புதன், 21 நவம்பர், 2012

"கை' இழந்தாலும் நம்பிக்"கை' இழக்கவில்லை!

"கை' இழந்தாலும் நம்பிக்"கை' இழக்கவில்லை! கார்த்திகை விளக்கில் ஒளிரும் வாழ்க்கை!































விபத்தில் வலது கையை இழந்தாலும் கார்த்திகை விளக்குகள் தயாரித்து விற்பனை செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த நம்பிக்கை இளைஞர் வேல்முருகன்.
கார்த்திகை என்றாலே, அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஒளிபரப்பும் தீபங்கள் தான். கார்த்திகை திருநாளுக்கு வீடுகள், கோயில்கள் என அனைத்து இடங்களிலும் தீபங்கள் ஏற்றி இருளை அகற்றுவது நமது பாரம்பரிய பழக்கவழக்கமாக இருந்து
வருகிறது.
இத்தகைய, ஒளி விளக்குகள் பெரும்பாலும் மண்ணால் இருப்பதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனர். அத்தகைய விளக்குகளை பரம்பரையாக மதுரையில் குறிப்பிட்ட சிலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கால மாற்றத்தில் இவ்விளக்குகளுக்கு மக்களிடம் வரவேற்பு குறைந்ததால், பலர் இத்தொழிலை கைவிட்டு  விட்டனர். ஆனாலும் பாரம்பரியத்தை காக்கும் வகையில் சில குடும்பங்கள் மண் விளக்குகளை தயாரித்து விற்று வருவதைக் காண முடிகிறது.
மதுரை நகரில் பெத்தானியபுரம் பகுதியில் குறிப்பிட்ட சிலர் பாரம்பரியமாக கார்த்திகை அகல் விளக்குகளை கண்மாய் மண்ணால் செய்து விற்று வருகின்றனர். இவர்களில் ராஜேந்திரன் என்பவரது குடும்பத்தினர், கடந்த 3 தலைமுறையாக மண்ணால் ஆன கார்த்திகை அகல் விளக்குகளைச் செய்து விற்றுவருகிறார்கள்.
ராஜேந்திரனின் மகன் வேல்முருகன் (27). பி.காம் பட்டதாரி. இவர் கோச்சடை செல்லும் வழியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். பணியின்போது கடந்த ஆண்டு, இவரது வலது கை எந்திரத்தில் சிக்கி மணிக்கட்டு வரை துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், அவர் தளரவில்லை. இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு  முன்  திருமணம் நடைபெற்றது. மனைவி புவனேஸ்வரி. தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் கிடைக்கும் வருவாய் தாய், தந்தை, தங்கை மற்றும் மனைவி என பெரிய குடும்பத்துக்கு போதவில்லை.
ஆகவே, வலது கையை இழந்த நிலையிலும் தங்களது பாரம்பரியத் தொழிலான கார்த்திகை அகல் விளக்கு தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.
படிக்கும் காலத்திலேயே வேல்முருகன் பகுதி நேரமாக தந்தையுடன் அகல் விளக்கு  தயாரிப்புக்கு உதவியாக இருந்துள்ளார். தற்போது, அந்த அனுபவம் அவருக்கு நிறையவே கை கொடுப்பதாகக் குறிப்பிடுகிறார்.
கோச்சடை கண்மாயில் மண் எடுத்து, அகல் விளக்கை தயாரித்து வந்த வேல்முருகன் தரப்பினர், கார்த்திகைக்கு மட்டும் சுமார் 50 ஆயிரம் விளக்குகள் வரை தயாரித்து விற்பதாகக் கூறுகின்றனர். கார்த்திகை தவிர, மற்ற காலங்களில் மண் உண்டியல்கள், குடிநீர் வைக்கும் மண்பானைகள் ஆகியவற்றை தயாரித்து விற்று வருகிறார். மண் விளக்குகள், மண்பாண்டங்கள் மூலம், நாளொன்றுக்கு சுமார் ரூ.150 வருவாய் கிடைத்து வருவதாகக் கூறுகிறார் வேல்முருகன்.
தற்போது வண்ண மெழுகு விளக்குகள் ஏராளமாக வந்த நிலையில், பொதுமக்கள் குறைந்த அளவிலேயே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வாங்கி வருவதாகவும், இதில் ஒரு விளக்கு 30 பைசா முதல் 50 பைசா வரை விற்கவே முடிகிறது என்றும் வேல்முருகன் வருத்தப்படுகிறார்.
காலமாற்றத்தில் மண் விளக்குகளுக்கு வரவேற்பு குறைந்த நிலையில், இதை நம்பி மட்டுமே வாழ்க்கையை நடத்துவது சிரமமாக உள்ளதாகவும், ஆகவே தனக்கு ஊனமுற்றோர் பிரிவில் ஏதாவது அரசுப் பணி கிடைத்தால் பாரம்பரியத் தொழிலையும் கைவிடாமல், குடும்பத்தையும் காப்பாற்றமுடியும் என்பதும் அவரது கோரிக்கை.
கார்த்திகை மாத இருளை விரட்டப் பயன்படும் அகல் விளக்கை தயாரிக்கும் வேல்முருகன் வாழ்க்கையில் இருள் விலக அவருக்கு அரசு உதவிகள் கிடைக்க சம்பந்தப்பட்ட துறையினர் மனது வைக்க வேண்டும். இதுபோன்ற இளைஞர்களை
ஊக்குவிப்பதன் மூலம் மனிதநேயம் காக்கப்படுவதுடன், அழியும் நிலையில் உள்ள நமது பாரம்பரியத் தொழில்களையும் காப்பாற்ற முடியும்.
படங்கள்: ப.குமாரபாண்டியன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக