வேலூர்: தமிழகத்தின் 32 மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் மட்டுமே அருங்காட்சியகங்கள் உள்ளன. மற்ற மாவட்டங்களில் இவை இன்னும் தொடங்கப்படவில்லை. ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் ஒரு அருங்காட்சியகம் தொடங்கப்பட வேண்டும் என்ற அரசின் கொள்கை முடிவு முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுத்து வருகிறது. தமிழகத்தில் முதல் முறையாக 1851-ம் ஆண்டு சென்னையில் அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. அதன் பிறகு, புதுக்கோட்டையில் தொடங்கப்பட்டது. 1980-களில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த அப்போதைய முதல்வர் எம்ஜிஆர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென உத்தரவிட்டார். இதையொட்டி, சென்னை மற்றும் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இந்த அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரீகம், தமிழகத்தை ஆண்ட பிற சமயத்தினர், படையெடுப்பு, சிற்பக் கலை எனப் பல்வேறு தகவல்களைக் கொண்ட பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய தகவல் களஞ்சியங்களாக இந்த அருங்காட்சியகங்கள் செயல்படுகின்றன. இதில், தமிழக அளவில் கிடைத்த பொருள்கள் மட்டுமின்றி, அந்தந்த மாவட்டங்களின் சிறப்பை விளக்கும் வகையிலான பொருள்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. இவையே, ஒவ்வொரு காலகட்டத்தில் இருந்த சமூக, இலக்கிய, சமயத்தின் அடையாளங்களை விளக்கும் கண்ணாடிகளாக இருக்கின்றன. ஆனால், 21 இடங்களில் உள்ள இந்த அருங்காட்சியகங்களில், சென்னை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, திருச்சி மாவட்டங்களில் மட்டுமே இவை சொந்தக் கட்டடத்தில் இயங்குகின்றன. கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகை, பழனி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, திருவாரூர், உதகை, வேலூர், விருதுநகர் இடங்களில் உள்ள அருங்காட்சியகங்கள் தனியாருக்குச் சொந்தமான கட்டடங்களிலும், பிற அரசு அலுவலகங்களிலும் வாடகைக்கு இயங்குகின்றன. இதுதவிர, தமிழகத்தின் பிற 11 மாவட்டங்களில் இன்றுவரை அருங்காட்சியகங்கள் தொடங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. குறைந்தபட்சம் அந்தந்த மாவட்டங்களின் தகவல்கள் தொகுப்பையாவது கொண்ட அருங்காட்சியகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.எளிதில் அணுகும் இடமா? மொத்தம் உள்ள 21 அருங்காட்சியகங்களில் சில மட்டுமே, மக்கள் அதிகம் சென்றுவரும் சுற்றுலா தலத்தையொட்டிய இடத்தில் அமைந்திருக்கிறது. அதனால் மட்டுமே அங்கு அதிகமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக, வேலூர் கோட்டைக்குள் அருங்காட்சியகம் இருப்பதால், கோட்டையைச் சுற்றிப்பார்க்க வரும் பொதுமக்கள், அருங்காட்சியகத்தைப் பார்வையிட எளிதாக இருக்கிறது. இதுபோல, வாடகைக் கட்டடத்தில் இயங்கும் அருங்காட்சியகங்களை, மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளுக்கு மாற்றுவதன் மூலம், அதிகமானோர் கண்டுகளிக்க ஏதுவாக இருக்கும்.
கருத்துக்கள்
தமிழ்நாட்டுக் கலை வடிவங்களையும் கலை உடைகளையும் வெளிப்படுத்தும் பன்னாட்டுக் கலையருங்காட்சிகயகம் அமைக்கப்பட வேண்டும். அனபுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
5/18/2010 2:49:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் * 5/18/2010 2:49:00 AM