செவ்வாய், 20 நவம்பர், 2012

பால்தாக்கரே பற்றி முகநூலில் எழுதிய 2 கல்லூரி மாணவிகள் கைது

பால்தாக்கரே பற்றி  முகநூலில் எழுதிய 2 கல்லூரி மாணவிகள் கைது
பால்தாக்கரே பற்றி பேஸ்புக்கில் விமர்சித்த 2 கல்லூரி மாணவிகள் கைது
மும்பை, நவ.20-

சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே கடந்த சனிக்கிழமை மரணம் அடைந்தார். அவரது இறுதிச்சடங்குகள் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது மும்பை நகரமே முடங்கியது. நேற்றும் மும்பையில் பெரும்பாலான கடைகள், பள்ளிகள் இயங்கவில்லை.

இந்த நிலையில் பால் தாக்கரே மரணத்துக்காக கடைகள் அடைக்கப்பட்டதை கண்டித்து விமர்சனம் செய்து மராட்டிய மாநிலம் பல்கர் நகரில் வசிக்கும் கல்லூரி மாணவி ஷகீன்ததா என்பவர் கருத்து வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உலகில் தினமும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணம் அடைகிறார்கள். ஆனால் உலகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. சாதாரண ஒரு அரசியல்வாதி மரணம் அடைவதற்காக, அதுவும் இயற்கையான மரணம் அடைந்ததற்காக ஒவ்வொருவரும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இது தேவையா என்பதை அவர்கள் உணர வேண்டும்.

இந்திய விடுதலைக்காக உயிரை தியாகம் செய்த தியாகிகள் பகத்சிங், ஆசாத், சுக்தேவ் போன்றோருக்கு நாம் இதே மாதிரி மரியாதை கொடுத்து இருக்கிறோமா? குறைந்தபட்சம்2 நிமிடம் மவுன அஞ்சலியாவது செலுத்தி இருக்கிறோமா? மரியாதை என்பது தானாக வரவேண்டும். கேட்டு வாங்கக்கூடாது. அதுவும் வற்புறுத்தி வலுக்கட்டாயமாக மரியாதை பெறக்கூடாது.

இன்று மும்பையில் முழு அடைப்பு நடக்கிறது. இது மரியாதைக்காக நடக்கவில்லை. பயம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. இவ்வாறு மாணவி ஷகீன்ததா பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த கருத்தை அவரது கல்லூரி தோழி ரினி சீனிவாசன் ஆமோதித்திருந்தார். பேஸ்புக்கில் ஷகீன் வெளியிட்ட கருத்து பற்றி தகவல் அறிந்ததும் பல்கர் நகர சிவசேனா தொண்டர்கள் ஆத்திரம் அடைந்தனர். ஷகீனின் மாமா கிளீனிக்கை அடித்து நொறுக்கினார்கள்.

இதையடுத்து ஷகீன் மன்னிப்பு கோரி மீண்டும் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டார். என்றாலும் சிவசேனா கட்சியினர் கொந்தளிப்பு அடங்கவில்லை. பல்கர் போலீசில் புகார் செய்தனர். மும்பையில் நடந்த முழு அடைப்பை சிவசேனா ஆதரிக்கவில்லை. எனவே ஷகீன் கருத்து மத உணர்வை தூண்டுவதாக உள்ளது என்று சிவசேனா கட்சியினர் புகாரில் கூறி இருந்தனர்.

இதைத்தொடர்ந்து பால் தாக்கரே பற்றி விமர்சித்து கருத்து வெளியிட்ட கல்லூரி மாணவிகள் மீது நடவடிக்கை எடுக்க டி.ஜி.பி. உத்தரவிட்டார். அதன்பேரில் பல்கர் போலீசார் நேற்றிரவு மாணவிகள் ஷகீன்ததா, ரினி சீனிவாசன் இருவரையும் கைது செய்தனர். அவர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பல்கர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட இரு மாணவிகளையும் 14 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பிறகு 2 மாணவிகளும் ரூ.15 ஆயிரம் செலுத்தி ஜாமீனில் செல்ல அனுமதித்தார். இதையடுத்து இரு மாணவிகளும் விடுதலை ஆனார்கள்.

இதற்கிடையே மராட்டியத்தில் 2 மாணவிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கருத்து சுதந்திரத்துக்கு எதிராக நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்று பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சமூக ஆர்வலர் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள செய்தியில் மாணவிகளை கைது செய்த போலீசாரை உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜுவும் மாணவிகள் கைதை கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மராட்டிய முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவானுக்கு இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில் அவர், எந்த குற்றமும் செய்யாதவர்களை கைது செய்வதும் குற்றம்தான். எனவே மாணவிகளை கைது செய்த போலீசாரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே மாணவி ஷகீனின் மாமா கிளினீக்கை நொறுக்கியவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அதுதொடர்பாக இதுவரை சிவசேனா கட்சியினர் யாரும் கைது செய்யப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக