சஹரான்பூர்,மே 17: பிறந்த நாள் கொண்டாட இஸ்லாத்தில் இடம் இல்லை என்று தாருல் உலூம் தேவ்பந்த் என்ற இஸ்லாமிய மத பீடம் விளக்கம் அளித்துள்ளது. பிறந்த நாள்களை விழாக்களாகக் கொண்டாடலாமா என்று அந்த அமைப்பைச் சேர்ந்த பெண் ஒருவர் விளக்கம் கேட்டிருந்தார். 'பிறந்த நாள் கொண்டாடும் வழக்கத்தை யூதர்களும் கிறிஸ்தவர்களும்தான் தொடங்கினர். இஸ்லாத்தில் இதற்கு இடம் இல்லை' என்று அந்த அமைப்பு அவருக்குப் பதில் அளித்துள்ளது. வங்கிகளில் வேலை செய்வதும் இன்சூரன்ஸ் என்னும் ஆயுள் காப்பீட்டைச் செய்து கொள்வதும் இஸ்லாமிய நெறிகளுக்கு முரணானது என்று சமீபத்தில் தேவ்பந்த் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஒரு பெண் வேலைக்குப் போவதும் அப்படி வேலைக்குப் போகும் பெண் கொண்டுவந்து தரும் பணத்தை வாங்கி செலவு செய்வதும் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளுக்கு முரணானது என்றும் தேவ்பந்த் தெரிவித்திருக்கிறது. மத நெறிகள் என்று கூறப்படும் சிலவற்றை, எந்தச் சூழ்நிலையில் எதற்காகக் கூறினார்கள் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர ஒட்டுமொத்தமாக எல்லோருக்கும் கூறப்பட்டதாகக் கருதிவிடக்கூடாது என்று ஜமீயத் உலேமா - இ - ஹிந்த் என்ற அமைப்பைச் சேர்ந்த அப்துல் ஹமீத் நோமானி இதற்கு விளக்கம் அளிக்கிறார். இஸ்லாமிய நெறிகளின்படி வட்டிக்கு கடன் கொடுக்கக்கூடாது. அப்படி வங்கிகளில் கடன் கொடுக்கப்படுவதால்தான் அதில் பணிபுரியக் கூடாது என்று கூறப்படுகிறது. இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்த பிறகு தன்னுடைய ஆயுள் குறித்தும் தனக்குப் பிறகு தன் குடும்பத்தை யார் காப்பாற்றுவார் என்றும் கவலைப்படக்கூடாது என்பதற்காகவே இன்சூரன்ஸ் கூடாது என்று அந்த அமைப்பு தெரிவித்திருக்கிறது. பெண்கள் வேலைக்குப் போவதால் குடும்பத்தில் அமைதி கெடும், குடும்பத்தவர்களுக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளுக்கு பாதிப்பு வரும், குழந்தைகளை வளர்ப்பதில் சிக்கல் நேரிடும் என்பதால் பெண்களை வேலைக்குப் போகக்கூடாது என்கின்றனர் என்று தெரிகிறது.
பிற்போக்கான கருத்துகள். சமயத்தின் பெயரால் பத்தாம்பசலித்தனமான கருத்துகள் அறிவுறுத்தப்படுவது நாடடிற்குக் கேடு. ஒவ்வொரு கருத்துமே பகுத்தறிவிற்கு ஏற்றதல்ல. இன்றைய சூழலில் எது சரியோ அதைத்தான் கூற வேண்டும். நபிகளுக்கு மாறுபட்ட கருத்தைக கூறுகிறார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
5/18/2010 2:58:00 AM