செவ்வாய், 20 நவம்பர், 2012

பெண் யானைக்குக் கத்தியால் "சவரம்':இறைப்பற்றாளர்கள்அதிர்ச்சி

பெரியகோவில் பெண் யானைக்கு க் கத்தியால் "சவரம்':இம்சை அரக்கராக மாறிய பாகன்களால் பக்தர்கள் அதிர்ச்சி
 
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவில் வளாகத்தில், பெண் யானை வெள்ளையம்மாளின் உடல் முழுவதையும், மனிதர்கள் முகம் வழிக்கும் சவரக்கத்தியால், பாகன்கள் நேற்று, "சவரம்' செய்து, இம்சை செய்ததை பார்த்து, பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.தஞ்சை பெரியகோவிலுக்கு, வெள்ளையம்மாள் என்ற, 10 வயது பெண் யானை குட்டியை, 52 ஆண்டுகளுக்கு முன், நடிகர் சிவாஜி கணேசன் பரிசாக கொடுத்தார். தற்போது யானைக்கு, 62 வயது ஆகிறது. யானை தற்போது, 4,520 கிலோ எடை உள்ளது. தினமும் அரிசி கஞ்சி, 200 கிலோ பச்சை புல், தென்னைமட்டை, பைனாப்பிள் இலை ஆகியவை உணவாக தரப்படுகிறது.
பெரியகோவில் வளாகத்தில், இரண்டாவது கோபுர நுழைவாயில் அருகே பெண் யானை வெள்ளையம்மாள், பக்தர்கள் தரிசனத்துக்காக தினமும் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் அங்கு நிறுத்தப்பட்ட வெள்ளையம்மாள் மீது ஏறிய பாகன்கள், அதன் உடல் முழுவதும் மனிதர்களின் முகம் வழிக்கும் சவரக்கத்தியால், "வறட் வறட்' என, மாறி, மாறி மழித்துக்கொண்டிருந்தனர். உச்சக்கட்டமாக முதுகு மீது ஏறி ஒருவர் அமர்ந்து, "கைவரிசை'யை காட்டினார்.

சவரக்கத்தியால், ஈரம் சிறிதும் இல்லாமல், வறட்சியான யானையின் தடித்த தோல் பாகங்களான முதுகு, கழுத்து, அடி வயிறு பகுதிகளில் சரமாரியாக இழுத்தனர். இதனால், யானை வலியால் துடித்து, வேதனையில் துவண்டு, பிளிறியது. அங்கு பணியிலிருந்த இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்களும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால், இந்த காட்சியை பார்த்த பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்து, பாகன்களிடம் கேள்வி எழுப்பினர்.அவர்களோ, "யானையை குளிப்பாட்ட வசதியாக சவரம் செய்கிறோம்; இதை எல்லாம் கேட்க நீங்கள் யார்? உங்கள் வேலையை பார்த்துட்டு போங்க' என,ஒருமையில் பேசி, பாகன்களும், இந்துசமய அறநிலையத்துறை பணியாளர்களும் அடிக்காத குறையாக, தட்டிக்கேட்டவர்களை விரட்டியடித்தனர்.

தகவலறிந்ததும், கால்நடை பெருமருத்துவமனை உதவி இயக்குனர் லூர்துசாமி, கோவில் நிர்வாக அலுவலர் அரவிந்தனை தொடர்பு கொண்டு, பாகன்களின் விதிமுறை மீறிய செயல்பாட்டை கடுமையாக கண்டித்து, "டோஸ்' விட்டார்."இனிமேல் இதுபோன்ற சம்பவங்களை அனுமதிக்க முடியாது, அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுங்கள்' என்றும், அறிவுறுத்தினார்.

உதவி இயக்குனர் லூர்துசாமி கூறியதாவது:தஞ்சை பெரியகோவில் யானை வெள்ளையம்மாளுக்கு, 62 வயதாகிறது. தினமும் யானையின் உடல் நலம் குறித்து காலை, 7:15 மணிக்கே பரிசோதித்து, என் நேரடி கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கிறேன்.யானையின் உடலில், சிகிச்சைக்கு அவசியப்பட்டால் மட்டுமே முடிகளை அகற்ற கத்தியை பயன்படுத்தலாம். மற்றபடி கயிறு, தேங்காய் நார்களை கொண்டு தான் குளிப்பாட்ட வேண்டும் என, விதிமுறையை தெளிவாக, கோவில் அலுவலர்களுக்கும், பாகன்களுக்கும் தெரிவித்துள்ளேன்.இதையும் மீறி, யானையின் உடலில் சவரக்கத்தியால் பாகன்கள் வழித்திருப்பது தவறு. இதுபோன்ற செயலால், நான்குபுறமும் எப்போதும் கவனிக்கும் திறன் கொண்ட யானை விபரீதமாக நடக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற செயல்களை இனியும் நான் அனுமதிக்க மாட்டேன்.இவ்வாறு அவர் கூறினார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக