21.11.12 ஆம் நாளிட்ட தமிழக
அரசியல் இதழில்
வெளிவந்த
தமிழுக்கு நீதி
வழங்குங்கள்
என்னும்
தலைப்பிலான என் கருத்துரை வரிவடிவில் பின்மாறு தரப்படுகிறது: -
தமிழுக்கு நீதி வழங்குங்கள்
அ.தி.மு.க.
அரசு பதவி ஏற்றதும் முதல் 6
மாதங்களுக்கு மக்கள் நலத் திட்டத்தில் கவனம் செலுத்தப் போவதாகவும்
அதன்பின்பே தமிழ் வளர்ச்சி தொடர்பான துறைகளில்
கவனம் செலுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால், தமிழ்
வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் அரசு பாராமுகமாக இருப்பதாகத் தமிழ்
அன்பர்களிடையே வருத்தம் நிலவுகிறது.
செம்மொழித்
தமிழாய்வு நிறுவனத்தின் தலைவர் முதல்வர்
அவர்கள்தாம். தலைவர் என்ற முறையில் உரிய குழுவைக் கூட்டி மத்திய அரசிடம் இருந்து வேண்டிய நிதியைப் பெற்றுத்
தரவேண்டியதும் முதல்வரின் பொறுப்புதான். தமிழுக்குப் பிறகு செம்மொழி என
அறிவிக்கப்பட்ட சமசுகிருதத்திற்கு 2008-09, 2009-10, 2010-11, ஆண்டுகளில் முறையே 72.10 , 99.18, 108.75
கோடி உரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது மத்திய அரசு. ஆனால், உயர்தனிச்
செம்மொழியான தமிழுக்கு இந்நிதியாண்டுகளில்
முறையே 4.47, 8.61, 10.16 கோடி உரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாண்டில் முதல்
தவணையாகச் சமசுகிருதததிற்கு உரூபாய் 54.97 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டிருப்பினும் தமிழுக்கு உரூபாய் மூன்று கோடி மட்டுமே ஒதுக்கீடு
செய்துள்ளது.
மத்திய
அரசின் இந்தத் தமிழ்ப்புறக்கணிப்பைப் போக்கை எதிர்த்துத் தமிழக முதல்வர்
செயற்பாடுகளில் இறங்கிட வேண்டும்.
அடுத்துத்
தமிழ்ப்பல்கலைக்கழகங்கள் பற்றியன(விவகாரம்).
செம்மொழித்திட்டத்தின் கீழ்ப் பல்வேறு சமசுகிருத
அமைப்புகளைக் கருதுநிலைப் பல்கலைக்கழகங்களாக ஏற்று மத்திய அரசு நிதியுதவி
செய்துவருகிறது. மதுரைத் தமிழ்ச்சங்கம்,
கரந்தைத் தமிழ்ச்சங்கம், தலைநகரத்
தமிழ்ச்சங்கம், தில்லித் தமிழ்ச்சங்கம் முதலான அனைத்துத்
தமிழ்ச்சங்கங்களையும் இதே போன்ற
திட்டத்தின் மூலம் இணைத்து நிதியுதவி பெற்றுத்
தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து
மாநிலங்களிலும் தமிழர் வாழும் உலக நாடுகளிலும்
தமிழ்ப்பல்கலைக்கழகங்கள் நிறுவ மத்திய அரசின் நிதியுதவி பெற்றுத்தர நடவடிக்கை
எடுக்க வேண்டும். முதற்கட்டமாக,
மும்பை, கல்கத்தா, புது
தில்லி, முதலான பெருநகரங்களிலும் சிங்கப்பூர், மலேசியா, ஈழம், அமெரிக்கா,
இங்கிலாந்து முதலான நாடுகளிலும் தமிழ்ப்பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்த
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்
ஒரு பகுதியாகத் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு முழுமையான நிதியுதவி
பெற்றுத் தரவேண்டும். இதற்கு வாய்ப்பாக அப்பல்கலைக்கழகத்தின் நிலப்பகுதியைப்
பறிதது யாருக்கும் ஒதுக்கீடு செய்யத்
தடைவிதித்து, மாவட்ட ஆட்சியக வளாகத்திற்கு
ஒதுக்கீடு செய்துள்ளதைத் திரும்பப் பெற வேண்டும்.
தொல்காப்பியம், திருக்குறள்,
சங்க இலக்கியங்கள் ஆராய்ச்சிக்காக ஆண்டிற்கு 20 பல்கலைக்கழகங்கள் என்ற அளவில் உலகப் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப்
பீடங்கள் ஏற்படுத்த வேண்டும். உலகக் கல்லூரிகளில் ஆண்டிற்கு 100 என்ற அளவில் தமிழ்த்துறை தொடங்க
நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமசுகிருதம்
முதலான பிற மொழி களின் 15 மூத்த அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கும் வாழ்நாள் விருதுத் திட்டம்
நடைமுறையில் உள்ளது. தமிழுக்கும் இவ்வாறு
மூத்த தமிழறிஞர் விருது வழங்கப்படும் என அறிவித்தும் அவ்வாறு வழங்கப் படவில்லை.
எனவே, உடனடியாகக் கடந்த ஆண்டுகளுக்கும்
சேர்த்து ஆண்டிற்கு 15 மூத்த தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்க
வேண்டும். காலங்கடந்து ஒரே ஒரு முறை சில ஆண்டுகளுக்குச் சேர்த்து வழங்கப்பட்ட
இளந்தமிழறிஞர்களுக்கான விருதுகளையும்
இடைவெளி இல்லாமல் தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முதல்வரைச்
செம்மொழி நிறுவனத்தின் தலைவராக ஆக்கியது கடந்து ஆட்சியின் தவறு எனக் கருதினால், முதலில் ஒரு கூட்டம் நடத்தி
மேற்குறித்தவாறான நிதியுதவிகளை மத்திய அரசிடம் இருந்து பெற நடவடிக்கை எடுத்துப்
பின்னர் விலகித் தமிழ் அறிஞர் ஒருவரைத் தலைவராக ஆக்க வேண்டும்.
செம்மொழித்
தமிழாய்வு மத்திய நிறுவனம்,
முதலான அனைத்துத் தமிழ் அமைப்புகளிலும் தமிழ்ப் புலமை உடையவர்களையே
தலைவராகவும் பிற பொறுப்புகளிலும் நியமிக்க
வேண்டும். தமிழ்த்துறைகளில் தமிழ் படித்தவர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை
வைக்கும் சூழலைக் கடந்த ஆட்சி ஏற்படுத்தி விட்டது. இதனை மாற்ற வேண்டும்.
அதேபோல், தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை
இணையக் கல்விக்கழகம் எனக் கடந்த ஆட்சி
மாற்றி விட்டது. இதனை முழுமையான பல்கலைக்கழகமாக மாற்றித் தமிழ்ப் புலமை
உடையவர்களையே நியமிக்க வேண்டும்.
தமிழ்
ஆட்சிமொழித்திட்டம் என்பது தமிழகஅரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் என்ற தவறான போக்கை
மாற்ற வேண்டும்,
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் தனியார் அலுவலகங்களிலும் மத்திய அரசு அலுவலகங்களிலும்
பன்னாட்டு அலுவலகங்களிலும் தமிழே அலுவல் மொழியாக விளங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசுப்
பள்ளிகளையும் மாநாகராட்சிப் பள்ளிகளையும் புரவலர் திட்டத்தின் கீழ்த் தனியாரிடம் ஒப்படைத்துச்
சிறந்த வசதிகள் கொண்ட பள்ளிகளாக மாற்ற வேண்டும். இவற்றை ஆங்கில வழிப் பள்ளிக்கூடங்களாக
மாற்றும் அநீதியான செயல்களை
உடனே நிறுத்த வேண்டும். மூன்றாண்டிற்குள் அனைத்துக் கல்விக்கூடங்களையும்
தமிழ்வழிக்கல்விக்கூடங்களாக மாற்றவும் ஆவன செய்ய வேண்டும்.
கொள்கையளவில்
தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை எனக் கூறிக்கொண்டே அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டாம்
மொழி அல்லது மூன்றாம் மொழி என்ற போர்வையில் இந்தித் திணிக்கப்பட்டு வருகிறது.
அதுபோல் பல பள்ளிகளில் தமிழ் இல்லாமல் சமசுகிருதம் மட்டும் கற்பிப்பபதால்
அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேறுவழியின்றித் தமிழை மறந்து சமசுகிருதம் படிக்கும் நிலைக்குத்
தள்ளப்படுகிறார்கள். எல்லாப்பள்ளிகளிலும் தமிழே கட்டாய முதன்மொழியாக
இருக்க வேண்டும். பிற மொழிகளைத் தாய்மொழியாக உள்ளவர்கள் மட்டும்
அம் மொழிகளை மூன்றாம் மொழிகளாகப் படிக்க வகை செய்ய வேண்டும்.
11,
12 ஆம் வகுப்புகளில் பிற மொழிகளை விருப்பப்பாடமாக எடுக்கும் நிலை உள்ளது.
தொடக்கநிலைப் பாடம் என்பதால் பலர் மிகுதியான மதிப்பெண்கள் எடுப்பதற்காக
அம் மொழிகளைக் கற்கத் தள்ளப்படுகின்றார்கள். 10+2 கல்வித் தரத்திற்கு
இணையாக அக்கல்வித்திட்டத்தைக் கருத முடியாது. எனவே, இம்முறையை நீக்க வேண்டும். பிற மொழி என்பது கலலூரி அளவில்
யார் வேண்டுமென்றாலும் கற்றுக் கொள்ளலாம். பள்ளி அளவில் தமிழும்
ஆங்கிலமும் பிற தாய்மொழியினருக்கு மட்டும் அவரவர் மொழிகளும் இருந்தால் போதுமானது.
இல்லாவிடில் தமிழ் படிக்காதவர்கள் தமிழ்நாட்டில் பெரும்பான்மையராக ஆகித்
தமிழே தேவையில்லை எனப் போர்க்கொடி தூக்கும் துன்ப நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்படும்.
தமிழ்நாட்டிலுள்ள
இந்திப்பரப்புரையை அவையை மூட வேண்டும்.
தமிழ் பரப்பு அவையைத் தோற்றுவிக்க வேண்டும். தமிழ்
மொழி, இலக்கியம், கலை, பண்பாடு தொடர்பான அனைத்துத்துறைகளுக்கும் முழுமையான வேண்டிய அளவில் நிதி ஒதுக்கீடு
செய்ய வேண்டும்.
இக்கனவுகளை
நிறைவேற்றித் தமிழரசாக மாறத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? உறவுக்குக் கை
கொடுத்தாலும் உரிமைக்குத் துணிவுடன் குரல் கொடுத்துப் போராடும் முதல்வர் அவர்கள் தமிழ்வளர்ச்சிகளில்
விரைவில் கவனம் செலுத்துவாரா?
நன்றி : தமிழக அரசியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக