ஞாயிறு, 18 நவம்பர், 2012

சிறைச் சாலையில்ஒரு பாட சாலை

 
"சிறைச் சாலையில்ஒரு பாட சாலை!'

சிறைக் கைதிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி வரும் நோவா: கல்லூரி பேராசிரியர்களுக்கு, பணிப் பாதுகாப்பு கோரிக்கைகளை முன் வைத்து, 1979ம் ஆண்டில், போராட்டம் நடத்தி, சிறை சென்றவர்களில், நானும் ஒருவன். மதுரை மத்திய சிறையில், 15 நாட்கள் இருந்த போது, சிறைக் கைதிகளுடன் உரையாடும்
சந்தர்ப்பம் கிடைத்தது. சிறைக்குள் இருக்கும் கைதிகள் இரண்டு வகை. கொலை, கொள்ளை போன்ற பெருங்குற்றங்களில் ஈடுபடுவதை, தொழிலாகக் கொண்டவர்கள் ஒரு வகை. வறுமையால், சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, முதன் முறையாக சிறைக்கு வரும், துவக்க நிலை குற்றவாளிகள் இரண்டாம் வகை.இவர்கள், சிறைக்குள் ஒன்றாகக் கலந்து உலவுவதால், கொடூரமான குற்றவாளிகளுடன் பழகி, விரைவில், இவர்களும் குரூரமான எண்ணம் கொண்டவர்களாக மாறி விடுகின்றனர்.

பெரும்பாலானோரிடம் கல்வியறிவு, நல்லொழுக்கம் இல்லாததால், குற்றச் செயல்களில் இருந்து அவர்களால், மீள முடியவில்லை. 15 நாட்கள் சிறையில் கழித்து விட்டு வெளியே வந்தவுடன், கைதிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
அப்போதைய தமிழக முதல்வர், எம்.ஜி.ஆருக்கு கடிதம் மூலம், சிறைக் கைதிகளுக்குக் கல்வி போதிப்பதறகாக அனுமதி வேண்டினேன். அதைப் பரிசீலித்த, எம்.ஜி.ஆர்., உடனே அனுமதியளித்தார்.என்னுடன், சில பேராசிரியர்களை அழைத்துக் கொண்டு, தமிழக சிறைகளுக்குச் சென்று, கைதிகளுக்கு கல்வி கற்பிக்க ஆரம்பித்தேன். அப்போது துவங்கியது தான், "அணைக்கும் கரங்கள்' தொண்டு நிறுவனம்.

இதுவரை, எங்களிடம் பயின்ற சிறை மாணவர்களின் எண்ணிக்கை, 2,000க்கும் மேல் இருக்கும். இதில், பலர், இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ளனர். சட்டம், மருத்துவம் போன்ற படிப்புகளையும், சிறையிலிருந்தபடியே தொடர்ந்தவர்களும் உண்டு.படிப்பில் ஆர்வம் இல்லாதவர்களுக்கு, கைத்தொழில் கற்றுக் கொடுக்கிறோம். அவர்கள் விடுதலையான பின், தொழில் துவங்கத் தேவையான உபகரணங்களையும் வாங்கித் தருகிறோம். தண்டனைக் காலம் நிறைவு பெற்று வெளியே வரும் கைதிகளுக்கு, திருமணம் செய்து வைக்கிறோம். இதுவரை, 1,200 திருமணத்திற்கு மேல் நடத்தியிருக்கிறோம்.

"உழைப்பால்வளர்ந்தேன்!'

தன் படிப்படியான முன்னேற்றத்தைக் கூறும், கோவை பழமுதிர் நிலையம் நிறுவனர் நடராஜன்: குடும்பச் சூழல் காரணமாக, சிறு வயதிலேயே பட்டறை, மில் என, பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட பணி பயணத்தின் ஒரு அத்தியாயம் தான், பழ வியாபாரம். ஆனால், காலப்போக்கில் இந்த தொழில் நிலைத்து நின்றுவிட்டது. தலைச் சுமையாக, தள்ளுவண்டியாக, தரைக்கடையாக என, மிகப் பெரிய உழைப்பைச் செலுத்தித் தான் வளர்ந்தேன்.பழ வியாபாரம், அதிக, "ரிஸ்க்' கொண்டது. இந்த தொழிலில், விற்பனையில்லை என்றால், பொருளும் மிஞ்சாது; போட்ட முதலீடும் மிஞ்சாது.
பழ வியாபாரத்தில் உள்ள, ரிஸ்க்குகளைக் குறைக்க வேண்டும்; மக்களும் விரும்பி வாங்க வேண்டும் என, யோசித்து நவீன முறைக்கு மாறினேன்.

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள் தருவது கூட ஒரு வகையில், சிக்கல் தான். விலை அதிகமாக இருக்கும் என, கடைக்குள் நுழை மாட்டார்கள். ஆனால், சராசரியான விலையிலேயே தரமான பழங்கள் என, நான் தரத் துவங்கினேன்.சென்னையில் கடை துவங்கும் முன், கோயம்பேடு மார்க்கெட்டிற்குச் சென்று, வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை உன்னிப்பாக கவனித்தேன்.

பழம், காய்கறி வாங்குவது கூட, ஒரு இனிமையான ஷாப்பிங் அனுபவமாக மாற வேண்டும் என, அடுத்தடுத்து துவங்கிய எல்லா கிளைகளிலும், குளிர் சாதன வசதி, வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கும் வசதி என, பழ வியாபாரத்தை நவீன முறையில் மாற்றினேன்.என் மகன் தொழிலுக்கு வந்த பின், வெளிநாடுகளில் இருந்து, பழங்கள் இறக்குமதி செய்யும் பணிகளில், கூடுதல் கவனம் செலுத்தினோம். மக்களின் தேவை யை அறிந்து, அவர்கள் விருப்பங்களை நிறைவேற்ற சிரத்தை எடுத்துக் கொண்டால், நிச்சயம் ஜெயிக்கலாம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக