திங்கள், 19 நவம்பர், 2012

மருத்துவர் தெய்வநாயகம் மறைவு - வைகோ இரங்கல்

மருத்துவர் தெய்வநாயகம் அவர்களின் மறைவு தமிழ்நாட்டுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்! வைகோ இரங்கல்

  0/0  

பகுத்தறிவுச் சுடராக, தமிழின உரிமை வேட்கை மிக்கவராக மருத்துவத் துறையில் மனிதநேய சாதனையாளராகத் திகழ்ந்த மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் அவர்கள் மறைந்தார் என்ற செய்தி அறிந்து, தாங்கமுடியாத துக்கமும் அதிர்ச்சியும் அடைந்தேன். மருத்துவக் கல்லூரியில் கல்வியில் தங்க விருது பெற்ற தெய்வநாயகம் அவர்களின் பெற்றோரும், அக்குடும்பத்தினரும் தந்தை பெரியார் அவர்களின் எல்லையற்ற அன்புக்குரியவர்கள் ஆவார்கள்; தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் ஆவார்கள்.
சென்னை அரசு பொது மருத்துவமனையில் தலைமை மருத்துவராகச் சேவை செய்த தெய்வநாயகம் அவர்கள், பின்னர் தாம்பரம் டி.பி. சானடோரியத்தின் தலைமை மருத்துவராக அற்புதமாகப் பணி ஆற்றினார். கூட்டுக் கலவை மருந்து என்ற முறையைக் கொண்டு வந்து எண்ணற்ற நோயாளிகளைக் குணப்படுத்தினார். எலும்புருக்கி நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்ததோடு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தக்க சிகிச்சை தந்தார்.
உலகில் எங்கே தமிழர்கள் துன்புற்றாலும் அதைத் தடுக்கப் போராடினார். மலேசியாவில் தமிழர்கள் மரணக் கொட்டடியில் வாடியபோது அவர்களை மீட்க மிகப் பெரிய அறப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார். மாவீரர் திலகம் பிரபாகரன் அவர்களின் அருமைத் தாயார் பார்வதி அம்மாள் அவர்கள் மறைந்தபோது வீரவணக்கக் கூட்டம் நடத்த அவரது நிர்வாகத்தில் இருந்த பள்ளிக் கட்டட வளாகத்தில் ஏற்பாடு செய்தார். இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து மருத்துவத் துறையிலும் எண்ணற்றவர்களுக்கு நலவாழ்வு தரவும் தமிழீழ விடியலுக்கு தோள் கொடுக்கவும் ஆற்றலும் தகுதியும் வாய்ந்த மனிதநேயமிக்க இந்தப் பண்பாளர் பிணிவயப்பட்டு மறைந்தது ஆற்றமுடியாத துயரத்தைத் தருகிறது.
அவரை இழந்து வேதனையில் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது மறைவால் கலங்கி நிற்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்,
19.11.2012 மறுமலர்ச்சி தி.மு.க
(பார்வையிட்டவர்கள் 6 பேர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக