருக்குப் பேருதவியாக இருந்திருக்கும். அரசு இசைக்கல்லூரியில் பணியாற்றினாலும் முழுமையான தமிழிசையை வளர்க்க முடியவில்லை என வருத்தப்பட்டவர். எனவே, அரசு இசைக் க்ல்லூரியில் பணியாற்றிய போதே,வேர வரும் அயல்நாட்டு மாணவர்களைத் தமிழிசைக் கல்லூரிக்குப் படிக்க அனுப்பியவர்; இப்பற்றின் காரணமாகவே, ஓய்விற்குப்பின்னர் சென்னைத் தமிழிசைக் கல்லூரியின் இயக்குநரானார். இசைப் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும், அதன் துணைவேந்தராக வேண்டும் என்று கனவு கண்டார். தமிழிசைப் பல்கலைக்கழகத்தை அரசு அமைத்தால் அவரது கனவை மட்டும் அல்ல எண்ணற்றத் தமிழிசைவாணர்களின் கனவு நனவாகுமே. துயரத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்