வெள்ளி, 23 நவம்பர், 2012

தம்பிக்காக வாழ்கிறோம்!

சொல்கிறார்கள்

தம்பிக்காக வாழ்கிறோம்!

ஓவியத்தில் விருதுகள் பெற்று வரும், மாற்றுத் திறனாளி மேத்தப் ஆலம் வளர்ச்சியில், உறுதுணையாக இருந்து, இன்று தானும் ஓர் ஓவியராக வளர்ந்திருக்கும் அவரது சகோதரி நஸ்ரின்: எங்கள் பூர்வீகம் ஜார்கண்ட் மாநிலம். என் அப்பா, "பில்டிங்' கான்ட்ராக்டர். தம்பி மேத்தப், மனவளர்ச்சி குறைந்த குழந்தை என தெரிந்த போது, வேதனையாக இருந்தாலும், குடும்பத்தில், அனைவரும் அவனிடம் அன்பு செலுத்த ஆரம்பித்தோம்.

மேத்தப்பிற்கு மூன்று வயதிருக்கும் போதே, சாக்பீஸ், கரி ஆகியவற்றால், சுவரில் கிறுக்குவான். ஆனால், அது வெறும் கிறுக்கலாக இல்லாமல், அதில் ஒரு நேர்த்தி இருக்கும். அதை உற்று கவனித்த போது தான், அவன் நன்றாக வரைகிறான் என்பதை கண்டுபிடித்தேன்.அதை மெருகேற்ற ஆசைப்பட்டு, ஓவியர் ராம்சுரேஷிடம், எட்டு ஆண்டுக்கு முன் அழைத்துச் சென்றேன். அவனது குறைபாட்டை பொருட்படுத்தாத அவர், ஓவியம் வரையக் கற்றுக் கொடுத்தார். வீட்டில் சாப்பிடும் நேரம், தூங்கும் நேரம் தவிர, எப்போதும் வரைந்து கொண்டேயிருப்பான்.

இந்நிலையில், மாற்றுத் திறனாளிகள் படைப்பாற்றல் திறனுக்கான, தேசிய விருதுக்கு தம்பியை விண்ணப்பிக்க வைத்தோம். அதில், அவனுக்கு விருதும் கிடைத்தது. படம் வரையும் போது, அடிக்கடி கவனம் சிதறும் என்பதால், கூடவே இருந்து, வரைய வைப்பேன்.ஒரு நாள் என்னிடம் பிரஷ் கொடுத்து, வரையச் சொல்லி அடம் பிடித்தான் என் தம்பி. நானும் வரைய, அதைப் பார்த்து சந்தோஷமாக கை தட்டினான். அன்றிலிருந்து, நானும், அவனுடன் ஓவிய வகுப்பிற்கு செல்கிறேன். இருவரும், ஓவியத்தில், "யுவ கலா பாரதி விருது' வாங்கினோம்.

பெங்களூரில் உள்ள,"கர்நாடக சித்ரகலா பரிஷத்' அமைப்பு நடத்திய ஓவிய கண்காட்சியில், 22 ஓவியங்கள் விற்பனையாகின. பிரபல ஓவியர்களைப் போலவே, எங்கள் ஓவியமும், அனைவரும் விரும்பி வாங்கியது, உற்சாகமாக இருந்தது.தொடர்ந்து, ஐந்து ஆண்டுகளாக, எங்கள் ஓவியங்கள் அந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.தம்பியின் எதிர்காலத்திற்காக, நானும், என் இரு அண்ணன்களும், திருமணமே வேண்டாம் என்றுள்ளோம். அவன் எதிர்காலம் தான், எங்களுக்கு முக்கியம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக