ஞாயிறு, 18 நவம்பர், 2012

இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!!

இயற்கையே கோயில்! மரங்களே தெய்வம்!!

First Published : 17 November 2012 05:17 PM IST
திருச்சி நகரிலிருந்து சுமார் 3 கிமீ தொலைவில் குழுமணி சாலையில் உள்ளது மருதண்டாக்குறிச்சி.
இங்குதான் "பூமித்தாய் தோட்டம்' அமைந்திருக்கிறது. "சாதி, மத, இன, மொழி, பால் வேறுபாடுகளைக் களைந்து மனிதநேயத்துடன், இயற்கை நேயத்துடன் வாருங்கள்' என நுழைவாயில் அழைக்கிறது.
 "ஜெபிக்கும் உதடுகளைவிட
 சேவை செய்யும் கரங்களையே
 கடவுளுக்குப் பிடிக்கும்'
 "சாதி மதங்களை மறுப்போம்
 நல்ல ஜாதி மரங்களை வளர்ப்போம்'
"ஆடம்பர மத விழாக்களை தவிர்ப்போம்
நிறைய மரம்நடும் விழாக்களை செய்வோம்'
 - இவற்றுடன் வேதாத்ரி மகரிஷி, அன்னை தெரசா போன்றோரின் பொன்மொழிகளும் உண்டு.
  தோட்டத்தின் நடுவே கேரள பாணி கோயில் போன்று ஒரு சிறிய கட்டடம். உள்ளே சுவரில் இத்தோட்டத்தின் தத்துவம், கீழே இயற்கை குறித்த புத்தகங்கள் சில. இங்கு வரும் நண்பர்கள் எல்லோரும் எடுத்துக் கொள்வதற்கான உறுதிமொழி இது:
"கண் கண்ட தெய்வமாய்
 கருணை நிறை கொண்டவளாய்
 கண்ணின் இமை போல்
 எங்களைக் காத்தருளும்
 பூமித்தாயே!
 இனி உம்மைக் காப்பது
 எங்கள் அனைவரின் கடமை
 அதை நிச்சயம் செய்வோம்
 என உறுதி கூறுகிறோம்'.
 ஏறத்தாழ இதுதான் கருவறை. சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று விரும்புபவர்களிடம் தண்ணீர் கொடுத்து, தோட்டத்திலுள்ள மரங்களுக்கு ஊற்றச் சொல்கிறார், ஆர். சந்தானம். எக்ஸ்னோரா அமைப்பில் பொறுப்பில் இருக்கும் இவர்தான் இந்தத் தோட்டத்தின் உரிமையாளர். வருகைதரும் எல்லோருக்கும் பிரசாதம் உண்டு- அது சில மரங்கள், செடிகளின் விதைகளாக!
"பூமித்தாய் தோட்டம்' குறித்து விளக்குகிறார் சந்தானம்:
"2009 இறுதியில் இந்த இடத்தை வாங்கி, இப்படியொரு தோட்டத்தை அமைக்கத் தொடங்கிய நாளில், "பூமி பூஜை போட்டு தேங்காய் உடைக்க வேண்டும்' என்றார்கள். நான் சுற்றிலும் 108 தென்னை மரக்கன்றுகளை நட்டுவைத்தேன்.
உலக நாடுகளுக்கெல்லாம் செல்லும்போது, சாதி-மத-இன-மொழி வேறுபாடுகள் அகன்றுவிடுகின்றன.
மனிதகுலம் என்பதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லை. எனவே, இந்த மனித குலத்தை தொடர்ந்து உயிர்ப்போடு இருக்கச் செய்ய இயற்கைச் சூழல் அவசியம்.
பிரபலங்கள் பலரும் இங்கு வந்து கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தத் தோட்டத்தை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.
கல்லூரிகளில் இருந்து வரும் எக்ஸ்னோரா, நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சிலுவைச் சங்க மாணவர்களுக்கு, இயற்கைப் பாதுகாப்பின் அவசியம் குறித்து விளக்கிக் கூறிவருகிறேன்.
"உயிரைக் காக்க ரத்த வங்கி; உலகைக் காக்க மரவங்கி' என்ற முழக்கத்துடன், இலவசமாக மரக்கன்றுகளை வழங்கும் நாற்றங்கால் பண்ணை ஒன்றையும் உருவாக்கும் திட்டமிருக்கிறது' என்கிறார் சந்தானம்.
கருவறை போன்ற அமைப்புக்கு பின்புறம் கழிவறை அமைத்திருக்கிறார் சந்தானம். "உடல் நலன் பேண கழிவறை மிகவும் அவசியம். எனவே, அதை முகம் சுழிக்கும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகத்தான் முக்கியத்துவம் கொடுத்து கருவறைக்கு பின்புறமே அமைத்திருக்கிறேன்'' என்கிறார் சந்தானம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக