ஞாயிறு, 18 நவம்பர், 2012

சாகித்ய அகாதெமி உறுப்பினராகத் தமிழ்ப் பல்கலை. பேராசிரியர் தேர்வு

சாகித்ய அகாதெமி உறுப்பினராகத் தமிழ்ப் பல்கலை. பேராசிரியர் தேர்வு

First Published : 18 November 2012 03:32 AM IST
சாகித்ய அகாதெமியின் மத்திய பொதுக்குழு உறுப்பினராகத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறை உதவிப் பேராசிரியர் இரா. காமராசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் வரும் ஜனவரி மாதம் முதல் 5 ஆண்டுகள் அப்பொறுப்பில் இருப்பார்.
தமிழ்ப் பல்கலைக்கழகப் பரிந்துரையின் பேரில், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் பிரதிநிதியாக சாகித்ய அகாதெமியின் மத்திய பொதுக்குழு உறுப்பினராக காமராசு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்ப் பல்கலை. பேராசிரியர் ஒருவர் இந்தப் பொறுப்பில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை என்கிறார் பல்கலைக்கழக பதிவாளர் ம. ஜகதீசன். இதற்காக காமராசுவை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ம. திருமலை பாராட்டினார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மேலவாசல் கிராமத்தைச் சேர்ந்த காமராசு, தமிழ் இலக்கியம், மெய்யியலில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களும் பெற்றுள்ளார்.
இவர் கவிதை, சிறுகதை, திறனாய்வு, இதழியல் உள்பட 12 நூல்களை எழுதியுள்ளார். ஐம்பதுக்கும் அதிகமான ஆய்வுக் கட்டுரைகளைக் கருத்தரங்குகளில் அளித்துள்ளார்.
இவரது படைப்புகளுக்காக திருப்பூர் தமிழ்ச் சங்கம், பாரத ஸ்டேட் வங்கி, நெய்வேலி புத்தகக் கண்காட்சி, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் ஆகிய அமைப்புகள் விருதுகள் அளித்துள்ளன.
மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் தமிழ்ப் பாடநூல்கள் உருவாக்கத்தில் பங்கேற்றவர். தாமரை, புதிய ஆராய்ச்சி ஆகிய இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் இவர் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக