வியாழன், 12 நவம்பர், 2009

தமிழ் மக்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் இந்தியா நேரடியாக தொடர்பு

எழுதியவர்பகலவன் on November 11, 2009
பிரிவு: முதன்மைச்செய்திகள்

sonia_rajapakseதமிழ் மக்களுக்கு எதிரான படை நடவடிக்கைகளில் இந்தியா நேரடியாக தொடர்பு பட்டமைக்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கரையோர காவல் படைப்பிரிவிற்கு சொந்தமான இரண்டு யுத்தக் கப்பல்களை இந்திய அரசாங்கம் ஸ்ரீலங்கா கடற்படையின் பாவனைக்கு என வழங்கியுள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கப்பல்கள் இந்தியாவின் யுத்த ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் தற்காலிகமாக ஸ்ரீலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்டிருந்ததாகவும் தற்போது அந்த கப்பல்களை மீள வழங்குமாறு இந்திய கரையோர காவல் பிரிவு கோரியுள்ளதாகவும் இந்திய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

வரகா மற்றும் விக்ரகா எனும் இரண்டு கப்பல்களும் இந்தியாவிற்கு சொந்தமானவை என்றும் அவை தற்காலிக பயன்பாட்டிற்காகவே ஸ்ரீலங்கா கடற்படைக்கு வழங்கப்பட்டதாகவும் தற்போது யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் அவற்றை மீளவும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம் ஒன்றும் இந்திய தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

உலங்கு வானூர்திகள் தரையிறங்கும் தளம் உட்பட அதி நவீன போர் தளபாடங்கள் பொருத்தப்பட்ட இந்த கப்பல்கள் வன்னியின் இறுதி யுத்தம் நடைபெற்ற வேளை கரையோரங்களில் தஞ்சமடைந்த அப்பாவி மக்கள் மீது கடற்படை மேற்கொண்ட தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு யுத்த உபகரண உதவிகளை வழங்கவில்லை என்று கூறி வரும் இந்திய அரசாங்கம் இந்த கப்பல்கள் குறித்து எவ்வாறான விளக்கத்தை முன்வைக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

(Visited 178 times, 178 visits today)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக