திங்கள், 19 நவம்பர், 2012

மூளைச்சாவு : புதுமாப்பிள்ளை: உடல் உறுப்புகள் ஐந்து பேருக்குத் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த புதுமாப்பிள்ளை : உடல் உறுப்புகள் ஐந்து பேருக்கு த் தானம்
(தரன் ில தரன் ர்)

கோவை,: விபத்தில், மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள், தானமாக வழங்கப்பட்டதில், மூன்று பேர் சாவின் விளிம்பில் இருந்து மீண்டனர்.கண் தானம் மூலம் இருவருக்கு பார்வை கிடைத்தது. கோவையில் நடந்த இந்த மனதை உருக்கும் சம்பவம், உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது.
கோவை மேட்டுப்பாளையம் சுண்டக்கட்டி பகுதியை சேர்ந்த, மருதன் - பாப்பாத்தி தம்பதியரின் மகன் தர்மராஜன், 23. "எலக்டிரிக்கல் அண்டு எலக்டிரானிக்ஸ்' இன்ஜினியரிங்கில் டிப்ளமோ முடித்த தர்மராஜனுக்கு, சமீபத்தில் லட்சுமி மில்ஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. வேலை கிடைத்த கையோடு, காதலி மலர்விழியை மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.மனைவி வீட்டில் "தலை தீபாவளி'யை கொண்டாடினார். கடந்த, 15ம் தேதி மாலை நண்பர் பானுசந்தருடன் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். காரமடை அருகே எதிரே வந்த லாரி மோதியதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். கோவை கே.ஜி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மூன்று அறுவை சிகிச்சைகளுக்குப் பின், நண்பர் பானுசந்தர் உயிர் பிழைத்துக் கொண்டார். தர்மராஜனின் தலையின் பின்பகுதியில் பலத்த அடிபட்டிருந்ததால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு மூளைச்சாவு ஏற்பட்டது. உயிர் பிரிந்து கொண்டிருந்ததை உணர்ந்த டாக்டர்கள், தர்மராஜனின் பெற்றோர், உறவினரிடம் தெரிவித்தனர்.உடல் உறுப்புகளை தானம் செய்தால், மூன்று பேரின் உயிரை காப்பாற்ற முடியும் என்பதையும், தெரிவித்தனர். சிறிது நேரம் கதறியழுதபடி இருந்த உறவினர்கள், இனி எதுவும் செய்வதற்கில்லை என்பதை உணர்ந்து, இறுதியில் உறுப்பு தானத்துக்கு சம்மதித்தனர்.
உயிர் பிரிவதற்குள் உடல் உறுப்புகளை அகற்ற வேண்டும் என்பதால், அதன் பின் மருத்துவமனையில் நடந்த, அத்தனை நிகழ்வுகளும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக நடந்தன.ஒரு குழுவினர் உடல் உறுப்புகளுக்காக பல்வேறு மருத்துவமனைகளில் பதிவு செய்து காத்திருப்போர் பட்டியலை உடனடியாக சேகரிக்க, மற்றொரு குழுவினர் விதிமுறையின்படி போலீசுக்கு தகவல் தெரிவித்து, உரிய படிவங்களில் உறவினர்களிடம் கையெழுத்து பெற்றனர். டாக்டர்கள் குழுவினரோ உறுப்புகளை அகற்றி, உடனடியாக மற்றொருவருக்கு பொருத்தும் பணிகளை தயார் செய்தனர்.
சீனியாரிட்டியின் அடிப்படையில், இரண்டு கிட்னியில் ஒன்று கே.ஜி., மருத்துவமனையில் "டயாலிசிஸ்' சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், மற்றொன்று கே.எம்.சி.எச்., மருத்துவமனை நோயாளிக்கும் பொருத்தப்பட்டது. வேலூர் சி.எம்.சி., மருத்துவனை நோயாளிக்கு ஈரல் பொருத்தப்பட்டது.கரு விழிகளில் ஒன்று கே.ஜி., மருத்துவமனையிலும், மற்றொன்று அரவிந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவருக்கு பொருத்தப்பட்டது. இறுதியில் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின், உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.தர்மராஜனின் பெற்றோர் கூறுகையில், ""எங்கள் மகனின் உயிர் பிரிந்தாலும், அதன் மூலம், மூன்று பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இருவருக்கு கண் பார்வை கிடைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. தர்மராஜன் என்ற பெயருக்கு ஏற்ப, தனது உடல் உறுப்புகளை தர்மம் செய்து, பிறரை வாழ வைத்து விட்டான். இதற்காகவே இந்த மண்ணில் பிறந்தானோ என்னவோ..,'' என்றனர் அழுதபடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக